இளநீரை ஐஸ் வடிவில் பதப்படுத்தினால் 12 மாதங்கள் கெடாது

யற்கை உணவு’ குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வரும் வேளையில், அதை செயல்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக ,சென்னை நெசப்பாக்கம் வணிக வர்த்தக மையத்தில்புட் ப்ரோ’ எனப்படும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கண்காட்சி, 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கேற்ற தரத்தில் பதப்படுத்தி, எட்டு முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரை உபயோகப்படுத்துதல் போன்ற சிறப்பான தொழில்நுட்பங்கள் இருந்தன.

மேலும், வீட்டு உபயோகம் மற்றும் பெரிய அளவில் பயன்படுத்தக்கூடிய காய்கறி வெட்டுதல், ஐஸ்கிரீம் தயாரித்தல், முறுக்கு பிழிதல், காபி மெஷின், குளிர் சாதனங்கள், முட்டை மற்றும் பால் பதப்படுத்துதல் மற்றும் நவீன பேக்கிங் மெஷின்கள் அணிவகுத்திருந்தன.

‘இளநீரைக் குளிரூட்டி ஐஸ் வடிவில் பதப்படுத்தினால் 12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அதை நீர் வடிவிற்கு கொண்டு வரும்போது 7 நாட்கள் வரை அருந்தலாம்’ போன்ற புதிய தொழில்நுட்பங்களும் பார்வையாளர்களை அசத்துவதாக இருந்தன.

கொரிய முறை தொழில்நுட்பமான ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ பற்றிய செயல் விளக்கத்தை ‘மார்னிங் ஃபார்மை’ சேர்ந்தவர் சொல்லும்போது, ”இந்த முறையில் அதிக வெப்பத்தில் வறுக்கப்பட்ட குறைந்த எடை உள்ள களிமண் உருண்டைகளை ஆதரவாகக் கொண்டு, மண் இல்லாமல் முழுக்க முழுக்க நீரிலேயே செடிகளை வளர்க்க முடியும். ரசாயனக் கலப்படம் இல்லாமல் ஆர்கானிக் உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம்.

மருந்தை நீரில் கலந்துவிட்டு, அதில் செடியின் வேர் படும்படி வைக்க வேண்டும். நீர் சுழற்சி முறையில் அடியில் ஓடிக்கொண்டு இருக்கும். வெப்பம், காற்று, ஈரப்பதம் போன்றவை சூழலுக்கு ஏற்ப தானாகவே மாறிக்கொள்ளும். இதில் பெரிதளவு இடத்தை மிச்சப்படுத்தலாம். ஆயிரம் செடிகளுக்கு சுமார் ஒன்றரை லட்சம் கட்டுமான செலவு ஆகும். இம்முறையில், வெண்டைக்காய், வெள்ளரி, அவரை போன்ற பல காய்கறிகளை விளைவிக்கலாம். விவசாயிகளுக்கு மட்டுமல்லாது வீட்டுத் தோட்டத்திற்கும் இது ஏற்றது” என தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியில் பல்வேறு உணவு செய்முறை, பதப்படுத்துதல் முறைகள் பற்றிய ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன. உணவு, சமையல் தொடர்பாக தொழில் முனைவோருக்கு இந்த கண்காட்சி ஒரு நல்ல வழிகாட்டியாக அமைந்திருந்தது.

விகடன்

Leave a Reply