​இந்தி திணிப்பும்.. விருப்பமும்

இந்தி திணிப்பும்.. விருப்பமும்..

————————————————-
இன்று டாடா ஸ்கையில் இருந்து ஒரு அம்மணி அழைத்திருந்தார். எடுத்தவுடன் நமஸ்த்தே என்று ஆரம்பித்தார்.
எனக்கு இந்தி மராத்தி தெரியும் என்றாலும் நான் வணக்கம் என்று தமிழில் பதில் சொன்னேன்.
“மே பாலா ஸே பாத் கர்ராகும்..?” என்றார்..
“ஆமா” என்றேன் மீண்டும் தமிழில். சற்று தடுமாறியவர்,
“டாடா ஸ்கைகீ சர்வீஸ்கீ பாரேமே கஸ்டமர்கீ ஜான்காரி ஜானா சாத்தாகும்..”
சொல்லுங்க.. என்றேன்..
’’முஜே ஆப்கீ பாஸா சமஜ்மே நஹி ஆத்தாஹே.. ஆப் இந்தி நஹி ஜான் தே ஹோ..”என்றார். (அம்மணிக்கு நான் பேசும் மொழி புரியலையாம்.. உங்களுக்கு இந்தி தெரியாதா என்று கேட்கிறார் )
“எனக்கு இந்தி மராத்தி இங்கிலீஸ்.. ஏன் பிரெஞ்ச் கூட தெரியும்.. அல்லது தெரியாம இருக்கலாம்.. ஆனா நான் எதுக்கு உங்கக்கிட்ட இந்தியில் பேசணும்.. தமிழ் நாட்டில் உங்க ஓனர் வியாபாரம் பண்றார்.. அப்போ கஸ்டமர் சேவை குறைபாடுகள் குறித்து பேசுவதற்கு தமிழைதான் பயன்படுத்த வேண்டும்.
தமிழர்களின் துட்டு மட்டும் வேணும்.. ஆனா நாங்க உங்களுக்காக இந்தி பேசணுமா.. தேவைனா நீங்க தமிழ் படிச்சுட்டு வந்து எங்களுக்கு சேவை செய்யுங்க.. இந்த கஸ்டமர் ரொம்ப கேவலமா திட்டுறான்னு  இதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி உங்க முதலாளிக்கு அனுப்புங்க.. என்று மராத்தியில் சொல்லிவிட்டு வைத்தேன்.
அநேகமாக போனை வைத்தப்பிறகு.. “இந்த தமிழனுங்க எவ்வளவு மொழி வெறி பிடிச்சவனுங்களா இருக்கானுங்க பாருங்க.. ”என்று பக்கத்து சீட் தோழியிடம் திட்டியிருக்க கூடும்..
இது முதல்முறை அல்ல..  சமீபமாக கவனிக்கிறேன்.. ஏர்டெல்லில் ஆரம்பித்து இந்த வட இந்திய கும்பல் தமிழகத்தை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கின்றன.  அதுவும் மோடி கும்பலின் வரவுக்குப்பிறகு இந்தி திணிப்புகளின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
தினத்தந்தியில் அரசு விளம்பரத்தை இந்தியில் வெளியிடும் அளவுக்கு இவர்களின் அட்டகாசம் இருக்கிறது.. உங்களுக்கும் யாராவது இப்படி இந்தியில் பேசினால் தயங்காமல் தமிழிலே பதில் கொடுங்கள். இந்தி தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள்.
உலகத்தின் அத்தனை மொழியையும் கற்றுக்கொள்ளலாம். அது நம் தேவையைப்பொறுத்தது. இந்தி மொழி உயர்ந்தது..  நீங்கள் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று திணித்தால்  தமிழர்கள் மீண்டும் மீண்டும் மிதித்து அனுப்புவோம்.
ஏனெனில்  அடுத்தவர்கள் மீது உங்கள் மொழியை திணிப்பதுதான் மொழிவெறி.. அதை எதிர்ப்பது அல்ல..
-கார்ட்டூனிஸ்ட் பாலா

30-8-16

Leave a Reply