வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி

கோடை காலம் ஆரம்பித்தாலே வீட்டுத் தோட்டப் பிரியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் தோன்றும். வெப்ப அளவு, அனல் காற்று, குறைந்து வரும் கோடை மழை, தண்ணீர் பற்றாக்குறை, கோடை விடுமுறையில் குடும்பச் சுற்றுலா மற்றும் விசேஷங்கள் என்று நீண்டப் பட்டியல் இருக்கும்.

இவற்றை சமாளிப்பதற்குள் பாடுபட்டு சேகரித்த அரிய வகை செடிகளை எவ்வளவு இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். சில முன்னேற்பாடுகள், செயல்முறைகள் கோடையை எளிதாக எதிர் கொள்ள உதவும் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், அவற்றை விரிவாக விளக்குகிறார்.

வறட்சியை தாங்கி வளரும் செடிகளை தவிர மற்றவற்றை கோடை காலத்தில் தவிர்த்தல் வேண்டும்.

செடிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஒரு வழி. செடிகள் அனைத்தையும் நெருக்கமாக நிழல் பகுதி அல்லது மர நிழலில் வைத்துப் பராமரித்தால் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.

மாடியில் தொட்டிகள் வைத்து பராமரித்தால், சுவரிலிருந்து 1 இன்ச் முதல் 1 அடி வரை தள்ளியே இருக்க வேண்டும். தரைப்பகுதிக்கும் தொட்டிகளுக்கும் இடைவெளியிருந்தாலும் சூரிய ஒளியின் வெம்மை சற்று குறைவாக இருக்கும்.

நிழல் வலை அமைத்து அதன் கீழ் செடிகளை வைத்து பராமரிக்கலாம்.
நிழல் வலைகள் 25%, 50%, 75% என்ற அளவுகளில் சூரிய ஒளியை குறைத்துத் தருவதால், வெப்பத்திலிருந்து காப்பாற்றப்படுவதோடு காற்றினால் ஈரப்பதம் அடித்துச் செல்லப்படுவதும் தடுக்கப்பட்டு, செடிகள் பசுமையாக இருக்கும்.நீர் தேவையும் குறையும்.

வளர்க்க உபயோகப்படுத்தும் மண் அதிக அளவில் தென்னை நார்க் கழிவு (coir peat), தென்னை மட்டை( Coir husk), காய்ந்த இலைச்சருகுகள் போன்ற தாவரக் கழிவுகளைஉடையதாக இருந்தால், நீரை அதிகம் உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும்.பின் அதுவே உரமாக மாறும்.

தாவர மூடாக்கு (Mulching) இடுவதால் தொட்டி அல்லது மண்ணிலுள்ள ஈரப்பதம் காக்கப்படுவதோடு வெப்பமடைதலும் தடுக்கப்படும்.

தண்ணீர் ஊற்றுவதை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் செய்ய வேண்டும். மதிய நேரங்களில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். மாலை நேரம் சிறந்தது.

தரைமட்டத்துக்குக் கீழ் நீரை தரும் இம்முறை (subsoil irrigation) விவசாயிகளிடம் கூட பிரபலமாகி வருகிறது. வேர்களின் அருகில் நீரை சொட்டுநீர் மூலம் தருவதே இது. பிவிசி குழாய் அல்லது பெட் பாட்டில்களை பெரிய செடிகளின் அருகில் பதித்து அதன் வழியேயும் நீரை ஊற்றலாம். இம்முறையில் குறைந்த நீரை அதிக செடிகளுக்கு தர முடியும். தரை மட்டத்துக்குக் கீழ் நீரைத் தருவதால் ஆவியாதல், களைச் செடிகள் குறைகின்றன.

ரசாயன உரங்களை இடும் போது நீர் தேவை அதிகமிருக்கும். அதனால், ரசாயன உரங்களை தவிர்க்கவேண்டும்.

2 அல்லது 3 நாட்கள் சுற்றுலா செல்லும்போது விளக்குத் திரி அல்லது சணல் கயிறு மூலம் நீரூற்றுதல் (Wick irrigation) பயனுள்ளதாக இருக்கும். மிக எளிய இம்முறையில் ஒரு வாளியில் நீரை நிரப்பி அதனுள் சணல்கயிறுகளை நன்கு நனைத்து விட்டு, மறுமுனையை  தொட்டியின் மேல் வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தொட்டி ஈரமடையும். 4 அல்லது 5 நாட்களுக்கு மேல் செல்லும் போது வாட்டர் டைமர் (Water Timer) மிக மிக உபயோகமாக இருக்கும்.

நன்றி: தினகரன்

Leave a Reply