ரூ.500, ரூ.1,000 செல்லாது — பகீர் பின்னணி

பிரதமர் நரேந்திர மோடிஇன்று (நவம்பர் 8, 2016) நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவிக்கப்பட்டதன் பகீர் பின்னணி தெரிய வந்துள்ளது.

சென்னையின் முன்னணி வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் கே. வைத்தீஸ்வரன், ” பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறித்துள்ளது ஒரு சர்ச்சிக்கல் அட்டாக் என்று குறிப்பிடலாம். நியாயமாக சம்பாத்திருப்பவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. அவர்கள் அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து பணத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

லஞ்ச, லாவணியம் மூலம் சம்பாதித்தவர்கள், ஹாவாலா மூலம் சம்பாதித்தவர்கள் அப்படி மாற்றுவதில் சிக்கல் இருக்கிறது. நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்ததால், கறுப்பு பணம் தீபாவளி பட்டாசு போல் கருகி விட்டது. லஞ்சம் மூலம் சம்பாதித்தவர்களை இந்த அதிரடி உத்தரவு பயங்கரமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்த அதிரடி மூலம் பொதுமக்கள் ஓரிரு தினங்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் நாட்டுக்கு நடக்கப் போகும் நல்ல விஷயங்கள் ஏராளம்” என்றவரிடம், பிரதமர் மோடி இப்படி அதிரடியாக ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவித்ததன்

பின்னணி என்ன என்று கேட்டோம்.

”கணக்கில் வராத பணத்தை தானே முன் வந்து தெரிவிக்கும் திட்டம் 2016 (income declaration scheme 2016 ) மூலம் எதிர்பார்த்த அளவுக்கு கறுப்பு பணம் வெளியே வரவில்லை. மயிலே மயிலே இறகு போடு என்று கேட்டு பலன் இல்லாததால், அதிரடியாக கறுப்பு பண பதுக்கலுக்கு பிரதமர் அதிரடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்” என்றார். கே. வைத்தீஸ்வரன்.

இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒன்றான பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ பாலசுப்பிரமணியன்,

” இது நல்ல திட்டம்தான். கணக்கில் வராமல் இருக்கும் பிளாக் மணி வெளியில் வந்துவிடும். அல்லது அது போன்ற பணம் அவற்றின் மதிப்பை இழந்து பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல் வெறும் தாள்களாகி விடும். 500,1000 ரூபாய் தாள்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் கட்டி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த பணம் கணக்குக்குள் வரும் என்பதோடு, இதற்கு வருமான வரி விதிக்கப்படும். இந்த வரி என்பது 30% ஆக இருக்கும்பட்சத்தில் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்.
மேலும் தற்போது அச்சிடப்பட்டிருக்கும் அல்லது புழக்கத்தில் விட தயாராக இருக்கும் கள்ளப் பண தாள்கள் வெறும் பேப்பராகி விடும். பதுக்கல் பணம் வெளியே வருவது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு உதவும். லஞ்சம், லாவணியம் ஒழியும் போது நாட்டில் தொழில் சுலபமாக நடக்கும்.” என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத பொருளாதார மேதை ஒருவர் கருத்து கூறும் போது, ” கோடி கணக்கில் பணத்தை 500, 1000 ரூபாய் தாள்களாக பதுக்கி வைத்திருப்பவர்களை அதனை மற்றவர்களின் உதவியோடு மாற்ற உதவுவார்கள். அப்போது 40-50% கமிஷன் கொடுக்க வேண்டி வரும். அரசியல் கட்சிகள் பதுக்கி வைத்திருக்கும் கோடி கணக்கான பணம் இப்படி வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. இப்படி பணத்தை மாற்றி கொடுப்பது மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பலரும் வசதிகளை (டிவி, ஃப்ரிட்ஜ், டூவீலர், கார்) பெருக்கி கொள்வார்கள். இதனால், நாட்டில் பொருள்களுக்கான தேவை அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சி காணும்” என்றார்.

பிளாக் மணி, கள்ளப் பணம் ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தால் நல்லதுதானே?

– சேனா சரவணன்

Leave a Reply