இது இயற்கை இல்லம்!

பெரும்பாலும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை சூழ் இடங்களுக்கும், பண்ணைவீடுகளுக்கும் செல்வோம். மழைக்காலங்களில் படும் அவஸ்தைகளை சொல்ல வேண்டியதில்லை. ஆஷா-ஹரி தம்பதியோ எதிலிருந்தும் தப்பிக்க வேண்டியதில்லை. ஆண்டு முழுவதுமே இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் வீட்டிலேயே எல்லா பருவங்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்!
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஆஷா-ஹரி தம்பதி சுற்றுச்சூழல் காதலர்கள். சுற்றுச்சூழலின் மீதான தங்கள் பேரன்பை வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வருகின்றனர். அவர்களது திருமணத்துக்கு வந்த விருந்தினர் அனைவருமே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். வாழ்த்த வந்தவர்களுக்கு பாரம்பரிய பாயசமும் பழங்களுமே பரிமாறப்பட்டன.தங்கள் வீட்டை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கட்ட விரும்பிய இவர்களின் கனவு ஒருநாள் நினைவாகியது. ஆம்… தங்கள் கனவு இல்லத்துக்கு ‘நனவு’ என்று பெயரிட்டுள்ளனர். 34 சென்ட் பரப்பில், 960 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் ஹரி, ஆஷாவுடன்,
15 தவளைகள், 80 பறவைகள், 150 வண்ணத்துப்பூச்சிகளும் வசிக்கின்றன.

இவர்களின் வீடு மிகவும் வித்தியாசமானது. மண்ணால் கட்டிய சுவர்… இதனால் அடைந்த பயன்கள் ஏராளம். இந்தச் சுவர் மூச்சு விடுகிறதாம்! ஆம்… பகலில், சூரியனின் வெப்பம் இந்தச் சுவரின் வழியே வீட்டினுள் ஊடுருவுகிறது. மாலை 6 மணிக்குப் பிறகு வீடு கதகதப்பாக மாறுகிறது. இந்த கதகதப்பிலேயே வீடு இரவு11 மணி வரை இருக்கும். பிறகு, குளிர்ச்சி வீட்டினுள் வரும். இரவு முழுவதும் குளிர் காற்றால் வீடுநிரம்பும். இதனால், இவர்களுக்கு மின்விசிறி தேவைப்படுவதில்லை. குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படுகிறது. இயற்கை வெளிச்சம் வீட்டினுள் வரும் வகையில் வீடு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாளுக்குத் தேவையான காய்கனிகளை தங்கள் தோட்டத்திலேயே புதிதாக பறித்து உபயோகிப்பதால், குளிர்சாதனப் பெட்டிக்கும் அவசியமே இல்லை. குளிர்சாதனப் பெட்டிக்குப் பதிலாக, வீட்டில் ஒரு குழி தோண்டி அதில் ஒரு மண்பானையை வைத்து சுற்றி ஈரமண் நிரப்பி வைத்திருக்கிறார்கள். அதில் வைக்கப்படும் பொருள் பல நாட்களுக்குக் கெடாமல் உள்ளது. வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சோலார் மற்றும் பயோகாஸ் மூலமாகவே பெறுகின்றனர். வீட்டிலுள்ள குப்பைகளையே பயோகாஸ் மின்சாரம் தயாரிக்கபயன்படுத்துகின்றனர்.

‘‘நாங்கள் ஆதிவாசி வாழ்க்கையை வாழவில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்கிறோம். எங்கள் வீட்டில் டி.வி.,ஃப்ரிட்ஜ் என சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. ஆனால், மின்சாரப் பயன்பாட்டை நாங்கள் பார்த்து பார்த்து செய்கிறோம்’’ என்கின்ற ஹரி-ஆஷா தம்பதியின் வீடு, இவர்களாலேயே உருவாக்கப்பட்ட ஒரு குட்டிக்
காட்டின் நடுவே உள்ளது! இவர்களுடைய இந்த வாழ்க்கை முறை நல்ல பலனளித்திருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக ஹரி- ஆஷா தம்பதியை எந்த நோய்களும் நெருங்கியதில்லை. இவர்களைப் போல இயற்கையோடு இயைந்து வாழ யாரெல்லாம் தயார்?

பியானோ வாசிப்பேன்…
கால்பந்து விளையாடுவேன்…
வயரில் கைவினைப்பொருட்கள் பின்னுவேன்..! – சொல்கிறார் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்

துறுதுறு கண்கள், அமைதியான பேச்சு, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு. இதுதான் அபிஷேகா ஷானான். பன்னிரெண்டு வயதாகும் அபிஷேகா, இப்போது ஸ்குவாஷ் விளையாட்டில் புது முகம். கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இவர்தான் சாம்பியன். ‘‘அப்பா கால்பந்து பயிற்சியாளர். ஐ லீக் என்ற கால்பந்து குழுவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அம்மா உயரம் தாண்டுதலில் வீராங்கனை. இப்போது பயிற்சி எடுப்பதில்லை. அக்காவும் கால்பந்து வீராங்கனை. அவள் தமிழ்நாடு அளவிலான கால்பந்து போட்டியில்பங்கேற்று வருகிறாள்.அப்போது எனக்கு ஆறு வயது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும், இந்தியன் ஸ்குவாஷ் அகடமி ஏற்பாடு செய்திருந்த கேம்ப்புக்கு அழைப்பு வந்தது. இருவரும் அதில் கலந்து கொள்ள சென்றனர். உடன் நானும். வேறு வேறு துறைகளை சேர்ந்த இருவருக்கும் ஸ்குவாஷ் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. தவிர என்னையும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் இருந்தது. ஸ்குவாஷ் அவர்களுக்கு பிடித்திருந்ததால் என்னை அதில் சேர்த்து விட்டார்கள். இப்படித்தான் என் பயணம் தொடங்கியது…’’ என்று சொல்லும் அபிஷேகா, அதன் பின் அந்த விளையாட்டை சீரியசாக விளையாட ஆரம்பித்துள்ளார்.

‘‘பயிற்சி எடுக்க எடுக்க ஸ்குவாஷ் மீது எனக்கும் ஆசை வர ஆரம்பித்தது. முழுமூச்சுடன் கற்றுக் கொண்டு போட்டிகளில் விளையாடும் அளவுக்கு வளர்ந்தேன். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிதான் எனக்கான அடையாளத்தை கொடுத்தது. அதில் நான் சாம்பியன் பட்டம் பெற்றேன். அந்த போட்டி எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தது. என்னாலும் ஜெயிக்க முடியும் என்பதை நானே உணர்ந்தேன். இந்த உத்வேகத்துடன் இந்தாண்டு போட்டியை எதிர்கொண்டதால் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது…’’ என்று சொன்னவர் ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியிலும் பங்கு பெற்றுள்ளார்.
‘‘கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்றேன். அதில் இந்தியா சார்பாக நான் விளையாடினேன். சர்வதேச அளவில் பல நாடுகள் பங்கு பெற்றன. என்னால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை. ஒன்பதாம் இடம்தான் கிடைத்தது. சர்வதேச அளவில் நாம் எந்த ரேங்கில் இருக்கிறோம் என்பதை கணிக்க இந்த இடமே உதவும். இப்போது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய ஜூனியர் போட்டியில் வெற்றி பெற முழுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நிச்சயம் சாம்பியன் பட்டம் பெறுவேன்…’’ நம்பிக்கையுடன் சொல்லும் அபிஷேகா கடுமையான பயிற்சிக்கு நடுவில் படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.‘‘தினமும் காலையும் மாலையுமாக சேர்த்து ஐந்து மணி நேரம் பயிற்சி எடுக்கிறேன். பள்ளி முடிந்ததும் அகடமி. பயிற்சிக்கு பின் வீடு, படிப்பு. ஒரு கண் ஸ்குவாஷ் என்றால் மறு கண் படிப்பு. குறிப்பாக அறிவியல் பாடம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்…’’ சிரிக்கும் அபிஷேகா, கால்பந்தும் விளையாடுவாராம்.

‘‘அப்பா, கால்பந்து பயிற்சியாளர், அக்காவும் கால் பந்து வீரர். எனவே அப்பாவின் அகடமிக்கு செல்லும்போது கால்பந்து பயிற்சியும் எடுப்பேன். எப்படி சரியாக குறி பார்த்து கோல் போட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டது அங்குதான். இந்த லாவகம், ஸ்குவாஷில் பயன்படுகிறது. குறிப்பாக எதிராளியை சமாளிக்கும் வித்தை. கால்பந்துடன் ஒப்பிடும்போது ஸ்குவாஷ் கொஞ்சம் கஷ்டமானது! இவை இரண்டும் தவிர ஸ்விம்மிங்கிலும் ஆர்வம் உண்டு. பாட்டு பாடுவேன். பியானோ வாசிப்பேன். பியானோ க்ளாஸும் செல்கிறேன். வயரில் கைவினைப்பொருட்கள் பின்ன ரொம்ப பிடிக்கும்.நானும் எல்லா பெண்களையும் போல்தான். எல்.கே.ஜி. முதல் இப்போதுவரை நானும் என் தோழியும் ஒன்றாகத்தான் படித்து வருகிறோம். அவள்தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். எங்குசென்றாலும் ஒன்றாக செல்வோம். இருப்போம். இது வரை ஸ்குவாஷ் போட்டி, ஒலிம்பிக்சில் இடம்பெறவில்லை. இந்த நிலை மாறும் என்றும் 2020ல் நிச்சயம் ஒலிம்பிக்சில் ஸ்குவாஷும் இடம்பெறும் என்றும் சொல்கிறார்கள். அப்படி இடம்பெறும் பட்சத்தில் இந்தியா சார்பாக அப்போது நான் விளையாட வேண்டும். அதுதான் என் கனவு, லட்சியம்…’’ என்கிறார் அபிஷேகா ஷானான்.

Leave a Reply