யோகேஸ்வர் பெருந்தன்மை

​பதக்கத்தை ரஷ்ய வீரரின் குடும்பமே வைத்துக்கொள்ளட்டும் யோகேஸ்வர் பெருந்தன்மை
மரணமடைந்த ரஷ்ய மல்யுத்த வீரர் குடுகோவின் குடும்பமே அவரின் வெள்ளிப்பதக்கத்தை வைத்துக்கொள்ளட்டும் என்று இந்திய மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் பிரீஸ்டைல் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் வெள்ளிபதக்கம் வென்று இருந்த ரஷிய மல்யுத்த வீரர் பெசிக் குடுகோவ் 2013–ம் ஆண்டில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதற்கிடையே 4 முறை உலக சாம்பியனான பெசிக் குடுகோவிடம் ஒலிம்பிக் போட்டியின் போது எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ரத்த மாதிரியை உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் மீண்டும் பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது  வெள்ளிபதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் பறிமுதல் செய்துள்ளது.
இதனால் அந்த பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்த யோகேஷ்வர் தத்தின் வெண்கலப்பதக்கம், வெள்ளிப்பதக்கமாக தரம் உயருகிறது. இதற்கான அறிவிப்பை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் உலக மல்யுத்த சம்மேளனம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.
இதன் மூலம் சக வீரர் சுஷில்குமாருடன் இணைந்து யோகேஷ்வர் தத்தும் லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் யோகேஷ்வர் தத் கூறியதாவது:
ரஷ்ய மல்யுத்த வீரர் குடுகோவ் மிகச்சிறந்த மல்யுத்த வீரர். ஒரு மல்யுத்த வீரராக நான் அவரை மதிக்கிறேன். முடிந்தால் அவர் வாங்கிய  பதக்கத்தை அவரது குடும்பமே வைத்துக்கொள்ளட்டும். அது அவருடைய குடும்பத்தின் மரியாதையை காப்பாற்றும். எனக்கு மனிதாபிமானம் தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply