மதாபர் – ஒரு  எடுத்துக்காட்டு 

​மதாபர்… இது இந்திய கிராமத்தின் மினி சுவிஸ் பேங்க்!

 சுஜிதா
இந்தியாவில் உள்ள வெவ்வேறு கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் குடியேறிவரும் நிலையில், இந்தப் பணக்கார கிராமத்துக்கு மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்தக் கிராமத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் எனப் பார்த்தால், ஒன்றல்ல… இரண்டல்ல, ஆயிரமாயிரம் சிறப்புக் காரணங்களைச் சொல்லலாம். இந்தக் கிராமத்தின் மக்கள்தொகை கடந்த ஐந்தாண்டில் மட்டும் 15 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இங்கு மூன்று மாடிக்கும் குறைவான வீட்டையோ அல்லது கடையையோ பார்க்க முடியாது. டாடா பிர்லாவை மிஞ்சும் அளவுக்கு எல்லாமே பல மாடிக் கட்டடங்கள்தான். இங்கு மக்கள்தொகை அதிகரிப்பதால், நிலத்தின் மதிப்பு மிக மிக அதிகம். ஒரு சதுர மீட்டர் 35 ஆயிரம் ரூபாய். மின்சாரமும் தண்ணியும் 24  மணி நேரமும் கிடைக்கின்றன.
உலகத்தரம் வாய்ந்த மெட்ரிக் பள்ளி, சிறப்பு வசதிகள் பெற்ற சுகாதார மையம், ஆன்மிகத்  தலங்கள் மற்றும் பலதரப்பட்ட தொழிற்சாலைகள் என இங்கு உள்ள சகல வசதிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா நகரங்களையும் விழுங்கிவிடும் அளவுக்கு டெக்னாலஜியிலும் சிறந்து விளங்குகிறது. இந்தக் கிராமத்தினர் பெரும்பாலானோர் `லேவா படேல்’ என்ற வணிகச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். வணிகத்தில் இவர்களை அடித்துக்கொள்ள ஆள்களே இல்லை என்றே கூறலாம். இப்படி இவர்கள் வணிகத் தந்திரத்தில் சிறந்து விளங்குவதற்கு, இந்தக் கிராமத்தின் அமைப்பும் சூழ்நிலையுமே முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. 
400 வருடங்களுக்கு முன்பு செளராஷ்டிரா பகுதியிலிருந்து `கட்ச்’ பகுதிக்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர். வணிகத்தில் தலைசிறந்த இவர்கள் கடல் கடந்து செல்கையில் கேட்கவா வேண்டும்? கிழக்கு ஆப்பிரிக்காவில் வியாபாரிகளாகவும், கொத்தனார்களாகவும், தச்சர்களாகவும், கூலிகளாகவும் வேலைசெய்து பெரும்செல்வத்தைச் சேர்த்தனர். பிறகு இவர்கள் தான்சானியாவில் உள்ள சான்சிபாரில் நிரந்தரமாகக் குடியேறினர். இதுதவிர, சோமாலியா, உகாண்டா, காங்கோ மற்றும் ரூவாண்டாவிலும் குடியேறினர். 1960-களிலில் அங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் புலம்பெயரத் தொடங்கினர். இப்படிக் குடியேறிய அனைவரும் தங்களின் தாய் மண்ணான மூதாதையர் கிராமங்களுடன் தொடர்பிலிருந்ததுதான் ப்ளஸ் பாயின்ட். அப்படி தொடர்பில் உள்ள கிராமங்களில் ஒன்றுதான் `மதாபர்’.
குஜராத் மாநிலத்தில் உள்ள பூஞ்-அஞ்சர் நெடுஞ்சாலைக்கு அருகில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புஜியோ மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்தக் கிராமம். மலைப்பகுதி என்பதால் சாதாரணமாகவே வசதிகள் சற்று குறைவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தை, சர்வசகலமும் நிறைந்த ஸ்மார்ட் கிராமமாக மாற்றியது புலம்பெயர்ந்து திரும்பி வந்த சொந்த ஊர் மக்கள்தான்.  
1900-களின் தொடக்கத்தில் லேவா படேல்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்குத் திரும்ப நினைத்தனர். அப்படித் திரும்பிய அவர்கள், பழைய கிராமத்துக்கு அருகிலேயே புதிய கிராமத்தை உருவாக்கினர். அதுமட்டுமல்ல, இங்கு வசிக்கும் 60 சதவிகித மக்கள் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் மினி சுவிஸ் பேங்க் அக்கவுன்டுக்குச் சொந்தக்காரர்கள்கூட. அதாவது இங்கு குவியும் டெபாசிட் தொகை காரணமாக, இந்தச் சிறிய கிராமத்தில் 25 வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனியார் வங்கிகள் தேசிய வங்கிகள் அனைத்தும் இங்கேயே போட்டிபோட்டுக்கொண்டு தங்களின் கிளையைத் தொடங்குகின்றன. அப்படி எவ்வளவுதான் இவர்கள் டெபாசிட் செய்கின்றனர் எனக் கேட்டால், குறைந்தபட்ச தொகையே இருபது லட்சம் ரூபாயாம். சமீபத்தில், வங்கிகள் வெளியிட்ட கணக்கின்படி, ஒட்டுமொத்தமாக இரண்டாயிரம் கோடி ரூபாயை இந்தக் கிராமத்தினர் சேமிப்புக்கணக்கில் போட்டுவைத்துள்ளனர். காரணம், இங்குள்ள மக்களின் தனிநபர் சராசரி வருமானம் 13 லட்சம் ரூபாய். இவர்கள் ஆண்டுதோறும் 10 முதல் 15 கோடி ரூபாயை நிரந்தர வங்கிக்கணக்கில் போட்டுவைக்கின்றனர். இப்போது சொல்லுங்கள், பணக்காரர்களுக்கு சுவிஸ் அக்கவுன்ட் என்றால், சாதாரண மக்களின் இந்தப் பகீர் கிளப்பும் வங்கிக்கணக்கை `மினி சுவிஸ் அக்கவுன்ட்’ என்றும் கூறலாம்தானே!

மேலும், அரசு இலவசமாகக் கொடுக்கும் எதையும் இவர்கள் வாங்குவதில்லை. `இலவசத்தை வாங்குவது பிச்சை எடுப்பதற்கு  சமம்’ என்பது இவர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று. அதற்கு எடுத்துக்காட்டாக, 2001-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தில், இந்தக் கிராமம் சில சேதாரங்களைச் சந்தித்தது. அதற்காக மத்திய அரசு, 20 கோடி ரூபாயை அங்கு இருக்கும் அஞ்சலகத்தில் உதவித்தொகையாக செலுத்தியது.  ஆனால், அந்தப் பணத்தை இதுவரை ஒருவர்கூட கேட்டு வரவில்லை என்பது இவர்களின் செழுமைக்குச் சாட்சி. இந்தியாவில் இருக்கும் மற்ற கிராமங்கள் எப்போதுதான் இந்த நிலையை அடையுமோ எனத் தெரியவில்லை! அனைவரும் வெளிநாட்டுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு மதாபர் மக்களைப்போல் நம் நாட்டுக்குச் சேவை செய்யத் தொடங்கினாலே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆனால், இந்த ஜிஎஸ்டி பிரச்னை என்னவாகும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? வேற லெவல்ல யோசித்தாலும் ஜனநாயக ஆட்சியின் தீர்ப்பே தீர்ப்புதான்! சரி விடுங்க… இந்தியாவை இன்றளவிலும் ஒரு பாம்பாட்டி நாடாக நினைக்கும் அந்நிய தேசர்களுக்கு மதாபர் ஒரு சவுக்கடி.
கொண்டாடுவோம் கிராமங்களை!

நன்றி விகடன்

Leave a Reply