‘ஒரு இந்தியக் குடிமகளாக எனக்கு உண்மை தெரிய வேண்டும்!’ – கெளதமி பேட்டி

‘மேடம் நீங்க அகில இந்திய பி.ஜே.பி. இளைஞரணி செயலாளராக இருந்தப்போ நான் உங்களை பேட்டி எடுத்து இருக்கேன்…’ என்று சொன்னவுடன் கெளதமி முகத்தில் ஆனந்த ஆச்சர்யம். ‘அது நடந்து 21 வருஷமாச்சுங்க அதுக்கப்புறம் அரசியலுக்கும் எனக்கும் துளிகூட சம்மந்தமே இல்லை’ என்று பதில் சொன்னவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்து திடீரென பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பற்றி கேட்டோம்.

”தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியாவே எழுந்து நின்று பிரமிச்ச ஜாம்பவான், லெஜன்ட் நம்ம முதல்வர் ஜெயலலிதா மேடம். அவருக்கு நேர்ந்த இறப்பு சம்பவத்தை யாரோ ஒருத்தருக்கு நிகழ்ந்த சாதாரண சம்பவமா எடுத்துக்க முடியாது. ‘முதல்வருக்கு என்னதான் ஆச்சு? எப்படித்தான் இறந்தாங்க?’ என்கிற கேள்வியை நாட்டுல இருக்குற எல்லோரும் சத்தமா கேட்குறாங்க. இன்டர்நெட், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இப்படி எதைப் பார்த்தாலும் மேடம் மரணத்தைப்பற்றிய நியூஸைத்தான் ஷேர் பண்ணிக்கிறாங்க.
எங்களோட முதல்வர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விவரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். என்னோட தனிவாழ்க்கை, பொதுவாழ்க்கை எதுவாக இருந்தாலும் பத்துபேரை கலந்து ஆலோசிச்சு அப்புறமாக முடிவு எடுக்க மாட்டேன். எப்போதுமே சுயமா நானே யோசிச்சுத்தான் முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் கடிதம் எழுதியிருக்கேன்.

‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெ,.அண்ணன் மகள்?’ – சசிகலா எதிர்ப்பின் அடுத்த திட்டம்
நீங்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய சம்பவம் குறித்து?

நிறைய தடவை பல்வேறு நிகழ்ச்சி குறித்து முதல்வரை நேரில் பார்த்து இருக்கிறேன். என்னவென்று லிஸ்ட்போட விரும்பலை. மீடியாவுல இருக்கிற எல்லோருக்கும், அது நல்லாவே தெரியும். ஒவ்வொரு முறையும் அவரோட பேச்சு, மேனரீஸம், கம்பீரம் எல்லாத்தையும் பிரமிச்சு பார்த்து ரசித்து இருக்கேன். மேடம் இறந்த பிறகு அவர்மீது இருக்குற அன்புக்காக மக்கள் குறிப்பா சிறுமி முதல் வயசானவங்கவரை எல்லோருமே தங்களோட குடும்பத்துல இருந்த ஒருத்தரை பறிகொடுத்த மாதிரி கண்கலங்கி அழும் காட்சியை பார்க்கிறேன்.

அப்போலோவில் நடந்தது உங்கள் நண்பர் வெங்கைய்ய நாயுடுவுக்கு தெரியுமே அவரிடம் நீங்கள் கேட்டு இருக்கலாமே?

நான் என்னோட அமைப்பு சார்பா பிரதமரை சந்திக்கிற கோரிக்கையை அமைச்சர் வெங்கைய்ய நாயுடு அவர்களிடம் சொன்னேன். நான் ஏற்கெனவே பி.ஜே.பி.-யில் இருந்ததை நினைவுபடுத்தி அன்பாகப் பேசி பிரதமர் மோடியின் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்தார். நம்மோட பிரதமரை சாதாரண குடிமகனும் ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் சுலபமா அணுகலாம். அதன்படி, நம்மோட முதல்வருக்கு என்னதான் ஆச்சு? என்பதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதறதுதான் முறை அதைத்தான் நான் செய்தேன்.

தற்போது பி.ஜே.பி-யில் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா?

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நான் அரசியல்வாதி இல்லை. அந்த அடிப்படையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதவும் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் மனதில் இருக்கும் கேள்வியைத்தான் என்னோட கடிதம் வாயிலா பிரதிபலிச்சு இருக்கேன். நான் ஒரு இந்திய சிட்டிசன் என்னை அரசியல்வாதி கோணத்துல பார்க்கவே பார்க்காதீங்க.

ஜெயலலிதாவை இழந்து நிற்கும் அ.தி.மு.க-வின் எதிர்காலம் என்ன? ஆட்சி எப்படி நடக்கும்?

முதல்வரைவிட்டு தொலைவில் இருக்குற தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதா மேடம் மேல உயிரையே வெச்சிருக்காங்க. மேடம் பக்கத்துலேயே இருந்த அ.தி.மு.க-வினர் அவங்கமேல் எவ்வளவு பாசம் வெச்சு இருப்பீங்க. உதாரணத்துக்கு மேடம் இறந்தது ஒரு துரதிஷ்ட சம்பவம் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாட்டுல துளிகூட சட்டம் ஒழுங்கு கெடவில்லை. அந்தளவுக்கு மேடம் அமைதி பூங்காவா தமிழ்நாட்டை வெச்சிருக்காங்க அதே அமைதியை அவங்க கட்சிக்காரங்களும் தொடரணும்னு கேட்டுக்கறேன்.

– சத்யாபதி

விகடன்

Leave a Reply