வள்ளல் தான் பாலா

“கண்ணு… சேலம் இங்கருந்து எத்தன கிலோ மீட்டர் ?” என்ற குரல் கேட்டு திரும்பினேன், அங்கு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நிற்கிறார்,  ” ஏன் தாத்தா ? 25-30 கிமீ வரும் !” என்றேன். “ம்ம்ம் சரிங்க”என்றவாறு நகர்ந்தவரை தொடர்ந்து தலையில் ஒரு பையில் சாமான்களை சுமந்தவாறு ஒரு மூதாட்டி சென்றுக்கொண்டிருந்தார்.
“பெரியவரே… நில்லுங்க, இது யார் ?” என்றேன், ” என் பொண்டாட்டிதான்பா” என்றார், ‘என்னாச்சி ?’ என்றேன், அவர் ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் “ஒரு ___ பையன் நாள்கூலி பேசி எங்களை கூட்டிவந்தான், தாரமங்கலத்துல இருந்து வரோம், சாயங்காலம் 5 மணிவரை வேலையெல்லாம் வாங்கிட்டு, கூலியோட வரேன்னு போனவன் வரவே இல்ல கண்ணு ! வேலை செஞ்ச வீட்டு வாசல்லயே இவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்தோம், அந்த வீட்டம்மா  “வேலை முடிஞ்சிருச்சில்ல ஏன் இங்க நிக்கற கெளம்பு” ன்னு தொரத்திருச்சி.. எப்படி ஊருக்கு போறதுன்னு தெரியல !” என்றார்.
பஸ் நிலையத்துக்கு பக்கத்தில் இதுபோன்ற டுபாக்கூர் ஆசாமிகள் நிறைய பேர் அலைவார்கள், அதையெல்லாம் பார்த்து பார்த்து  மரத்துபோய்விட்டதால், எதிர்பார்ப்போடு என்னை நோக்கியவர் கையில் கடமைக்காக 20 ரூபாயை திணித்துவிட்டு நகர்ந்தேன்,
கிட்டத்தட்ட 8 மணிநேரம் ட்ரைவ் பண்ணியதால் வந்த அசதியும் கடுப்பும் எனை ஆட்கொள்ள, அந்த முதியவரை சரியாக கண்டுக்கொள்ளவில்லை, சாலையோரக்கடையில் டீ குடித்து முடித்துவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ்டாக சேலம் செல்லும் வழியில் வண்டியை விட்டேன், சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்திருப்பேன், சாலையோரமாக அந்த பாட்டியின் சுமையை தலையில் வைத்துக்கொண்டு, அந்த கிழவர் விடுவிடுவென நடக்க, கணம் குறைந்த பையை தூக்கியவாறு அந்த பாட்டி அவரை பின்தொடர்கிறார்.
ஒருகணம் ஆடிப்போய்விட்டேன் “பொய் பேசுபவர்கள் பஸ் நிலையத்தை விட்டு நகர மாட்டார்களே, இவர் எங்கே போகிறார் ? ” என்று குழப்பமாகி, முன்னிருக்கையில் என் பக்கம் அமர்ந்திருந்த அம்மாவிடம் ” அம்மா.. அந்த பெரியவர் எங்க போறார்ன்னு கேளுங்க ?” என்றவாறு என் காரை அவரருகே அணைத்து நிறுத்தினேன்.
அம்மா, ” பெரியவரே… எங்க போறீங்க ?” அவர், சேலம் போறேன்மா !” அம்மா, எப்படி ? நடந்தா ?” அவர், ஆமாம்மா… கைல 20 ரூபாதான் இருக்கு ! பஸ்ல போக முடியாது அதான் கடகடன்னு நடந்துடலாம்ன்னு பாக்கறேன்” என்கிறார்..
எனக்கு சுர்ரென உரைத்தது, பாவம் அவர் நினைத்திருப்பார்,  ” இவனுங்ககிட்ட கையேந்தி மானம் போவதைவிட, நாம நடந்தே போய் சாகலாம்” என்று. அவசர அவசரமாக என் தவறை திருத்திக்கொள்ள ஆசைப்பட்டு, ஒரு திருப்தியான தொகையை எடுத்து அம்மாவிடம் கொடுத்து அவரிடம் கொடுக்க சொன்னேன்…
ஒரு நிமிடம் தயங்கிய அந்த பாட்டி, தன் கனவனை பார்த்து  “வாங்கிக்கவா” என்கிறது, குழந்தை போல, ” வாங்கிக்கம்மா” என்றார், பணத்தை கையில் வாங்கிய அந்த பாட்டி, குனிந்து என்னை பார்த்து “நல்லா இருப்பா” என்கிறார், அவரை எதிர்கொள்ள முடியாமல் என்னவோ செய்தது, முதியவரும் குனிந்து உள்ளே பார்த்து நன்றி சொல்ல ! குற்ற உணர்வுடன் இன்னும் கொஞ்சம் பணத்தை கொடுத்து ” சாப்பிட்டுட்டு போங்க தாத்தா” என்கிறேன், சாலையில் 20 ரூபாய் கொடுத்த “வள்ளல்” தான் காருக்குள் மங்கிய ஒளியில் அமர்ந்திருக்கிறான் என்று அவருக்கு தெரியவில்லை…!
தெரியவும் வேண்டாம்….
– பாலா

Leave a Reply