நம்பிக்கைதானே வாழ்க்கை

ஏழாம் வகுப்பு வேலனும்…. பள்ளிக் கட்டணமும்!

————————————————–
எனக்கும் என் மனைவிக்கும்   ஒரு பேராசை உண்டு.. அது சொந்த செலவில் குறைந்தது ஒரு பத்து மாணவர்களையாவது படிக்க வைக்க வேண்டும் என்பது. 
ஆனால் துண்டு விழும் இந்த பட்ஜெட் வாழ்க்கையில் அந்த பேராசை எப்போது சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. 
ஆனால் என்னால் முடியவில்லை என்றாலும், கல்வி கட்டநம் கட்ட முடியாமல் படிப்பு கேள்விக்குறியாகும் சூழல் கொண்ட யாரேனும் உதவிக்கேட்டால்  உலகம் முழுக்க இருக்கும் என் நண்பர்கள் யாரையாவது பிடித்து தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிடுவது வழக்கம். 
சில நாட்களுக்கு முன் அண்ணா நகர் மேக்ஸ் கடையில் துணி வாங்கிவிட்டு வெளியே வந்தபோது ஒரு சிறுவன் பூ கூடையுடன் வந்தான்.  இதுபோன்று வேலை செய்யும் சிறுவர்களை கண்டால் ”ஸ்கூலுக்கு போறியாடா..” என்றுதான் முதலில் கேட்பேன்.   அந்த சிறுவனிடமும் அதே கேள்வியக் கேட்டேன். “ ஆமா” என்றான்.  
என் மனைவி  ஏற்கனவே பூ வைத்திருந்தார் என்றாலும் அந்த சிறுவனுக்காக பூ வாங்கிக்கொண்டார். கிளம்பும்போது “அக்கா ஸ்கூல் பீஸ் கட்டணும்.. தருவீங்களா..” என்று கேட்டான். எவ்வளவுடா.. என்று கேட்டதற்கு ஐநூறு ரூபாய் என்றான். “சரி எந்த ஸ்கூல்னு சொல்லு.. நான் உங்க ஸ்கூலுக்கே போய் கட்டிக்கிறேன்..” என்று அவனிடம் விபரம் கேட்டேன்.
பெயர் வேலன்.. ஏழாம் வகுப்பு.. டேனியல் தாமஸ் ஸ்கூல்.. அரும்பாக்கம் என்று எந்த தயக்கமும் இல்லாமல் கடகடவென சொல்லிவிட்டு போனான். நானும் மறுநாள் கூகுளில் தேடி அந்த பள்ளியின் போன் நம்பருக்கு போன் பண்ணினேன். 
போனை எடுத்த பெண்ணிடம், “ உங்க பள்ளியில் ஏழாம் வகுப்பில் வேலன்னு ஒரு பையன் படிக்கானா.. அவனுக்கு பீஸ் கட்டணும்.. மொத்தம் எவ்வளவு கட்டணும்” என்று கேட்டேன்..”
நான் இதை சொல்லி முடித்ததும் தான் தாமதம்.. நான் நேரில் இருந்திருந்தால் அந்த அம்மா என் காலில் விழுந்திருப்பார் போல.. 
“அய்யோ.. சார்.. அப்படி ஒரு பையன் எங்க பள்ளியில் படிக்கவே இல்ல.. இதே மாதிரி  பலபேர் ஏற்கனவே கேட்டுட்டாங்க.. அந்த பையன் பொய் சொல்றான்.. ஆனா ஏன் எங்க ஸ்கூல் பெயரை சொல்றான்னு தெரியல.. ” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். வருத்தமாக இருந்தது.
அடுத்தமுறை அந்த பையனை பார்க்க நேர்ந்தால் கையில் அவன் கேட்ட அந்த ஐநூறு ரூபாயை கொடுத்து நல்ல ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு, “இனிமேல் இப்படி யாரிடமும் ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்று பொய்யாக பணம் கேட்காதே..” என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். 
ஏனெனில் நிஜமாகவே படிக்க ஆர்வமிருந்தும் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோன்ற  மாணவர்களின் படிப்பிற்காக நண்பர்கள் பலர்  உதவியிருக்கிறார்கள். இப்படி யாரோ ஒரு வேலன் தவறு செய்யும்போது அது படிப்பிற்காக ஏங்கும் பலரை பாதிக்கும்.
ஒரு ஸ்டோரிக்காக கெல்லீஸில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு (கூர்நோக்கு இல்லம்) சென்றிருந்தபோது தான் அதன் பொறுப்பாளர்களில் ஒருவரான சூர்யகலா மேடம் அறிமுகமானார். மெத்தனம் கொண்ட அரசு ஊழியர்கள் பலருக்கு நடுவில் அவர் ஒரு ஆச்சர்யம். 
அங்கு நன்கு படிக்கும் மாணவர்களது கல்விக்கென அவ்வப்போது உதவி கேட்பார். நானும் ஏற்பாடு செய்வேன். ஏற்கனவே அப்படி உதவி பெறப்பட்ட மாணவன் இப்போது ஆசிரியராக இருக்கிறார் என்பது மனதில் எப்போதும் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடந்த வாரம் ஒருநாள் அந்த இல்லத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்ஸிங் படிக்கும் மூன்று மாணவிகளின் கல்வி கட்டணத்திற்கான உதவியை கேட்டிருந்தார். நண்பர் எழுத்தாளர் வா.மணிகண்டனிடம் சொன்னேன்( Vaa Manikandan ) . கல்லூரியில் விசாரித்துவிட்டு மூன்று மாணவிகளின் கட்டணத்தையும் நிசப்தம் அறக்கட்டளை செலுத்தியது. நண்பர் ஜீவ கரிகாலன் ( ஜீவ கரிகாலன் ) தான் அந்த காசோலைகளை மாணவிகளிடம் ஒப்படைத்தார். 
அதேப்போல் அண்ணன் இயக்குனர் தாமிரா ( Thamira Kathar Mohideen ), மண்டபத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் பள்ளிக் கட்டணம் கட்ட தவிப்பது  குறித்து தகவலை பகிர்ந்து கொண்டார். அதை நண்பர்  Amjath Chandran ) கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் மொத்த கட்டணத்தையும்  கட்டிவிட்டார். 
இப்படி உதவி பெறுபவர்களிடம் ஒரு கண்டிசன் வைப்பதுண்டு.  அவர்கள் படித்து முடித்து வேலைக்கு செல்லும்போது நாளை அவர்களைப்போல் யாராவது ஒரு மாணவரின் படிப்புக்கு உதவி கேட்கும்போது செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கண்டிசன். 
படிக்கும் ஆர்வம் இருந்தும் பீஸ் கட்டமுடியாமல் தவிக்கும் தவிப்பை உணர்ந்தவர்கள் வேறொருவரின் படிப்புக்கு நிச்சயம் உதவுவார்கள் என்பது  நம்பிக்கை.. 
பார்க்கலாம்.. நம்பிக்கைதானே வாழ்க்கை.. 🙂
-கார்ட்டூனிஸ்ட் பாலா

17-8-16

Leave a Reply