அன்று, தொழிலதிபர்… இன்று, இயற்கை விவசாயி!

ரொம்ப வருடமாக பஸ் பாடி கட்டும் பிசினஸில் இருக்கிறேன். ஆனாலும், எனக்கு விவசாயத்தின் மேல் மகிவும் ஆசை. விவசாயம் செய்வதற்கு யாரிடம் ஆலோசனை கேட்பது என்று தேடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் ‘ பசுமை விகடன்’ அறிமுகமானது. அதன் மூலமாக தெரிந்து கொண்ட விஷயத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்ததில், இப்போது நானே ஒரு ‘இயற்கை விவசாயியாக மாறி நிற்கிறேன் என்கிறார் தங்கராஜ்.
கரூருக்குப் பக்கத்தில் இருக்கும் குந்தானிப் பாளையம் கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலம் இருக்கு. தொழுவுரம், ஆட்டு எரு, குப்பைகளை போட்டு நிலத்தைத் தயார் செய்து, தென்னை, மிளகாய், வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர், கத்திரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய் என்று நடவு செய்தோம். எல்லாம் இப்போது தளதள என்று வளர்ந்து நிற்குது என்றார்.
4 அடி அகலத்தில் மேட்டுபாத்தி அமைத்து, ஒன்றரை அடி இடைவெளியில் விதைத்தோம். ஒரே மாதிரியான செடிகள் வரிசையாக வராமல், மாற்றி மாற்றி வரும் மாதிரி பார்த்துக்கிட்டோம். மூடாக்கு போட்டு, சொட்டுநீர்ப் பாசனம் தான் செய்துக்கிட்டிருக்கிறோம். மூடாக்கு போட்டிருப்பதால் மண்ணில் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கிறது. இப்படி கலந்து கலந்து செடிகள் வளர்ந்து நிற்கும்போது…. நோய், பூச்சித் தாக்குதல் எல்லாமே குறையுது.

காவல் காக்கும் ஆமணக்கு !
அங்கங்க ஓட்டை போட்ட தென்னை மரக்கட்டைகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். அதில் ஆந்தைகள் குடியிருக்குதுங்க. அதனால், எலிகள் பற்றிய கவலையே இல்லை. இதுபோக, வயலைச் சுற்றி வேலி மாதிரி ஆமணக்குச் செடி இருக்கு. இதுவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். சின்ன வருமானமும் கிடைக்கும். தென்னைக்கு இடையில் வெங்காயத்தையும், உளுந்தையும் ஊடுபயிராக விதைத்து விட்டோம். இப்போ நன்றாக வளர்ந்து வந்திருக்கு. இதில்லாமல், எலுமிச்கை, பப்பாளி, மாதுளை, சந்தன மரம், அகத்திக்கீரை என்று அங்கங்க நடவு செய்திருக்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே விவசாயம் செய்வதற்காக இரண்டு மாடுகளை வாங்கியிருக்கோம். மாட்டுச் சிறுநீரை வைத்து, அமுதக் கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலக்கரைசல் தயாரித்து பயிர்களுக்கு கொடுக்கிறோம்.

திண்டுக்கல், தவசிமடையைச் சேர்ந்த இன்ஜினீயா் மருதமுத்து பற்றி ‘ பசுமை விகடனில்’ ஒரு செய்தி வந்திருந்தது. அவர், 60 சென்ட் நிலத்தில் வருடத்திற்கு 2.5 லட்சம் வருமானம் பார்க்கிறார் என்று படித்ததும் ஆச்சரியப்பட்டுட்டேன். அதன் பிறகு அவர்கிட்ட பேசினதும். அவர் நேரில் வந்து பார்த்து சொல்லிக் கொடுத்த மாதிரி 70 சென்ட்டில் சம்பங்கி நட்டிருக்கிறேன். அதுவும் நன்றாக செழிப்பாக வளர்ந்து கொண்டு வருது என்றார் தங்கராஜ். இங்கே விளையும் இயற்கைக் காய்கறிகளை நம்மாழ்வார் அய்யாவோட ‘வானகம் பண்ணையில் வாங்கிக்கிறாங்க’ அது போக, கரூரிலும் விற்பனை செய்கிறேன். இயற்கை முறையில் விளைந்ததால் இந்த காய்கறிகளுக்கு நல்ல மவுசு இருக்கு.

தொடர்புக்கு
தங்கராஜ். செல்போன் : 99524 – 22179

Leave a Reply

Your email address will not be published.