ஃபேஸ்புக்கை அர்த்தமுள்ளதாய் மாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்மிதா

ஃபேஸ்புக்கை அர்த்தமுள்ளதாய் மாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்மிதா

ஸ்மிதா தண்டி சட்டிஸ்கர் மாநிலத்தின் சாதாரண பெண் போலீஸ் கான்ஸ்டபிள். இரு வருடங்களுக்கு முன்தான், ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கினார். தற்போது அவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடருகின்றனர். சட்டிஸ்கரின் எளிமை நிறைந்த முதல்வரான ராமன்சிங்குக்கே 10 லட்சம் ஃபாலோயர்ஸ்தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போதே ஸ்மிதா 7 லட்சத்தைத் தாண்டி முதல்வரை விரட்டிப் போய்க்கொண்டிருக்கிறார். ராமன்சிங்கோ மாநிலத்தின் முதல்வர். ஸ்மிதாவோ சாதாரண கர்ன்ஸ்டபிள்.

ஆனால் இருவருக்குமே ஒரே மனநிலைதான். ஒருவர் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு மக்கள் பணியாற்றி மக்களின் முதல்வர் என பெயர் எடுத்திருக்கிறார். இன்னொருவர் அரசுப்பணியில் இருந்து கொண்டு மக்கள் சேவையாற்றுகிறார். மக்கள் சேவையாளர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளை இத்தனை பேர் பின் தொடருகின்றனரா?.

அப்படி என்னதான் ஸ்மிதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கிறது என்று விசிட் செய்தால்,’ஒரு போலீஸ்காரர் தனது செயற்கை காலை கழற்றி சரி செய்து கொண்டிருக்கிறார்… டூட்டி இஸ் டூட்டி சார்… சல்யூட் சார் ‘ என்கிறது ஒரு பதிவு. ‘வாகனத்தின் ஸ்பீடா மீட்டரில் டிரைவர் ஒருவர் தனது மகனின் புகைப்படத்தை ஒட்டி வைத்திருக்கிறார். குறிப்பிட்ட வேகத்தை தாண்டி ஓட்டும் போது மகனின் முகம் நினைவுக்கு வரும் என்கிறது அதற்காக” மற்றொரு பதிவு. நோயுற்றவர்களுக்கு நிதி திரட்டுகிறது இன்னொருப் பதிவு. ஸ்மிதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படியாக பல பதிவுகள் நிறைந்திருந்தன.ஸ்மிதாவின் இந்த பதிவுகளுக்கு பின்னால் ஒரு துயரக் கதையும் இருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதா சட்டிஷ்கர் போலீசில் இணைந்தார். ஸ்மிதாவின் தந்தை சிவகுமாரும் போலீஸ் கான்ஸ்டபிள்தான். தந்தை சிவகுமார் விபத்தில் சிக்கி உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. போலீஸ் துறையில் கட்டாய ஓய்வு அளித்திருக்கிறார்கள். வேலையும் போய் விட்ட நிலையில் முறையான சிகிச்சையும் பெற முடியாமல் அரசு மருத்துவமனையில் அனாதை போல சிவகுமார் இறந்து போய் விட்டார். தந்தையின் இறப்பும் அவர் அனுபவித்த அவஸ்தைகளும் ஸ்மிதாவின் மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. நம்மைப் போலவே இந்த நாட்டில் பலரும் முறையான சிகிச்சை அளிக்க முடியாமல்தானே இருப்பார்கள் என்ற வருத்தம் ஸ்மிதாவுக்குள் மேலோங்கியிருக்கிறது. அப்படி வசதி இல்லாதவர்களுக்காக ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களின் வழியாக நிதி திரட்டலாமே எண்ணம் அவருக்குள் உதித்திருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு தனது தோழிகளுடன் இணைந்து ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்தார். இப்போது ஓடி ஓடி ஒவ்வொருவருக்கும் உதவி வருகிறார்.
இது குறித்து ஸ்மிதா கூறுகையில், ” எனது தந்தை பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். அந்த அனுபவத்தை வைத்துதான் ஏழைகளுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பித்தேன். முதலில் எங்களை யாரும் நம்பவில்லை. நன்கொடைகள் வரவில்லை. ஆனால், நாளடைவில் எங்களை நம்ப ஆரம்பித்தனர். எனது போஸ்ட்டுக்கு ரெஸ்பான்ஸ்கள் லட்சக்கணக்கில் வரத் தொடங்கின. மக்கள் படிப்படியாக எங்களை நம்பத் தொடங்கியிருந்தனர். யாராவது நோயுற்று இருந்தால், அவர்களது வீடுகளுக்கே நேரடியாக சென்று உண்மை நிலையை கண்டறிந்து மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை சரி பார்த்த பின்னரே எனது பக்கத்தில் போஸ்ட் பதிவிடுவேன்” எனக் கூறும் ஸ்மிதா வாடகை வீட்டில் தாயுடன் வசிக்கிறார்.

கடந்த 20 மாதங்களில் ஃபேஸ்புக்கில் இவர் திரட்டிய நிதியை கொண்டு 25 ஏழைகளின் மருத்துவச் செலவுகளுக்கான பில்லை செலுத்தியுள்ளார். 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார். பிலாயை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் பிரதாப் சிங் ஸ்மிதாவின் சேவை குறித்து கூறுகையில், ” எனது 13 வயது குழந்தைக்கு புற்றுநோய் பாதித்திருந்தது. பிலாயில் உள்ள மருத்துவர்களால் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, ஸ்மிதா பற்றி கேள்விபட்டதால், அவரிடம் உதவி கேட்டு சென்றேன். ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டி எனது வீட்டுக்கே வந்து தந்தார். இப்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

ஸ்மிதாவின் சேவையை சட்டிஸ்கர் மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கீகரித்திருக்கின்றனர். அதனால் பிலாய் நகர போலீஸ்துறையில் சோசியல் மீடியாக்கள் ஹெல்ப் லைனில் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். ஸ்மிதா போலீஸ் கான்ஸ்டபிள் மட்டுமல்ல. மாநில அளவிலான வாலிபால் வீராங்கனையும் கூட.

எல்லோரும் பொழுது போக்கு என்ற ஒரே கோணத்தில் ஃபேஸ்புக்கை அனுகுகிறோம். ஸ்மிதா வேறு கோணத்தில் ஃபேஸ்புக்கை பார்த்திருக்கிறார். பார்வைதான் மாறுபடுகிறது அவ்வளவே…!

Leave a Reply