வவ்வால்களை காக்கும் கிராமமக்கள்

மணப்பாறை

மணப்பாறை அருகே வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமலும், மாசு ஏற்படுத்தும் மத்தாப்புகளை கொளுத்தாமலும் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

வவ்வால்கள்

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதையும் தாண்டி பட்டாசு இல்லாத தீபாவளி என்பதே அரிதான ஒன்று தான். தீபாவளி அன்று அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தீபாவளியை ஒரு கிராம மக்கள் சத்தமின்றி கொண்டாடுகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அமயபுரம் ஊராட்சியில் தோப்புபட்டி உள்ளது. இந்த கிராமத்திற்கு உள்ளே சென்றால் மயான அமைதியைப் போல் எந்தவித சத்தமுமின்றி இருக்கும். ஆனால் சிறிது தூரம் கடந்து முனியப்பன் கோவில் பகுதிக்கு சென்றால் அங்கு வவ்வால்களின் கீச், கீச் சத்தம் நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கும். அங்கு ஆலமரத்தில் வவ்வால்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டும், அங்கும் இங்கும் பறந்து கொண்டும் இருக்கும்.

பட்டாசு வெடிப்பதில்லை

இரவில் இறை தேடிச் செல்லும் வவ்வால்கள் அதிகாலையில் மீண்டும் அந்த மரத்திற்கு வந்து தொங்கிக்கொண்டிருக்கும். மேலும் பகல் நேரங்களில் தோப்புபட்டி பகுதியில் உள்ள ஒரு சில மரங்களில் சில வவ்வால்கள் தொங்கிக் கொண்டிருக்கும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சில வவ்வால்களே இருந்தன. ஆனால் அதை யாரும் வேட்டையாட விடாமல், வவ்வால்களுக்கு எந்தவித இடையூறுமின்றி கிராம மக்கள் பாதுகாத்து வருவதால், தற்போது ஏராளமான வவ்வால்கள் அங்கு உள்ளன.

அதிக சத்தம் கேட்டால், அந்த வவ்வால்கள் பறந்து வேறு இடத்திற்கு சென்று விடும் என்பதை அறிந்த தோப்புபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதை முழுவதுமாக தவிர்த்துள்ளனர். தீபாவளியின்போதும் இதே நிலைதான். தீபாவளியன்று கிராம மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்களே தவிர, எக்காரணம் கொண்டும் பட்டாசு வெடிக்க மாட்டார்கள். பட்டாசு வெடித்தால் வவ்வால்கள் வேறு இடத்திற்கு பெயர்ந்து விடும் என்பதால் சிறுவர்கள் கூட பட்டாசு வெடிப்பதை தவிர்த்துள்ளனர்.

மத்தாப்புகள்

இதுமட்டுமின்றி வவ்வால்களுக்காக, அதிக அளவில் புகை வரக்கூடிய மாசு ஏற்படுத்தும் மத்தாப்புகளையும் கிராம மக்கள் கொளுத்துவதில்லை. பல ஆண்டுகளாக இதே முறையில்தான் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே பட்டாசு என்பது நினைவில் இருந்தும் கூட அதை தவிர்த்து வவ்வால்களுக்கு வாழ்வளித்து வரும் கிராம மக்களை போன்று, சில வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் அழிந்து வரும் பறவை இனங்களை மீட்டெடுத்து விடலாம், என்பதில் ஐயமில்லை.

Leave a Reply