காகிதப்பை தயாரிப்பில் மூத்த குடிமக்கள்:

கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கண்காட்சியில், பிளாஸ்டிக் மறுசுழற்சி, பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் என ஏராளமான பயனுள்ள பொருட்கள் இடம் பெற்றன. அதில், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, வீணாகும் காகிதங்களால் செய்யப்பட்ட காகிதப் பைகளை பயன்படுத்தலாம் என சில முதியவர்கள் அறிவுரை கூறினர். அத்துடன், தாங்களே தயாரித்த காகிதப் பைகளை காட்சிக்கு வைத்து ஆச்சரியப்படுத்தினர்.

தள்ளாத வயதிலும் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த முதியவர்கள், கண்காட்சியோடு நின்றுவிடாமல், காகிதப் பைகள் தயாரிப்பை தொடர் பணியாக மேற்கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மலையடிவார கிராமம் மத்திபாளையம். இங்கு கோவை மாவட்ட நலச்சங்கம் என்ற அமைப்பின் கீழ் முதியோர் இல்லம் இயங்குகிறது.

கோவையைச் சேர்ந்த பல நன்கொடையாளர்கள் உதவியோடு, மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் இந்த இல்லம் இயங்குகிறது. 1992-லிருந்து இலவசமாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர்கள் தங்கியுள்ளனர். இயற்கையான சூழலும், அரவணைப்பும், பாதுகாப்பும் குறைவில்லாமல் இருந்தாலும், குடும்பங்களை விட்டுப் பிரிந்திருக்கும் சோகம் அனைவரது முகத்திலும் அழுத்தமாகப் படிந்திருக்கிறது. இருந்தாலும் சோகங்களை மறந்து சூழல் பாதுகாப்புக்காக தங்களது சிறு உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இல்ல மேலாளர் ரவிச்சந்திரன் கூறும்போது,

‘சத்தான உணவு, பாதுகாப்பான சூழல், பொழுதுபோக்கு என்ற வழக்கமான நடைமுறைதான் இருந்தது. இதனோடு மன இறுக்கத்தைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமென அவர்களாகவே முடிவெடுத்து காகிதப் பைகள் தயாரிப்பில் இறங்கிவிட்டனர். இப்போது 25 பேர் இங்கு தங்கியிருக்கிறார்கள். தங்களுக்கான நேரம் போக, மீதமுள்ள சமயத்தில் நாளிதழ்களையும், மற்ற காகிதங்களையும் வைத்து காகிதப் பைகளை தயாரிக்கிறார்கள்.

இதுவரை சுமார் 25 கிலோ வரை விற்றுள்ளார்கள். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, அனைத்து அளவுகளிலும் காகிதப் பைகளைத் தயாரித்துள்ளனர். ஒரு கிலோ காகிதப்பை ரூ.50-க்கு விற்கிறார்கள். அந்த தொகை அவர்களுக்கே செலவிடப்படுகிறது. காகிதப்பை தயாரிப்பே பெரிய பொழுதுபோக்காக இருப்பதால் மனதளவிலான அழுத்தங்களிலிருந்து அவர்கள் சிக்கிக் கொள்வதில்லை. ஒரு நல்ல நோக்கத்துக்காக உழைக்கும் திருப்தியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

விஷமாக மாறிவிட்டது

காகிதப்பை தயாரிப்பை கற்றுக் கொடுத்த முதியவர் திருமலைச்சாமி கூறும்போது, ‘எனது சொந்த ஊர் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி. மளிகைக் கடையில் எனக்கு பல வருட அனுபவம் இருப்பதால் காகிதப்பை செய்யத் தெரியும். முன்பெல்லாம் எந்த பொருள் என்றாலும் காகிதம், துணிப் பையில்தான் வாங்குவார்கள். பிளாஸ்டிக் வந்த பிறகு வசதியாகத் தெரிந்தது. ஆனால் அதுவே விஷமாக மாறிவிட்டது. மீண்டும் பழைய முறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். காகிதப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பல விதமாக அளவுகளில், அதிக எடைகளைத் தாங்கக்கூடிய வகையில் எளிமையாக காகிதப் பைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்கிறோம். இதைப் பயன்படுத்த பத்து பேர் முன்வந்தால் கூட அது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி’ என்கிறார் உற்சாகமாக.

குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மூத்த குடிமக்கள், காலம் கடந்துவிட்டோம் எனக் கருதாமல் சமூகத்துக்காக தங்கள் எஞ்சியுள்ள காலத்தை அர்ப்பணித்து வருகிறார்கள்.

Leave a Reply