அவுன்ஸ் தங்கம்

நவம்பர் 25, 1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை நெசவாளியின் குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகி. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு வரை தான் கார்னகியால் படிக்க முடிந்தது. அதுகூட பாதிவரை தான். பொருளில் தான் கார்னகியின் குடும்பத்தாருக்கு வறுமையே தவிர சிந்தனையில் அல்ல. எனவே நல்ல நல்ல நூல்களை படிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கார்னகியின் குடும்பத்தினர் வறுமையில் உழன்றபடியால், பெரும்பாலும் தன் பள்ளி புத்தகங்களை இரவல் வாங்கித் தான் அவர் படித்தார். அவர் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்து வீடுகளில் இரவல் வாங்கித் தான் படித்தனர். ஆனால் இன்று? பதிவின் கடைசியில் பாருங்கள்!

1848 இல் கார்னகி அமெரிக்காவில் குடியேறினார். அப்போது அவருக்கு வயது 13. அப்போது அவருக்கு ஒரு தொழிற்சாலையில், வாரம் ரூ.10/- சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதற்கு பிறகு பென்சில்வேனியா ரயில்வே நிர்வாகத்தில் தபால் தந்தி துறையில் ஆப்பரேட்டர் வேலை கிடைத்தது. தனது உழைப்பால் படிப்படியாக SUPERINTENDENT நிலைக்கு கார்னகி உயர்ந்தார்.

அப்போது பல துறைகளில் முதலீடு செய்தார் கார்னகி. மிகுந்த சாதுரியத்துடன் முதலீடு செய்த கார்னகி, கச்சா எண்ணையில் செய்த முதலீடு மட்டும் பன்மடங்கு லாபத்துடன் திரும்ப கிடைப்பதை உணர்ந்துகொண்டார். அதற்கு பிறகு ரயில்வே வேலையை உதறிவிட்டு வேறு பல திட்டங்களில் கால் பதிக்க தொடங்கினார்.

பத்தாண்டுகளின் முடிவில், அப்போது நன்கு வளர்ந்து வந்த ஸ்டீல் (எஃகு) தொழிலில் கால்பதித்தார். அவரின் முயற்சியால் கார்னகி ஸ்டீல் கம்பெனி என்கிற மிகப் பெரிய ஸ்டீல் சாம்ராஜ்ஜியம் உருவானது. அமெரிக்காவில் ஸ்டீல் உற்பத்தியில் ஒரு மிகப் பெரிய புரட்சியையே அவரது நிறுவனம் கண்டது. நாடு முழுதும் பல ஸ்டீல் தொழிற்சாலைகளை கார்னகி துவக்கினார். அப்போதிருந்த நவீன தொழில்நுட்பத்தையும் உற்பத்தி முறையையும் பின்பற்றி தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ஒவ்வொரு முறை அவர் தனது சிறகை விரிக்கும்போதும், அவருக்கு என்ன தேவையோ அதை அவர் வைத்திருந்தார். உதாரணத்துக்கு மூலப் பொருட்கள், மூலப் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல கப்பல்கள், ரயில் தடங்கள், ஏன் பர்னசை எரிக்க நிலக்கரி சுரங்கம் கூட வைத்திருந்தார்.

எதற்காகவும் அவர் பிறரை சார்ந்திருக்கவில்லை. இந்த சூட்சுமமானது அவரை உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியது. அவரால் அமெரிக்காவின் பொருளாதாரம் நன்கு உயர்ந்தது. இன்றைய அமெரிக்காவை வடிவமைத்த நவீன சிற்பிகளில் கார்னகியும் ஒருவர் என்றால் மிகையாகாது. 1889 வாக்கில் கார்னகி ஸ்டீல் கார்ப்பரேஷன் உலகிலயே மிக பெரிய நிறுவனமாக திகழ்ந்தது.

65 வயதை நெருங்கும் வேளையில், பணமும் பகட்டும் கசக்க, தனது எஞ்சியுள்ள வாழ்நாளை பயனுள்ளதாக கழிக்க விரும்பிய கார்னகி, ஜே.பி.மார்கனிடம் 200 மில்லியன் டாலருக்கு தனது ஸ்டீல் நிறுவனத்தை விற்றுவிட்டார். அதன் பிறகு தனது வாழ்நாளை அறப்பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் செலவிட ஆரம்பித்தார்.

இவரின் நன்கொடையால் பல நூலகங்கள் புத்துயிர் பெற்றன. நியூயார்க் பொது நூலகத்துக்கு மட்டும் 5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். இதன் மூலம் அது பல இடங்களில் கிளை நூலகத்தை தொடங்க முடிந்தது. அதற்கு பிறகு அவர் துவக்கியது தான் உலகப் புகழ் பெற்ற கார்னகி மெலான் பல்கலைக்கழகம். (இங்கு பல்கலைக்கழங்களை யார் துவக்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்??!) அமைதி விரும்பியான கார்னகி சமாதானத்தை வளர்க்கும் விதமாக கார்னகி சர்வதேச அறக்கட்டளையை துவக்கி அமைதிப் பணிகளுக்கு உதவலானார். ஒரு காலத்தில் புத்தகங்களை வாங்க காசின்றி இரவல் வாங்கி படித்த கார்னகியின் நன்கொடையால் மட்டும் பிற்காலத்தில் அமெரிக்காவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டனவாம்.

ஒரு முறை கார்னகியிடம் கேட்கப்பட்டது :

 

“எத்தனையோ பேரை உங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பீர்கள்… இப்படி ஒரு உச்சத்தை தொட மனிதர்களை எப்படி டீல் செய்தீர்கள்? அது சவாலான விஷயமாயிற்றே?”

அதற்கு பதிலளித்த கார்னகி கூறியதாவது: “மனிதர்களிடம் டீல் செய்வது என்பது தங்க சுரங்கம் தோண்டுவதை போல. சுரங்கம் தோண்டும்போது ஒரு அவுன்ஸ் தங்கம் கிடைக்க, டன் கணக்கில் அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இங்கு ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சுரங்கம் தோண்டும்போது நாம் தங்கத்தை தான் எதிர்பார்த்து செல்கிறோம். அழுக்குகள் நிறைய கிடைக்கும் என்பதால் அழுக்குகளை அல்ல!”

எத்தனை சத்தியமான வார்த்தைகள்! அந்த பதிலில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்…!!

Leave a Reply