​தனியே காடு வளர்த்த தனி ஒருவன்

​தனியே காடு வளர்த்த தனி ஒருவன் ரகுநாத்தின் கதை!

“காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. பிறந்த நாளன்றாவது ஒவ்வொருவரும் மரக்கன்று நடுவது அவசியம்”, “விளை நிலங்கள் எல்லாம் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவருகின்றன” போன்ற செய்திகளைப் படித்து அவ்வப்போது நாமும் பரபரப்பாக பேசியிருப்போம். அதன் பின் வேறு பிரச்னைகளில் இதை அப்படியே மறந்து போயிருப்போம். இந்தியாவின் தேசிய வனக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்தின் நிலப்பரப்பளவிலும் 33.33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். 2015-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 21.34 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளது.
மர வளர்ப்பு அவசியம் காடு
ஒவ்வொரு தனி மனிதனும் காட்டை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்றாலும், முடிந்த வரை ஒரு மரமாவது நடலாம் என்கிறார் ‘பசுமை மனிதர்’ என எல்லோராலும் அழைக்கப்படும் பூனேவைச் சேர்ந்த ரகுநாத் மாருதி தோலே! கடந்த 30 வருடங்களாக இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் இவர், இதுவரை லட்சக்கணக்கான மரங்களை வளர்த்த பெருமைக்குரியவர்.
“ஒரு மரமானது 50 வருடங்களில் கோடிக்கணக்கான மதிப்பில் சுற்றுப்புறத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சுமார் 24 லட்சம் மதிப்பில் தண்ணீர் மாசுபடுவதைத் தடுக்கிறது. சுமார் 20 லட்சம் மதிப்பில் மண் அரிப்பைத் தடுக்கிறது. சுமார் 40 லட்சம் மதிப்பில் காற்று மாசுபடுவதைத் தடுக்கிறது. சுமார் 24 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. பறவை மற்றும் விலங்குகளுக்கு உறைவிடமாக இருப்பதோடு, உணவுப் பொருள்களையும் தருகிறது. மேலும், அடர்த்தியாக வளர்ந்த ஒரு மரமானது, பத்து குளிர்சாதன மிஷின்கள் தரக்கூடிய குளிர்ச்சியை ஒவ்வொரு நாளின் 20 மணி நேரமும் தருகிறது” என சுற்றுப்புற ஆர்வலர்கள் கணக்கிடுகிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரகுநாத் மாருதி தோலே தன் சார்பில் இந்த பூமிக்கு ஆயிரம் கோடிகளுக்கும் மேலான சொத்துகளை வழங்கியிருக்கிறார்.
மரக்கன்றுகளைப் பராமரிக்கும் ரகுநாத்!
2012-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தொடர்ந்து இலவசமாக வழங்கி வரும் இவர், மரம் வளர்ப்பதில் தனக்குள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஃபாரன்சிக் துறை வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். மேலும், சுற்றுப்புறச் சூழலுக்கு மரங்கள் எவ்வளவு நன்மைகள் தருகின்றன என்பது பற்றித் தனது ஓய்வு நேரத்தில், பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
மரம் வளர்ப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதே ஒரு சுவாரசியமான கதை. 1982-ம் வருடத்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு ரகுநாத்தின் தந்தையால் செல்ல முடியாத சூழல். 5 ரூபாய் பணத்தை ரகுநாத் கையில் கொடுத்த அவர் தந்தை, தனக்குப் பதிலாக ரகுநாத்தை சென்று வரச் சொல்லியிருக்கிறார். 3 ரூபாயை தம்பதியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டுத் திரும்பியிருக்கிறார். கையில் இருந்த மீதி 2 ரூபாயை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. வரும் வழியில் நர்சரி கார்டன் ஒன்றைப் பார்த்தவுடன், ரகுநாத்தின் மூளையில் சின்ன மின்னல் வெட்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கும் மரக்கன்றுகளை வாங்கி தான் வேலை பார்த்த வளாகத்தில் நட்டு, அச்செடிகளுக்கு தம்பதியர் இருவரின் பெயர்களைச் சூட்டியிருக்கிறார். செடிகள் கண் முன்னாடி செழித்து வளர்வதைப் பார்த்த ரகுநாத்துக்கு உள்ளுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி. மரம் வளர்ப்பது இவ்வளவு மகிழ்ச்சியான விஷயமா என சிந்திக்க ஆரம்பித்த ரகுநாத், அன்றிலிருந்து இன்று வரை பல லட்சம் மரக்கன்றுகளைப் பராமரித்து, மற்றவர்களும் மரங்களை வளர்க்கும் வகையில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
மரக்கன்று
கையில் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு வெளியே சுற்றுவதை ரகுநாத் வழக்கமாக வைத்திருக்கிறார். ஏதாவது ஒரு செடி தண்ணீர் இல்லாமல் வாடியிருந்தாலும், அதைப் பத்திரமாக எடுத்துவந்து தனது தோட்டத்தில் இயற்கை உரமிட்டு செழிக்க வைத்து விடுகிறார். “வாடிப்போன செடியைப் பார்த்தா எனக்கு மனசு கேட்காது. அதே செடியை செழிப்பா வளர்த்ததும் கிடைக்கிற சந்தோசத்துக்கு அளவே இல்லைங்க. நான் ஏன் இலவசமா மரக்கன்று தர்றேன்னா… மரம் வளர்க்கறதோட அருமையை மத்தவங்களும் தெரிஞ்சுக்கனும்னு தான். இயற்கை அன்னைக்கு நாம திரும்ப செலுத்த வேண்டிய நன்றிக் கடன் இது. மனுசங்க பாதி பேருக்கு மரங்களோட உண்மையான மதிப்பு தெரியறதில்லை. ஒரேயொரு தடவ அந்த மதிப்பு தெரிஞ்சதுன்னா,  அதுக்கப்புறம் பார்க்குற இடத்துலல்லாம் செடி நட ஆரம்பிச்சிருவாங்க” என ஆணித்தரமாகப் பேசுகிறார் ரகுநாத்.
சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு என்பதால் ரகுநாத் மற்றவர்கள் வளர்ப்பது போல, பிளாஸ்டிக் பைகளில் செடி வளர்ப்பதில்லை. “நான் இலவசமாக செடி தரும்போது சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பூந்தொட்டி விற்பவர்கள் பயனடைகிறார்கள். பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு மொத்தமாக என்னிடமிருந்து மரக்கன்றுகள் வாங்கும்போது, அருகே ஆட்டோ வைத்திருப்பவர்களுக்கோ அல்லது லாரி வைத்திருப்பவர்களுக்கோ கொஞ்சம் பணம் கிடைக்கிறது. நம்ம சுற்றி இருப்பவர்களும் நம்மால் பயனடைவது மகிழ்ச்சி தானே?!” என்கிறார் ரகுநாத்.
பணம் மட்டுமே முக்கியம் என அதன் பின்னே ஓடும் இயந்திர உலகில், மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி இயற்கையை நேசித்த நோபல் பரிசு வென்ற வங்காரி மாத்தாய், நூற்றுக் கணக்கில் மரங்களை நட்ட கர்நாடகத்தை சேர்ந்த 103 வயது திம்மக்கா பாட்டி போன்றவர்களின் வரிசையில் ரகுநாத் நிச்சயம் இடம்பெறுகிறார். இவரைப் போன்ற மனிதர்களால் தான் இயற்கை இன்னும் நிம்மதியாக மூச்சு விடுகிறது.

விகடன்

Leave a Reply