மருந்தாகும் காய்கள்

வெண்டைக்காய்:குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். மேலும்,   வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே வெப்பு நோய்கள் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக்காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

அவரைக்காய்: இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும்.   சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம். புடலங்காய்: நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் செரித்து நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் முக்குற்றங்களைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.

 

கொத்தவரைக்காய்: இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

Leave a Reply