​உடலுக்கு வலுவூட்டும் கொடிப்பசலை

​உடலுக்கு வலுவூட்டும் கொடிப்பசலை!

முன்பு, ஒவ்வொரு வீட்டின் வேலியிலும் படர்ந்திருந்த கீரை, பசலை. பசலைக்கீரையில் முக்கியமான வகை கொடிப்பசலை. கொடிப்பசலையை  கொடிவசலை, கொடிப்பசரை, கொடியலை, கொடிவயலக்கீரை, கொடிப்பயலை என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். கொடியாகப் படரும் இந்தக் கீரையில் வெள்ளை, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளன.
பசலைக்கீரையைப் பருப்புச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னைக்குப் கொடிப்பசலை அருமையான மருந்து.
கொடிப்பசலைக்கீரையைச் சமையலில் சேர்த்துவந்தால், உடல் வெப்பம் நீங்கும்; அரிப்புகளைக் குணப்படுத்தும்; காமப்பெருக்கியாகச் செயல்படும்.
இலையை நசுக்கி, தலையில்வைத்துக் கட்டினால், உடல் வெப்பம் தணியும்.
இதன் இலைச்சாற்றுடன்  தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கட்டு நீங்கி, எளிதாகச் சிறுநீர் வெளியேறும்.
இந்தக் கீரையுடன் கத்திரி இலையைச் சம அளவு எடுத்துக் கலந்து, குடிநீராகச்செய்து, அதில் வெங்காரப் பற்பம் எனும் சித்த மருந்தை 60-120 மி.கி சேர்த்து, காலை, மாலை இரண்டு வேளையும் குடித்துவந்தால், நீரடைப்பு நோய் நீங்கும்.
கொடிப்பசலைக் கீரையில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
குறைந்த கொழுப்புச்சத்தும், குறைந்த அளவு கலோரியும் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும். ரத்தசோகை, எலும்பு அடர்த்திக் குறைவுப் பிரச்னைகள் நீங்கும்.
இதன் இலையைக் கறியாகச் சமைத்து, தினந்தோறும் உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஆற்றலும் வலிமையும் உண்டாகும்.
#doctorvikatan #டாக்டர்விகடன்

Leave a Reply