​ஒரு ஓட்டல் முதலாளியின் கதை

 தன்னுடைய கடையில் சேரும் முருகனான என்னை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார் .

அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்.

உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்றும் சொன்னார்.

 பசியால் வாடி வதங்கியிருந்த அவனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது .
அவனும் சரியன்று ஒத்துக்கொண்டான்.
 அதற்கு பிறகு அவன் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான் .
அந்த முருக பவனை தனது  பவனாக நினைத்து முழுமையாக உழைத்தான்.
 இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று அவன் எவ்வளவு பணம் கேட்டும் அவர் தரவில்லை .

ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவனை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார்.


சில வருடங்கள் ஓடியது .

அவனுக்கும் அவரின் அன்பும் கண்டிப்பும் பிடித்துப் போனது .
எதைப்பற்றியும் கேட்பதில்லை.
 கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் அவனை பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள் ,சில விடுமுறை தினங்களில் ….முதலாளிக்கு தெரியாமல்…. 

ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர் .
அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார் .

அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை.
 இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது .
ஒரு நாள் முதலாளி அவனை அழைத்தார்.

அதிக ஓட்டல் இல்லாத ,ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார் .
முருகா இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று என்னிடம் கேட்டார் ..

நானும் ஆமாங்க முதலாளி இந்த இடம் நல்ல இடம் நல்ல வியாபாரம் ஆகும் என்றேன் .
கடைக்கு முன் பணம் கொடுத்தார் .
அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குதற்கு என்னையே அனுப்பி வைத்தார் .

என்னோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் என்னோடு பணிக்கு ஒத்தாசை செய்யச் சொன்னார்.
 கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் என்னை அழைத்தார் .
கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா முருகா என கேட்டார்.
 பின்னர் கடை சாவியை என்னிடம் கொடுத்து ,

நீதான் முருகா கடைக்கு சொந்தக்காரன் என்றார் .
முதலாளி என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
 உன்னுடைய பணம்தான் முருகா …
அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன்பால் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் அவ்வளவே…

 நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி….
 பிறகு தானாக எல்லாம் நடக்கும் என்றார்.
 அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது .
சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கடை அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள் .
பிறகு எனது தூரத்து மாமா ,வசதியான மாமா அவர்களே தனது பெண்ணை அளிக்க முன்வந்தார் .

பிறகு எனது முதலாளியின் தலைமையில் மாமா பெண்ணை திருமணம் செய்து  மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறேன் .
ஆனால் அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் அது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .
அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்  

உனக்காக மட்டும் வாழாதே….

 உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை ….
என்றதை இன்றுவரை நான் கடைபிடித்து வருகிறேன் .
அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உறவினர்களை காட்டிலும் ,

அவரால் வளர்த்துக் உருவாக்கப்பட்ட மனிதர்களின் அழுகையே அதிகமாக இருந்தது என்னையும் சேர்த்து ….
சில மனிதர்களின் சாதனைகள் வெளியில் தெரிவதில்லை ஆனால் அவர்களது இறுதி ஊர்வலத்தில் தெரியும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் எனது முதலாளி இறுதி ஊர்வலத்தில்…..

Leave a Reply