நல்ல செய்தி

ராபர்ட் வின்சென்சோ என்பவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு மிகப் பெரிய கோல்ப் வீரர். மிகப் பெரிய சாதனையாளர். பல பாராட்டுக்களையும் பதக்கங்களையும் குவித்தவர்.

ஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகையையும் கோப்பையும் பெற்ற பிறகு வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் காரில் ஏறப்போன நேரம் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன் ஒரே குழந்தை மருத்துவமனையில் சாகக் கிடப்பதாகவும் ஆப்பரேஷன் மற்றும் டாக்டர் பீசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் அழுது புலம்பினாள்.

அவளுடைய கதையை கேட்ட ராபர்ட் வின்சென்சோ அவளுக்காகவும் அவள் குழந்தைக்காகவும் மிகவும் இரக்கப்பட்டு அந்த போட்டியில் அவர் வெற்றி பெற்ற தொகையான ரூ.10 லட்சத்தை ஒரு செக்காக அவள் பெயருக்கு எழுதி, “இந்த பணத்தை கொண்டு உன் குழந்தையை முதலில் காப்பாற்று! All the best!!” என்று கூறி அப்படியே அங்கேயே அவளுக்கு கொடுத்துவிட்டார்.

 

சில நாட்கள் கழித்து ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராபார்ட் வின்சென்சோ சென்றபோது அங்கே கோல்ப் சங்கத்தின் செயலாளரை சந்திக்க நேர்ந்தது.

செயலாளர் சிரித்துக்கொண்டே இவரிடம், “சென்ற வாரம் பார்க்கிங்கில் உங்களைப் பார்த்த யாரோ ஒரு பெண்ணின் குழந்தையின் மருத்துவ செலவுக்காக நீங்கள் அப்போது வாங்கிய பரிசுத் தொகையை அப்படியே கொடுத்துவிட்டீர்களாமே… என் நண்பர்கள் சிலர் சொன்னார்கள்….”

“ஆமா… அதற்கு என்ன?”

“உங்களுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறேன்… அவள் ஒரு ஃபிராடு. நடத்தைகெட்டவள். அவளுக்கு உடல்நலமில்லாத குழந்தையெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவளுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. உங்களை சரியாக ஏமாற்றியிருக்கிறாள்!”

ராபர்ட் வின்சென்சோ கேட்டார்…. “அப்படியென்றால் உயிருக்கு போராடும் குழந்தை என்று யாருமில்லையா?”

ஒரு வித நக்கல் கலந்த தொனியில் “இல்லை!” என்று பதிலளித்தார் செயலாளர்.

“இந்த வாரத்திலேயே நான் கேட்ட மிக நல்ல செய்தி இது தான் சார்! ரொம்ப நன்றி!!” என்றார் ராபர்ட் வின்சென்சோ சிரித்துக்கொண்டே.

உங்களுக்கு வருவது நல்ல செய்தியா கெட்ட செய்தியா என்பது நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொருத்தது.

இரக்கப்படுபவன் ஏமாந்துபோகலாம். ஆனால் தாழ்ந்துபோவதில்லை.

இரக்க குணமே உங்கள் பலவீனம் என்றால்… காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள், ‘உலகிலேயே நீங்கள் தான் மிகப் பெரிய பலசாலி!’

Leave a Reply