​“வாட் கேன் ஐ டு ஃபார் யூ?” – அசத்தும் தள்ளுவண்டி பலே வேம்புலியம்மாள்.

“வாட் கேன் ஐ டூ ஃபார் யூ அண்ணே?” என்று ஒரு பெண் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கேட்டால் ஆச்சர்யப்பட மாட்டோம். அதுவே, ஒரு ரோட்டோரக் கடையில் கேட்டால், ஆச்சர்யப்படத்தானே செய்வோம். அப்படித்தான் அந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சென்னை, மாதவரம் பால்பண்ணை சாலை, ஆர்.சி அபார்ட்மென்ட் அருகில், தன்னுடைய தள்ளுவண்டி கடையில் பேன்ட் மற்றும் டாப்ஸ் உடையில் புன்னகைக்கிறார் வேம்புலியம்மாள். 

சாம்பார், ரசம், ஃபிஷ் கறி, முட்டை எல்லாம் இருக்கு? வாட் டு யூ வான்ட்?’‘ என்று அசத்தலாக ஆங்கிலம் கலந்து கேட்டார். பசி நேரம் என்பதால் சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் சொன்ன விஷயம் கிட்டத்தட்ட, ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா, ‘மனதில் உறுதி வேண்டும்’ சுகாசினி கதாபாத்திரங்களின் வார்ப்புகளாக எனக்குத் தோன்றியது. தனது 21-வது வயதில் சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்குச் சென்றவர் வேம்புலியம்மாள். 22 ஆண்டுகள் அங்கே பணியாற்றிவிட்டு திரும்பினார். இப்போது 48 வயது. இப்போது, தன் அம்மா, தங்கை, தங்கையின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்க்கை பந்தயத்தில் உழைப்பை முதலீடாக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். 

“ஆமாம் கண்ணு. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். எட்டு வயசு இருக்கும். அப்பா எதிர்பாராதவிதமாக இறந்துட்டார். உடம்பு சரியில்லாமல் படுத்திருந்தால்கூட எங்களுக்குக் கொஞ்சம் திருப்தி இருந்திருக்கும். திடீர்ன்னு ஒருநாள் குடும்பத்தை அம்போனு விட்டுட்டுப் போயிட்டார். என்னையும் சேர்த்து மூணு குழந்தைங்க, தத்தெடுத்திருந்த ஒரு தம்பி என நாலு பேரையும் வளர்க்க என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கொஞ்சம் வசதியான வீட்டில் பிறந்த அம்மாவுக்கு, கூலி வேலையெல்லாம் தெரியாது. என்ன செய்யறது? விதி அவங்களை விடலை. 

வாழ்க்கைன்னா எப்படியாவது வாழ்ந்துடலாம்னு இல்லீங்க. சுயகெளரவத்தோடு வாழணும்னு என் அம்மா உறுதியா இருந்தாங்க. காலையில் மூணு மணிக்கெல்லாம் கூலிக்குப் புளியம்பழம் பறிச்சுவந்து, கொத்தவால்சாவடியில் விற்பாங்க. கிடைக்கிற காசுல ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வருவாங்க. அதுவும் நிரந்தரமில்லே. பல ராத்திரிகள் மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிட்டு, தண்ணி குடிச்சே வாழ்ந்தோம். 
கடன்காரங்க பிரச்னை வேற. பிள்ளைங்க வாழ்க்கையாச்சும் நல்லாயிருக்கணும்னு, எங்களையெல்லாம் தாம்பரத்தில் இருக்கிற பள்ளிக்கூட ஹாஸ்டல்ல சேர்த்தாங்க அம்மா. அங்கே தங்கச்சிக்கும் தம்பிக்கும் அம்மை போட்டிருச்சி. அதனால், எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க, அத்தோட படிப்பு நின்னுபோச்சு” என்று சொல்லி சற்றே அமைதியாகிறார் வேம்புலியம்மாள். 

“வீட்டுக்கு வந்த பிறகு அம்மாவுக்கும் உடம்புக்கு முடியலை. எங்க பசிக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்துட்டு, செங்கல்லைத் தேய்ச்சு, சலிச்சு, அதைச் சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு அம்மா தூங்கினதை பலமுறை பார்த்திருக்கேன். அதெல்லாம் அவங்க உடம்பை ரொம்பவே பாதிச்சிருச்சு. எங்களுக்கு யாரும் உதவிக்கு வராத நிலையில், ஆஸ்பத்திரியில் அம்மா பக்கத்தில் கண்ணீரோடு நின்னோம். அழறதைத் தவிர வேற வழி எங்களுக்குத் தெரியலை. நான் தினமும் சர்ச்சுக்குப் போய் ஜெபம் பண்ணி அழுவேன். என் பிரார்த்தனையோ என்னவோ, மூணு மாசத்துல அம்மா கொஞ்சம் உடம்பு தேறினாங்க. அம்மா குணமாகிட்டாங்களேங்கிற சந்தோஷத்தோடு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ, மழையால் வீடே சேறும் சகதியுமா கிடந்தது. உட்காரவே இடம் இல்லே. செங்கற்களைப் பொறுக்கிட்டு வந்து போட்டு, அதுக்கு மேலே அட்டையை விரிச்சு, அம்மாவைப் படுக்கவெச்சோம். அடுத்து சாப்பாடு வேணுமே? அக்கம்பக்கம் வீடுகளில் இருக்கிறவங்களுக்காக கடைக்குப் போய் சாமானெல்லாம் வாங்கிக் கொடுப்போம். இதுக்காக அவங்க கொடுக்கிற சில்லறையில்தான் பன், டீ வாங்கிச் சாப்பிடுவோம். அது வயித்தை நிரப்புமா? பக்கத்து வீடுகளுக்கு போய், ‘அம்மா ஏதாச்சும் சாப்பாடு மிச்சம் இருந்தா வாங்கிட்டு வரச் சொன்னாங்க’னு நிப்போம். பகல்ல போக அசிங்கப்பட்டுக்கிட்டு, ராத்திரியில்தான் போவோம். ஐ கெநாட் ஃபர்கெட் ஆல் திஸ்” என்கிற வேம்புலியம்மாளின் கண்களில் சரசரவென வழிந்தோடுகிறது நீர். 

“நாளாக நாளாக அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் தேறிச்சு. நாங்களும் வளர்ந்திருந்தோம். எல்லாருமா கூலி வேலைகளுக்குப் போனோம். அப்புறம். நான் ஒரு ஆஸ்பத்திரியில் வேலைப் பார்த்ததேன். அங்கேதான் ஆல்ட்ராய் சார் அறிமுகமானார். சிங்கப்பூரில் இருக்கிற இலங்கை தம்பதியின் குழந்தையைப் பார்த்துக்க, வீட்டு வேலைகள் செய்யப் போறியா?’னு கேட்டார். இருக்கிற சூழ்நிலையில் எந்த வேலையும் பார்க்கத் தயாராக இருந்தேன். ‘ஓ.கே’னு கிளம்பிட்டேன். 22 வருஷமா அங்கேதான் இருந்தேன். என் சுத்தமான வேலை, சுவையான சமையல், குழந்தையைப் பார்த்துக்கிட்ட அக்கறை இதெல்லாம் பிடிச்சுப்போக, என்னை விடவே அவங்களுக்கு மனசில்லே. ஆனாலும், அம்மாவின் உடம்பு மோசமானதால், ஐந்து வருஷத்துக்கு முன்னாடி திரும்பிட்டேன். வந்த கையோடு இந்தத் தள்ளுவண்டி கடையை ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா, பொறுப்புகள் இன்னும் மிச்சம் இருக்கே” எனப் புன்னகைக்கிறார். 

இப்படி உணவுக் கடை வைக்கும் ஐடியா எப்படி வந்ததாம்?” 

”நான் வேலைப் பார்த்த வீட்டில் வாங்கின பாராட்டின் நம்பிக்கையில்தான் இந்தக் கடையை ஆரம்பிச்சேன். இந்த 22 வருஷ சம்பாத்தியத்தில் கடன்களைக் கட்டி முடிச்சேன். அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தேன். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் போட்டேன். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிவெச்சேன். என் வயசு கரைஞ்சுட்டே இருந்தது எனக்குத் தெரியவே இல்லீங்க. பூ வைக்கணும், பொட்டு வைக்கணும் என்கிற சராசரி ஆசைகூட வந்ததில்லே. குடும்பம் நல்லா இருந்தா போதும்னு இருந்துட்டேன். குடிசை வீட்டிலிருந்த நாங்க, இப்போ கல்வெச்சுக் கட்டின வீட்டுக்கு வந்திருக்கோம். அம்மா, தங்கச்சி, அவளோட பொண்ணுங்க, பேத்திகளோடு இருக்கிறதே சந்தோஷமா இருக்கு. அதுக்காகவே இந்தச் சாப்பாட்டுக் கடை. இதுவரைக்கும் எனக்குனு ஒரு பைசாகூட சேமிப்பா வெச்சுக்க தோணலை” என்கிற வேம்புலியம்மாள் வார்த்தையில் அத்தனை நிறைவு. 

“எல்லாம் சரி, இந்த மாடர்ன் டிரெஸ்க்கு என்ன காரணம்… ”
மெல்ல புன்னகைப்பவர், ”இந்த டிரெஸ் பத்தியும், நான் பேசுற இங்கிலீஷ் பத்தியும் நிறைய பேர் விசாரிச்சிருக்காங்க. ஆச்சர்யமா பார்க்கறாங்க. ரெண்டுமே சிங்கப்பூரில் பழகினதுதான். அங்கே ரெகுலரா ஷார்ட்ஸ், பஞ்சாபி சூட்ஸ், ஜீன்ஸ்தான் போடுவேன். இங்கே வந்து சேலை கட்டினா, நாம பார்க்கிற வேலைக்கு வசதியாவே இல்லே. அதனால், அந்த டிரெஸையே போட்டுட்டேன்” என்கிறார். இவரது தள்ளுவண்டிக் கடை, மதிய சாப்பாட்டுக் கடை. 
”ஒரு சாப்பாடு 35 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். ஒரு நாளைக்கு 800 முதல் 1000 ரூபாய் நிக்கும். கஞ்சிக்காக நாங்க வீடு வீடா நின்ன காலம் போய், இன்னிக்கு இல்லைனு வந்து நிக்கிற ரெண்டு பேருக்காச்சும் என்னால் சாப்பாடு போட முடியுது. பசிக்குதுனு யாராவது சொல்லக் கேட்டா எனக்குப் பதறிடும். ஏன்னா, பசிங்கறது எப்படி இருக்கும்னு நல்லாத் தெரிஞ்சு வெச்சிருக்கறவ நான்” 

பிறருக்காக உழைக்க மட்டுமே படைக்கப்பட்டவராக உயர்ந்து நிற்கிறார் பலே வேம்புலியம்மாள்! இவரைப் போன்ற பெண்களின் உழைப்புக்கான பலன் கிடைக்கட்டும்.

– நன்றி விகடன்

Leave a Reply