மாடித் தோட்டம்

‘ஆர்வமும் உழைப்பும் இருந்தால், அடுக்குமாடி வீடுகளில்கூட அழகாக விவசாயம் செய்ய முடியும்’ என்பதை சமீபகாலமாக நகரவாசிகள் பலரும் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி.

”திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலரா வேலை செய்றேன். எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனாலதான், வீட்டுலயே 1,500 சதுர அடியில தோட்டம் போட்டு இயற்கை முறையில, தக்காளி, கத்திரி, மிளகாய், பொன்னாங்கண்ணி, தண்டுகீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி…னு சாகுபடி செய்றேன். மாடியில தோட்டம் அமைக்கறதுங்குறது, இப்போ ரொம்ப சுலபமான விஷயமாகிடுச்சு. இதுக்காகவே கடைகள்ல தனியா விக்கிற பைகளை வாங்கி, மண், மண்புழு உரத்தைக் கலந்து கொட்டி, செடிகளை வளக்க முடியும். தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, இந்தச் செடிகளை கவனிச்சா போதும். காய்கறி வாங்கறதுக்காக பையைத் தூக்கிட்டு அலையத் தேவையில்ல. செலவு, அலைச்சல் குறைவுங்கிறதைவிட விஷமில்லாத காய்கறிகள் கிடைக்கும் கறதுதான் முக்கியமான விஷயம்.

திண்டுக்கல் மாதிரி பகுதிகள்ல கோடையில வெயில் அதிகமா இருக்கும். அதனால, பசுமைக்குடில் அமைச்சு முள்ளங்கி, இஞ்சி விளைய வெக்கிறேன். மாடித் தோட்டத்துக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். 15 நாளைக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி மண்புழு உரம் தூவுவேன். ஒரு சாகுபடி முடிஞ்சதும், அடுத்த முறை அந்தப் பையில அதே பயிரைப் போடறதில்ல. வேற பயிரைத்தான் நடுவேன். அவ்வளவுதான் பராமரிப்பு. ஆனா, மாடித் தோட்டம் கொடுக்குற பலன் அளவில்லாதது. எங்க தேவைக்குப் போக மீதி காய்களை நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம். எங்க காய்கறிகளை சாப்பிட்ட நண்பர்கள் சிலரும் அவங்க வீட்டுல தோட்டம் போட ஏற்பாடு செய்துட்டு இருக்காங்க” என்ற சின்னசாமி நிறைவாக,

”எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தோட்டத்துக்குள்ள வந்துட்டாலே மன அழுத்தம் சுத்தமா குறைஞ்சுடும். சொட்டுநீர் இருந்தாலும், என்னோட பொண்ணு தினமும் அவ கையாலயே செடிகளுக்கு தண்ணி ஊத்தி வளக்குறதுல ரொம்ப சந்தோஷப் படுவா. மொத்தத்துல இந்தத் தோட்டம்… எங்க குடும்பத்தினரோட உடலுக்கு மட்டுமில்ல… மனசுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்திட்டிருக்கு” என்று ஆத்மார்த்தமாகச் சொன்னார், செடிகளை வாஞ்சையாக தடவிக் கொடுத்தபடி!

தொடர்புக்கு, சின்னசாமி, செல்போன்: 97860-59130.

Leave a Reply