மணப்பாறையில் இறைச்சி கடைக்கு விற்கப்பட்ட காளைக்கன்று ஜல்லிக்கட்டு ஆர்வலர் விலை கொடுத்து வாங்கி சென்றார்

மணப்பாறை,

மணப்பாறையில் நடைபெற்ற சந்தையில் இறைச்சி கடைக்கு விற்கப்பட்ட காளைக்கன்றை ஜல்லிக்கட்டு ஆர்வலர் ரூ.450 கொடுத்து வாங்கி சென்றார்.

கன்றுக்குட்டி

மணப்பாறையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை மாட்டுச்சந்தை நடைபெறும். தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீடித்து வருவதால் பலரும் தங்களின் ஜல்லிக்கட்டு காளைகளை சந்தைக்கு கொண்டு வந்து அடிமாடுகளாய் விற்று வருகின்றனர். இந்நிலையில் சந்தைக்கு பிறந்து சில நாட்களே ஆன ஜல்லிக்கட்டு காளை இனத்தை சேர்ந்த கன்றுக்குட்டி ஒன்று விற்பனைக்கு வந்தது. அதை இறைச்சி கடைக்காக வாங்கி சிலர் கட்டி வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அந்த கன்றுக்கட்டி இறைச்சிக்கடைக்கு விற்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அதில் ஒருவரான பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் பிரபு என்பவர், இறைச்சிக்கடைக்காரர்களிடம் ரூ.450 கொடுத்து, அந்த கன்றுக்குட்டியை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றார். பால்குடி கூட மறக்காத நிலையில் இருந்த அந்த கன்றுக்குட்டியை பராமரித்து வளர்ப்பதற்காக, கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தெலுங்கப்பட்டியில் உள்ள ரூபல்லா கிருஷ்டி – சேவியர் தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது.

காளையாக உருவெடுக்கும்

அங்கு கன்றுக்குட்டி எதுவும் சாப்பிடாமல் சோர்வடைந்தது. இதையடுத்து ரூபல்லா கிருஷ்டி, தான் வளர்த்து வரும் பசுமாட்டின் பாலை கறந்து, பால் கூட்டுறவு சங்கத்துக்கு கொடுப்பதை நிறுத்தினார். அந்த பசுவிடம், கன்றுக்குட்டி பால் குடித்துக்கொண்டு அங்கும், இங்குமாக துள்ளித்திரிகிறது.

இது குறித்து ரூபல்லா கிருஷ்டி கூறுகையில், ஜல்லிக்கட்டு என்றால் எங்களுக்கு அலாதி பிரியம். நாங்கள் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறோம். இந்நிலையில் எனது தம்பி மணப்பாறை மாட்டுச்சந்தையில் இறைச்சிக்கடைக்கு இளங்கன்று விற்கப்பட்டதை அறிந்து, அதை வாங்கி கொண்டு என்னிடம் கொடுத்தார். நான் மகிழ்ச்சியோடு அதை பராமரித்து வருகிறேன். அதை நான் வளர்த்து வரும் ஒரு பசுமாட்டிடம் விட்டு பால்குடிக்க வைத்து வருகிறேன். மேலும் கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கனிகளை துண்டு துண்டாக வெட்டியும் கொடுத்து வருகிறேன். விரைவில் கன்று திடகாத்திரமான காளையாக உருவெடுக்கும். சரியான நேரத்தில் பார்க்கவில்லை என்றால் பச்சிளம் கன்று அறுக்கப்பட்டிருக்கும், என்றார்.

 

dailythanthi

Leave a Reply