இறைவனின் மரணம்

இறைவனின் மரணம்.. !


சமீபத்தில் ஒரு இஸ்லாமிய நண்பர் ஒருவர் ஒரு மாணவனின் கல்வி கட்டண உதவிக்காக தொடர்பு கொண்டார். விபரம் கொடுங்கள்.. கல்லூரியில் விசாரித்துவிட்டு சரியான மாணவன் என்றால் நண்பர்களிடம் சொல்லி உதவ ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன். அப்போது  அவர், வருத்தமாக ஒரு தகவலை சொன்னார். 
அந்த மாணவன் படிக்கும் கல்லூரி ஒரு இஸ்லாமிய கல்லூரி என்பதால், அவருக்கு தெரிந்த இஸ்லாமிய தொழிலதிபர் ஒருவரிடம் அந்த மாணவனின் கல்வி கட்டணத்திற்காக உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார். 
தொழிலதிபரோ மாணவன் யார் என்று கேட்டிருக்கிறார். பிற மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும்.. ஸாரி.. இஸ்லாமிய மாணவன் என்றால் உதவலாம் என்று கூறியிருக்கிறார். இந்த பதிலை கேட்டு வெறுத்துப்போனப்பின்பே என்னிடம் உதவிகேட்டார். 
உடனடியாக நான் கல்லூரி தரப்பில் மாணவன் குறித்து விசாரித்துவிட்டு,  கல்வி தேவைக்காக உதவக்கூடிய என் நண்பர் பட்டியலில் இருக்கும் சகோதரர் அனந்தகிருஷ்ணன் ( Anantha Krishnan ) அவர்களிடம் தகவல் சொன்னேன். 
அவர் அந்த  மாணவன் யார்.. சாதி மதம் என்ன.. என்று எந்த பின்புலமும் கேட்கவில்லை. நான் சரியான நபர்களுக்குதான் உதவி கேட்பேன் என்ற ஒற்றை நம்பிக்கை..  மறுநாளே நேரடியாக கல்லூரி கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டார். 
மேற்கண்ட அந்த தொழிலதிபரின் செயலை அந்த இஸ்லாமிய சகோதரர் வேதனையோடு சொன்னபோது அவ்வளவு எரிச்சல் வந்தது. 
இப்படி மதவெறி சாதிவெறி பிடித்து சில ஜன்மங்கள் எல்லா சாதி மதங்களிலும் இருக்கின்றன.. உதவி கேட்பவன் என்ன சாதி என்ன மதம் குலம் கோத்திரம் பார்த்து செய்வதற்கு பெயர் உதவியில்லை சாமீகளா.
இப்படியானவர்கள் இறைவன் எங்கிருக்கிறான் என்பதை அறியாமல்..  மெக்காவுக்கும் கைலாயத்துக்கும் ஜெருசலேத்துக்கும் சென்று இறைவனை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. 
அல்லாவின் கருணை குறித்தும் சிவனின் அன்பு குறித்தும் இயேசுவின் இரக்கம் குறித்தும் இவர்கள் போதிக்கும்போது 
அந்த இறைவன் மரணிக்காமல் என்ன செய்வான்.. 🙁
-கார்ட்டூனிஸ்ட் பாலா

30-8-16

Leave a Reply