கோவை To லண்டன் காரில்…

தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவாட்டத்திலிருந்து லண்டன் நகருக்கு காரிலேயே சென்று அங்கு இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட நான்கு பெண்கள் திட்டமிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் என்ற பெண் அங்கு உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு காரில் நீண்டதூர பயணம் செய்வது என்றால் அலாதி பிரியம்.

இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன்னர் காரிலேயே தாய்லந்து நாட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் காரிலேயே தனது மூன்று தோழிகளுடன் இணைந்து லண்டனுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இது குறித்து மீனாட்சி கூறுகையில், பெண் உரிமை மற்றும் ரோட்டரி கல்வி ஆண்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக லண்டனுக்கு காரிலேயே செல்ல இருக்கிறோம்.

இந்த கார் பயணத்தில் சீனா, மியான்மர், ரஷ்யா, போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக சென்று லண்டனை அடைய உள்ளோம் என கூறிய அவர் அடுத்த ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி தங்கள் பயணத்தை தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய சுதந்திர நாளன்று லண்டன் போய் சேருவோம் என கூறியுள்ளார்.

தினமும் 500 கி.மீ என்ற வீதத்தில் பயணம் செய்யவுள்ள இந்த நான்கு பெண்களும் கார் ஓட்டுவதில் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply