எங்கும், எதிலும் கலப்படம்

“எங்கும், எதிலும் கலப்படம்!”
அதிரடிக்கிறார் டாக்டர் அனுராதா

————————————–
சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர், டாக்டர் அனுராதா. தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக ஒப்பீட்டு அளவில் மற்றெந்த மாவட்டங்களைக் காட்டிலும் அதிகளவில் உணவுக்கலப்படம் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டவர். “புதிய அகராதி” இதழின், ‘முதல் பயணம்’ பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். சந்திப்பிலிருந்து சில பகுதிகள்…
புதிய அகராதி:  சந்தையில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் எந்தளவுக்கு தரம் இருக்கிறது?
அனுராதா: ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் சுவைக்காக 1 மி.கி.: 100 கிராம் என்ற விகிதத்தில் அஜினோமோட்டோ உப்பு சேர்க்கலாம் என சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கு முன்னணியில் உள்ள எல்லா பெரிய ஹோட்டல்களிலுமே இந்த அளவு மீறப்பட்டுள்ளது.
 இன்னொரு அதிர்ச்சி என்னவெனில், சேலத்தில் உள்ள முன்னணி சைவ உணவகம் ஒன்று, பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை ‘பாக்கிங்’ செய்து மீண்டும் சிறு உணவக கடைக்காரர்களிடம் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்திலும், ஏற்காட்டிலும் உள்ள பல பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
 கலப்பட டீத்தூள், காலாவதியான பிஸ்கட் பாக்கெட், சுத்திகரிக்கப்படாத குடிநீர், அயோடின் இல்லாத உப்பு என எல்லாவற்றிலும் கலப்படமும், அலட்சியமும், விதிமீறல்களும் இருக்கு என்பதே உண்மை. 
சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலைகள் அதிகம். மரவள்ளி கிழங்கு தோலில் ஹைட்ரஜன் சைனிக் ஆசிட் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதனால் கிழங்கு தோலை சீவி விட்டுத்தான் அரைக்க வேண்டும். ஆனால், சேகோ ஆலை அதிபர்கள் அப்படி செய்வதில்லை. ஜவ்வரிசிக்கு வெண்மை நிறம் கிடைக்க சோடியம் ஹைட்ரோ குளோரிக் ஆசிட், சல்ஃபியூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், டினோபால் ஆகிய கெமிக்கல் கலக்கின்றனர். இப்படி தயாராகும் ஜவ்வரிசியைத்தான் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். 
வெல்லம் உற்பத்தியாளர்களும் இதேபோல் கெமிக்கலை பயன்படுத்துகின்றனர். தொடர் கள ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகளை கண்டுபிடித்து எச்சரித்தோம். ஆனால், யாரும் திருந்தியபாடில்லை. 
பு.அ.: ஜவ்வரிசி ஆலை அதிபர்கள் உங்களுக்கு எதிராக போராடினார்களே?
அனுராதா: ஆமாம். அப்போது ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நேரம். ஜவ்வரிசி ஆலை அதிபர் ஒருவர் எனக்கு தொடர்ந்து ஃபோனில் மிரட்டல் விடுத்தார். பெண் என்றும் பாராமல் என்னையும் குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டினார்.
 அப்போது, இதை நினைத்து தனிமையில் அழுதிருக்கிறேன். ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளி ஒருவரிடமும் புகார் செய்தார். ‘இடைத்தேர்தல் முடிந்தவுடன் உன்னை இங்கிருந்து தூக்கி காட்டுகிறேன் பார்’ என சவால் விட்டார். 
சவாலில் அவர்தான் ஜெயித்தார். என்னை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே இடமாற்றம் செய்தனர். இது ஒருவகையில் பதவி இறக்கமும்கூட. இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் தடை ஆணை பெற்றதால், இன்னும் இப்பணியில் தொடர்கிறேன். 
பு.அ.: ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்கூட மிரட்டியதாக செய்திகள் வந்தது….
அனுராதா: அந்த ரியல் எஸ்டேட் அதிபர் நெல்லிச்சாறு வணிகத்திலும் ஈடுபட்டு வந்தார். எங்களது ஆய்வில் அரை லிட்டர் நெல்லிச்சாறில் 50 மி.லி. மட்டுமே நெல்லிச்சாறு; மீதமுள்ள 450 மி.லி.யும் தண்ணீர், ஆஸ்கார்பிக் ஆசிட், பென்சாயிக் ஆசிட் கலவை என்பது தெரிய வந்தது. மறு ஆய்விலும், அந்த பானம் உடலுக்கு தீங்கானது என்பதை உறுதி செய்தோம். இதற்கிடையே அந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்னை ஃபோன் மூலமும், வேறு ஆட்கள் மூலமும் மிரட்டினார்.
 ஆய்வு நடவடிக்கையைக் கைவிடுமாறுகூறி ‘பேரம்’ பேசினர். அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். மற்றொரு அதிகாரி அந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க தாமதித்ததால் அவர் தலைமறைவாகி விட்டதாக மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வந்தது. விரைவில் நெல்லிச்சாறு அதிபர், தயாரிப்பாளர் உள்ளிட்ட மூவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். 
பு.அ.: நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளின் நேர்மை மீதும் கல்லெறிவார்களே?
அனுராதா: ம்…..என் நேர்மை மீதும் விமர்சனங்கள் வந்தன. ஒருவரிடம் இருந்து ‘அன்பளிப்பாக’ ‘ஆடி’ கார் வாங்கியதாகவும் சொன்னார்கள். புகார் செல்பவர்கள் அதற்கான ஆதாரங்களை கொடுக்கட்டுமே? நெல்லிச்சாறு பானம் வினியோகஸ்தரான ரியல் எஸ்டேட் அதிபர், ஆளுங்கட்சி அரசியல் புள்ளியிடம் பேசுமாறு ரொம்பவே அழுத்தம் கொடுத்தார். 
அவர் தரப்பில் பேசிய சிலர், ஒரு ‘பெரிய தொகையை’ பேரம் பேசினர். எதற்கும் நான் வளைந்து கொடுக்கவில்லை. ஆனால், அதன் பயன் வேறு யாருக்காவது கிடைத்து இருக்கலாம்.
பு.அ.: உணவுப் பாதுகாப்பு அலுவலராக 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன?
அனுராதா: ஊஹூம். ஒண்ணுமே இல்ல. ஆய்வுக்குச் சென்றால் அடுத்த சில நாட்களுக்கு எல்லோருமே விதிகளுக்கு உட்பட்டு நடப்பார்கள். இங்கு எதுவுமே மாறவில்லை. மாற்ற முடியவில்லை. நான் ஒருத்தி மட்டும் நேர்மையாகச் செயல்பட்டால் போதாது. அரசியல் தலையீடு, அதிகாரிகள் தலையீடு காரணமாக எந்த விதிமீறலையும் தடுக்க முடியவில்லை. ஆங்….ஒன்றைச் சொல்லலாம்….
சேலத்தில் கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு வந்தது. என் தொடர் ஆய்வுகள் மூலம் இப்போது கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைப்பது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 

தொடர்புக்கு: 9443520332.
(மேலும் விரிவான தகவல்கள், ‘புதிய அகராதி’ செப்.-2016 இதழில். தொடர்புக்கு: 9840961947. பதிவிட்டது: 13/09/16)

………………………..

Leave a Reply