மைக்கேல் ஜாக்சன்

ஆகஸ்ட் 29: பாப் உலகின் மன்னன் “எம்.ஜெ” மைக்கேல் ஜாக்சன் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

#MichaelJackson
“தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40 வருடங்களுக்கு மேல் இந்த உலகையே கட்டிவைத்திருந்த “மைக்கேல் ஜாக்சன்” பிறந்த தினம் இன்று.”
“நம்ம ஊர்ல துருதுருன்னு இருக்க பசங்களையோ, கால் ஒரு இடத்துல நிக்காம ஆடுற பசங்களப் பாத்து எல்லாரும் கேட்குற ஒரே கேள்வி..இது தான்..”மனசுல என்ன பெரிய மைக்கேல் ஜாக்சன்னு நினைப்போ?”. இந்த மாதிரி பேச்சுகளைத் கேட்டிராமல் எந்த ஒரு நடன கலைஞர்களும் தன்னுடைய லட்சியத்தை அடைந்திருக்க மாட்டார்கள். நடனம் மீது காதல் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இவர் நிச்சயம் ரோல் மாடலை இருந்திருப்பார். பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.
‘மைக்கேல் ஜோசப் ஜாக்சன்’ என்ற இயற் பெயரை விட “கிங் அஃப் பாப்” (பாப் இசையின் மன்னர்) என்றும் “எம்.ஜெ” என்றும் உலகில் உள்ள அனைத்து ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்பட்டார். தன்னுடைய திறமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் தந்தாரோ, அந்த அளவிற்கு தன்னுடைய தோற்றத்துக்கும் முக்கியத்துவம் தந்தவர். ஜாக்சன் உடுத்தும் உடைகளுக்கும்,அவரது தொப்பிக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற பாண்டு இசைக்குழுவில் பணியாற்றினார். ‘அப்பல்லோ’ தியேட்டரில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் ஆல்பத்தை அந்நாளில் மிகவும் பிரபலமான ‘டயானா ராஸ்’ எனும் பாடகி வெளியிட்டார். பின்னர், டயனா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.இந்த நிகழ்ச்சியே ஜாக்சனின் இசைப்பயணத்துக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின் ஜாக்சன் உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே ஜாக்சன் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
தன்னுடைய தீவிரமான உழைப்பாலும், இசையின் மீது கொண்ட காதலாலும் 80-களில் புகழின் உச்சியில் இருந்தார். 1982-ல் வெளிவந்தக் ஜாக்சனின் ‘திரில்லர்’ அல்பம் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசை ஆல்பங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இன்று வரை இருக்கிறது. பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தில் அவர் புதிய புரட்சியே செய்து காட்டினார். ஜாக்சன் படைத்த ‘ரோபாட், மூன்வாக்’ போன்ற நடன வகைகளும் இவரால் பிரபலமானது.
இவரது, நடனத்தாலும் இசையாலும் பல இசை வகைகள் இந்த உலகத்தையே ஆடவைத்தது. பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவியும் செய்துவந்தார். “காட் டு தி தேர், ஆப் தி வால், திரில்லர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி” போன்ற இவரது ஆல்பங்கள் அனைத்தும் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்றன.
“திரில்லர்” இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆல்பம். பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார் ஜாக்சன் .கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார்.75 கோடி ஆல்பங்கள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன். ‘ப்ளாக் அண்ட் ஒய்ட்’ என்ற விடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள்.இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும். இது அத்தனையும் ஜாக்சனின் சில சாதனைகள் தான். தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ‘மைக்கேல் ஜாக்சன்’ எனும் ஒரு சரித்திரம் தூண்டுகோளாய் எப்போதும் அமைந்திருக்கும்.
தன்னுடைய நடனத்தாலும் இசையாலும் 40 வருடங்களுக்கு மேல் இந்த உலகையே கட்டிவைத்திருந்த “மைக்கேல் ஜாக்சன்” பிறந்த தினம் இன்று.
– இ.லோகேஸ்வரி

Leave a Reply