கல்பசார்

குஜராத் மாநிலத்தில் ஸௌராஷ்ட்ரா பகுதிகளில் இருந்து நர்மதா, தாதர், மாஹி, சபர்மதி, மற்றும் ஏராளமான சிறிய ஆறுகளில் இருந்து ஆண்டுக்கு 1700 கியுபிக் மீட்டர் நீர் அரபிக்கடலில் காம்பே வளைகுடா எனப்படும் இந்த குறுகலான நீர் சந்தியில் வீணாக கடலில் கலந்துகொண்டு இருக்கின்றது.

இதனை தடுத்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தும்விதமாக கடலுக்குள் 35 கி.மீ. நீள பிரம்மாண்டமான உலகிலேயே மிகப்பெரிய அணையை 50 ஆயிரம் கோடி செலவில் அமைக்க குஜராத் அரசு திட்டம் வகுத்துள்ளது. 

கடல் நீர் உள்ளே வராமல் நல்ல தண்ணீர் இதில் சேமிக்கப்படுவதால் ஒரு சில வருடங்களில் இந்த அணை முழுவதுமே நல்ல தண்ணீராக மாறிவிடும். இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டால் இதில்  10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் நீரை சேமிக்கலாம். அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளிலும் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் இதன் நீரின் இருப்பு அதிகமாக இருக்கும்.
“கல்பசார்’ என்ற பெயரில் கட்டப்பட இருக்கும் பல்நோக்கு திட்டம் கொண்ட பிரமாண்ட அணையின் நீளம் 35 கி.மீ., ஆகும். பவநகரையும் சூரத் நகரையும் இணைக்கும் வகையில் அணையை யொட்டி 10 வழிச்சாலையும், சாலை நெடுகிலும் காற்றாலை மற்றும் சூரிய மின்சார பேனல்களும் ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளன. இந்த இரு நகரங்களுக்கு இடையே சாலை மற்றும் ரயில் வழியாக தற்போதுள்ள தூரம் 350 கி.மீ., ஆகும். இந்த அணை அமைக்கப்பட்டால் பவநகர் – சூரத் இடையே உள்ள தூரம் 150 கி.மீ.,யாக அமையும். 200 கி.மீ., தூரம் குறைகிறது. இதனால் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பவநகரில் இருந்து, தெற்கு குஜராத்தில் உள்ள சூரத் நகரத்திற்கு ஆமதாபாத் வழியாக சுற்றிச் செல்வது தவிர்க்கப்படும். அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்த திட்டத்தினால் குஜராத் மட்டுமல்லாமல் மஹாராஷ்ட்ரா மாநிலமும் பயன்பெறும்.
இதெல்லாம் நமக்கு எதுக்குசார், நமக்கு அந்த 10 ரூவா அம்மாத் தண்ணியும் டாஸ்மாக்கும் இருக்கே அது போதாதா என்கிறீர்களா?
 குஜராத் நரேந்திர மோடியின் அசரவைக்கும் நீர் மேலாண்மை 

குஜராத்தில் சுமார் 200 ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. நர்மதா ஆறு குஜராத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம். ஆனால், அந்த ஆறு குஜராத்தின் தென்கிழக்கு எல்லையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி விட்டது. ஆனால், மோடியின் அரசு அசந்து போகவில்லை. மிகப் பெரிய கால்வாய்களை வெட்டி, 8 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட பைப்புகள் மூலம் அந்தத் தண்ணீரை குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று, பஞ்சத்தையும் வறட்சியையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. 156 சுத்திகரிப்பு நிலையங்கள், 11 ஆயிரம் பம்ப்பிங் ஸ்டேஷன்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விநியோக குழாய்கள் மூலம், 75 சதவிகித மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு உத்திரவாதம் தந்துள்ளது குஜராத் அரசு. அதே நேரம் குடிநீருக்காக 2000-ல் பயன்படுத்தப்பட்ட 1,146 ஆழ்துளை கிணறுகள், 2011-ல் 207 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு சமவெளி நீரை அதிகரித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கிறது குஜராத். 

அரசு குடிநீர் கொடுக்கிறது என்பது மட்டுமில்லை; அதை முழுமையான தரத்துடன் கொடுக்கிறது என்பதுதான் குஜராத்தின் கூடுதல் சிறப்பு. தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் இடைவிடாது தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு சொல்லும் குடிநீர் தரத்தை விட, சிறந்த தரத்தில் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு.

எந்த முயற்சியையும் அரசாங்கம் தனியே செய்வதில்லை என்பதுதான் குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். எந்தத் திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அனுகூலங்களை விவரித்து, அதை அவர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விடுகிறது குஜராத் அரசு. ‘இது ஏதோ அரசு பணத்தில், அரசு நிறைவேற்றும் திட்டம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படாமல், இது நமது பணத்தில், நமக்காக நடக்கும் திட்டம்; இதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குத்தான் உள்ளது’ என்ற எண்ணம் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் குஜராத் வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது. “Users are the best managers” என்பதுதான் குடிநீர் விஷயத்தில் குஜராத்தின் தாரக மந்திரம். 

கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தரமான குடிநீரை ஒதுங்கிப் போன கிராமங்களில் கூட, வீட்டுக்கு வீடு வழங்கும் குஜராத் அரசு, அதில் ஒரு சொட்டு நீரைக் கூட இலவசமாகக் கொடுப்பது கிடையாது. பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மாதம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ‘தினசரி ஒரு ரூபாய்’ என்ற திட்டம்தான் குஜராத் முழுக்க பாப்புலர்.

இதைவிட அற்புதமான விஷயம் இந்த நீர் விநியோகத்தை நவீன மயமாக்கி வைத்திருப்பதுதான். எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் சப்ளை நடக்கிறது. தனி நபருக்கு குளிக்க, சமைக்க என தினசரி 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த கிராமத்தை குறிப்பிட்டு, 7,000 லிட்டர் தண்ணீர் என்று பட்டனை அமுக்கினால், அந்த கிராமத்தில் உள்ள டேங்கில் 7,000 லிட்டர் தண்ணீர் மட்டும் உடனே நிரப்பப்பட்டு, வால்வு தானாக மூடிக் கொள்கிறது. அந்த 7,000 லிட்டர் தண்ணீரை கிராம சபை ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை லிட்டர் என்று பட்டன் மூலமே சப்ளை செய்து விடுகிறது.

‘வீட்டில் விசேஷம், உறவினர் வருகிறார்கள்; இன்றைக்கு 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் வேண்டும்’ என்று கோரி, நாம் கிராம சபையில் உரிய பணத்தைக் கட்டினால், அன்றைக்கு மட்டும் நம் வீட்டு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் கொட்டும். கேட்கவும், பார்க்கவும் ஆச்சரியமாய் இருந்தது. ஓவர் டேங்க் நிரம்பின பிறகு வால்வு தானாய் மூடிக் கொண்டாலும், கிராம அலுவலர்களுக்கு ‘டேங்க் நிரம்பி விட்டது’ என தானாகவே எஸ்.எம்.எஸ். வேறு வருகிறது. 

“நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமாவது குடிநீருக்கென்று 2,745 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு ஒதுக்கியுள்ளோம். இந்தியாவின் மழை நீர் சேகரிப்பு 17 சதவிகிதம். ஆனால், குஜராத்தில் மழைநீர் சேகரிப்பை 72 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும், எங்கள் அரசு இதோடு திருப்தியடைந்து விடவில்லை. அடுத்த 20 வருடங்களை மனதில் வைத்து இப்போதும் கூட 3,200 கோடி ரூபாய் செலவில் மேலும், மேலும் பைப் லைன்கள் பதித்து வருகிறோம்” என்று குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹெச்.கே.தாஸ் ஐ.ஏ.எஸ்., விவரித்தார்.

“பெரிதாக சிந்தி; காலத்தை நிர்ணயம் செய்; நிதி ஒதுக்கு; ஈடுபாட்டோடு உழை; வெற்றியை உனதாக்கு” – இதுதான் குஜராத் திட்டங்களுக்கான ஆதார மந்திரம்.

இந்த நீர் மேலாண்மையில் தமிழகம் எப்படி இருக்கிறது 👹👹??

Leave a Reply