இந்த மனிதர்களுக்குத்தான் வாழ்க்கை மீது எவ்வளவு பிடிப்பு

இன்று மதியவேளை கதீட்ரல் ரோடு சிக்னல் நிறுத்தத்தில் என் கார் நின்றது.

 வழக்கத்தை விட அதிகமான வெயில் என்பதால் சுற்றியிருந்த வாகனங்களில் இருந்தவர்களிடம் சற்றே சிடுசிடுப்பு. 

அப்போது காற்றை கிழித்துக்கொண்டு வந்து அருகே நின்றது ஒரு வேன். அடுத்த சிக்னல் வரை கேட்கும் அளவுக்கு சத்தமாக அதிலிருந்து வெளிவந்த 

தேனிசை தென்றல் தேவா ஹிட்ஸ் காற்றில் கலக்க தொடங்கியது.கைத்தட்டல் ஓசை, ஆடல்,பாடல் என்று அமர்க்களப்பட்டது.

உள்ளே அத்தனைப்பேரும் திருநங்கைகள். ஸ்கூல் குழந்தைகள் சுற்றுலா செல்வதைப் போன்றதொரு ஆர்பரிப்பு அவர்களிடம்.

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வந்திருந்த திருநங்கைகள் கூட்டம் அது.

இப்போது அந்த உற்சாகம் மெள்ள சிக்னலில் நிற்போரையும் பற்றுகிறது. அதுவரை ஆட்டோ கட்டணம் பற்றி புலம்பி தீர்த்த ஆட்டோக்கார அண்ணன் கைத்தட்டி குதூகலிக்கிறார். அதை பார்த்து பஸ்ஸில் இருந்த குழந்தை கெக்க பிக்கவென சிரிக்கிறது.

அதுவரை வெயிலுக்கு முக்காடிட்டு வாடியிருந்த டூவீலர் அக்காவின் முகம் தன் கணவரின் தோள் மேல் புதைந்து வெட்கச் சிரிப்பை உதிர்க்கிறது.

சட்டென்று மாறுகிறது அந்த இடத்தின் மனநிலை. இப்போது எல்லார் கண்களிலும் ஒருவித சகாயம் எட்டி பார்க்கிறது.
பச்சை சிக்னல் விழுந்து வாகனங்கள் கலைய தொடங்க ,அதே உற்சாகம் சற்றும் குறையாமல் மெரீனா கடற்கரைச் சாலையை நோக்கி வேகமெடுத்து மறைகிறது அந்த வேன்.
வறுமை, உழைப்புச் சுரண்டல், சமூக நீதி மறுப்பு, அவமானம், பாலியல் தொந்தரவு என்று நம்மை விட எத்தனையோ அவலங்களை சந்திக்கும் 

இந்த மனிதர்களுக்குத்தான் வாழ்க்கை மீது எவ்வளவு பிடிப்பு! 
சத்தியமாக சொல்கிறேன் அக்காமார்களே, நீங்கள் மூன்றாம் பாலினம் அல்ல; வாழ்க்கை நம்மை எவ்வளவு சுரண்டினாலும் அதனை உற்சாகத்தால் நிரப்ப தெரிந்த முதல் பாலினம்!!

Leave a Reply