புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு “வாக்கிங்’ செய்தால், மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும்’ என, புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க விஞ்ஞானிகள் சார்பில், “புற்று நோய்க்கும், உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பு’ பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக, கடந்த 1982 முதல் 2005ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்களின் தற்போதைய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இவ்விவரங்கள் அடிப்படையில், சோதனை மேற்கொண்ட போது, பெரும்பாலானோர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதும், ஒருசிலர் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. உடல் நலமாக இருந்தவர்கள், தினசரி உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி மேற்கொள்வதாகக் கூறினர். மேலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால், இதய நோய் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிகிறது.

இதுகுறித்து வாஷிங்டன் பல்கலை. பேராசிரியர் கத்லீன் வோலின் கூறியதாவது: ஆய்வில் பங்கேற்ற பலர், கடந்த 10 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் காணப்பட்டனர். தீவிர உடற்பயிற்சியால், பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உடனே மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும். அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும். -இவ்வாறு கத்லீன் கூறினார்.

Leave a Reply