செலரி

செலரி:-

———

கொத்தமல்லிக்கு நெருங்கின சொந்தம் என்றே சொல்லலாம் செலரியை. பார்ப்பதற்கு பெரிய சைஸ் கொத்தமல்லியைப் போலவே தெரிகிற இது, மணத்தில் அதை மிஞ்சி விடும். செலரி இலைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. செலரியும் நம்மூர் கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் போல இணை பிரியாதவை. சூப் முதல் ஃப்ரைடு ரைஸ், மஞ்சூரியன் வரை பலதிலும் இவற்றின் கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது.
“செலரியில் கலோரிகள் குறைவு. நார்ச்சத்து அதிகம்.  இது செரிமானப் பாதையில் உள்ள தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு, பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதால் கொஞ்சம் சாப்பிட்டாலே நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். எனவே, எடைக் குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் செலரியை எப்போதும் 

மெமரியில் வைத்திருக்க வேண்டும்.
செலரியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மிக அதிகம். அது அழற்சி நோய்களுக்கு எதிராக செயல்பட்டு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் காக்கிறது.
செலரியில் 95 சதவிகிதம் தண்ணீர் சத்து உள்ளது. எனவே உடலில்  தண்ணீர் வற்றிப் போகாமல் காக்கிறது. குறிப்பாக வெயில் நாட்களில் செலரி அதிகம் சேர்த்த சாலட் சாப்பிடுவதன் மூலம் நீரிழப்பை சரி செய்யலாம்.
அமிலத் தன்மை மிகக்குறைவாக இருப்பதால் செலரி, நெஞ்சுஎரிச்சலுக்கு மிக நல்லது என்கிறது ஒரு ஆய்வு. சாப்பிட்ட உணவுகளில் உள்ள அமிலத் தன்மையானது எதுக்களித்துக் கொண்டு மேலெழுந்து வருகிற பிரச்னை உள்ளவர்களுக்கு அமிலத்தன்மை குறைவான உணவுகள் பரிந்துரைக்கப்படும். அவற்றில் செலரிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.
நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால், செலரி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி விடும். செலரியில் உள்ள ஒருவித கெமிக்கலான Phthalide என்பது கெட்ட கொழுப்பை 7 சதவிகித அளவுக்கும், ரத்த அழுத்தத்தை 14 சதவிகித அளவுக்கும் குறைப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தவிர இந்த ரசாயனம், ரத்தத்தில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை குறைப்பதால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் முழுவதற்கும் சீரான ரத்த ஓட்டம்  பாயும். நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
புற்றுநோய் அபாயத்திலிருந்து காப்பதாகச் சொல்லப்படுகிற ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஃப்ளேவனாயிட் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் ஆகியவை செலரியில் அதிகம் உள்ளன. அதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.
எப்படித் தேர்வு செய்வது?
செலரியின் தண்டுகள் ஃப்ரெஷ்ஷாகவும் உறுதியாகவும் தொய்வு இன்றியும் இருக்க வேண்டும். இலைகள் இளம் பச்சை முதல் அடர் பச்சை வரை இருக்கலாம். மஞ்சள் அல்லது பழுப்பு நிறப்புள்ளிகள் இருக்கக்கூடாது.
எப்படியெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்?
செலரியை துண்டுகளாக வெட்டி, எந்தவிதமான சாலட் உடனும் கலந்து சாப்பிடலாம்.
செலரி தண்டுகளை பீநட் பட்டர் எனப்படுகிற வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கேரட் ஜூஸ் உடன் செலரி துண்டுகள் சேர்த்துக் குடிக்கலாம்.
சூப், ஸ்டியூ,பொரியல் என எதை செய்தாலும் மேலே செலரியை நறுக்கித் தூவி சாப்பிடலாம்.
எப்படி சமைப்பது?
செலரியின் அடிப்பகுதியை வெட்டி விட்டு, தண்டு மற்றும் இலைகளை குழாயடித் தண்ணீரில் கழுவவும். விருப்பமான அளவில் வெட்டிப் பயன்படுத்தலாம். கூடியவரையில் இரண்டு நாட்களுக்குள் செலரியை உபயோகித்து விடுவது சிறந்தது. செலரியை திறந்த வெளியில் காற்றோட்டமாக வைப்பது கூடாது. அப்படி வைத்தால் அதிலுள்ள ஈரப்பதம் வற்றி, வதங்கி விடும். வதங்கிய செலரியின் மீது லேசாக தண்ணீர் தெளித்து, ஃப்ரிட்ஜினுள் வைத்து எடுத்தால் பழையபடி புதிதாக மாறிவிடும்.
அதிகம் கூடாது! செலரி நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எடுக்கக்கூடாது. செலரியில் உப்பின் அளவு சற்றே அதிகம் என்பதால், அதிக உப்பு பிரச்னை உள்ளவர்கள் அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எடையைக் குறைக்கிற எண்ணத்தில் வெறும் செலரியை மட்டுமே எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படலாம். 
அதிக நார்ச்சத்து  வயிற்று உப்புசம், நார்ச்சத்து மற்றும் வாயுத்தொல்லைகளை ஏற்படுத்தும். செலரி விதைகளில் உள்ள  அத்தியாவசிய எண்ணெய்கள், தாய்ப்பால் சுரப்பைத் தூண்டி, நரம்பு மண்டல இயக்கத்தை சீராக்கக்கூடியவை. தலைவலியையும் விரட்டும் சக்தி கொண்டவை.
Scientific classification:-

—————————-

Kingdom: Plantae

(unranked): Angiosperms

(unranked): Eudicots

(unranked): Asterids

Order: Apiales

Family: Apiaceae

Genus: Apium

Species: A. graveolens

Variety: dulce

(Mill.) Pers.
Synonyms[1]:-

—————–

Apium graveolens subsp. dulce (Mill.) Schübl. & G. Martens

Leave a Reply