ஜீரண நோய்களும்.. அதன் அறிகுறிகளும் – தெரிந்துகொள்வோம்

ஜீரண நோய்களும்.. அதன் அறிகுறிகளும் – தெரிந்துகொள்வோம் 

“காலை 9 முதல் 11 மணிவரை ஜீரண மண்டலம் அதிக சக்தியுடன் செரிமானம் செய்யும். அப்போது திட உணவுகளை சாப்பிட வேண்டும்”
மனித உடல் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்து இயங்குகிறது. அதில் குறிப்பிடத்தக்கது நமது ஜீரணமண்டலம். தனித்துவம் பெற்ற இந்த மண்டலத்தை மட்டும்தான் (உணவால்) நம்மால் இயக்கி, நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு பாகத்தையும் சரிசெய்து கொள்ளவும் ஜீரண மண்டலத்தால் மட்டுமே முடியும்.
தாய் வயிற்றில் கரு உருவாகி- பிறந்து- வளர்ந்து- வாழ்ந்து- இறக்கும் வரை ஜீரண மண்டலம் இயங்கிக்கொண்டே இருக்கும். இந்த மண்டலம் சிறப்பாக இயங்கினால்தான் இதயம் நன்றாகத் துடிக்கும், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பிராணவாயு சென்றடையும், அதனால் ஆரோக்கியம் கிடைக்கும், ஆயுள் அதிகரிக்கும். ஜீரண மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருப்பது வாய். அதிலிருந்து உணவுக்குழாய்- வயிறு- சிறுகுடல்- பெருங்குடல்- ஆசனவாய் வரை நீளுகிறது. 
இவை உணவு செல்லும் பாதை. உணவின் அளவை சிறிது சிறிதாக உடைப்பதுதான் இதன் முக்கிய செயல்பாடு. வாயில் சுரக்கும் உமிழ்நீர், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள், கல்லீரலில் உருவாகும் பித்தம், பித்தப்பையில் உருவாகும் பித்த நீர், கணையத்தில் உருவாகும் கணைய நீர், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சுரக்கும் அமிலங்கள் போன்றவைகள் செரிமானத்திற்கு மிகவும் அவசியம். ஜீரண மண்டலத்தில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களும் செரிமானத்திற்கு உதவுகிறது.
இப்போது முறையற்ற உணவுப்பழக்கத்தால் நிறைய பேருக்கு ஜீரணமண்டல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுவே அவர்களது உடலில் பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகின்றன. ஜீரணமண்டலம் சரியாக இயங்க வேண்டும் என்றால், நமது உடல் எந்தெந்த நேரத்தில் எப்படி இயங்கும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்கு இடைஞ்சல் ஏற்படாத அளவுக்குரிய சூழலை உருவாக்கவேண்டும்.
* அதிகாலை 5 முதல் காலை 7 மணி: பெருங்குடல் மலத்தை வெளியேற்றும் நேரம்.
* 7 முதல் 9 மணி: இது வயிறு அதிக சக்தியுடன் இயங்கும் நேரம். பழச்சாறு, தண்ணீர் போன்றவை அதன் இயக்கத்தை அதிகப்படுத்தும்.
* 9 முதல் 11 மணி : ஜீரண மண்டலம் அதிக சக்தியுடன் செரிமானம் செய்யும் நேரம். அதாவது நாம் திட உணவுகளை சாப்பிடவேண்டிய நேரம்.
* 11 முதல் மதியம் 1 மணி: சாப்பிட்ட உணவின் சத்து ரத்தத்தில் கலக்கும் நேரம்.
* 1 முதல் 3 மணி: மதிய உணவு சாப்பிடவேண்டிய நேரம். (இந்த நேரம், காலையில் சாப்பிட்ட திட உணவு செரிமானமாகி சிறுகுடலில் தங்கியிருக்கும்)
* பிற்பகல் 3 முதல் 5 மணி: நீர் மூலமான கழிவுகள் அதிகமாக சிறுகுடலை விட்டு வெளியேறும் நேரம். (கிட்னி செயல்பாடு அதிகமாக இருக்கும்) உணவில் உள்ள சர்க்கரை மற்றும் சத்துக்கள் உறிஞ்சப்படுவதால், நமக்கு லேசான மயக்கநிலை வரும் நேரம். சிலர் உறங்கவும் செய்வார்கள்.
* இரவு 7 முதல் 9 மணி: இரவு உணவுக்கான நேரம்.
* இரவு 10 மணி: தூக்கத்திற்கு தயாராகவேண்டிய நேரம்.
* இரவு 11 முதல் நள்ளிரவு 1 மணி: தூங்கும் இந்த நேரத்தில் மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற உறுப்புகள் காலை முதல் சாப்பிட்ட உணவில் உள்ள நச்சுத்தன்மையை அப் புறப்படுத்தி, சுத்தம் செய்ய தயாராகும்.
* அதிகாலை 3 முதல் 5 மணி: வெளியேற்ற வேண்டிய கழிவுகளை பெருங்குடலுக்குத் தள்ளி, தேவையற்ற தண்ணீர் சத்தை மறுபடியும் உறிஞ்சி, வெளியேற்ற தயாராக வைத்திருக்கும். கழிவை ஆசன வாய் மூலம் மலமாக அதிகாலை வெளியேற்றும்.
இதுதான் ஜீரண மண்டலத்திற்கான உத்தேச இயக்க நேரம். இதற்கு ஒத்துழைக்கும் விதத்தில் நமது உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தூக்கம், மலத்தை வெளியேற்றுதல் போன்றவைகளை அமைத்துக்கொண்டால் நமது ஆரோக்கியம் உறுதியாகும்.
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்களை பெற்றோர் விளையாட அனுமதிப்பதில்லை. விளையாடினால் சோர் வடைந்துவிடுவதாக குறைபட்டுக்கொள்கிறார்கள். மாணவி கள் ஆர்வமாக பரதம், நீச்சல், டென்னிஸ் போன்ற பயிற்சிக்கு சென்றுகொண்டிருப்பார்கள். அவர்கள் பத்தாம் வகுப்போ, பனிரெண்டாம் வகுப்போ படிக்கும்போது அந்த பயிற்சிக்குச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. அளவான விளையாட்டு, நடன பயிற்சியால் உடல் சோர்வடையாது. ஜீரணமண்டலம் நன்றாக செயல்படும். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தோடு, அவர்களால் நன்றாக படிக்கவும் முடியும்.
காலை- மதியம்- இரவு நேர உணவுகளில் போதிய இடைவெளியில்லாத சீரற்றதன்மை நிலவும்போது ஜீரணமண்டலம் குழம்பத் தொடங்கிவிடும். காலை 9 மணிக்கு திட உணவை சாப்பிடுகிறீர்கள் என்றால், அடுத்து ஜீரண மண்டலம் அதை செரிக்கவைப்பதற்கான பணியில் இறங்கிவிடும். அந்த நேரத்தில் இடை இடையே போண்டா, பஜ்ஜி, பீட்சா, பர்கர் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் ஜீரண மண்டலம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பிக்கும். இப்படி ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஜீரண மண்டலத்திற்கு நெருக்கடி கொடுத்துவிடக்கூடாது.
ஜீரண மண்டல இயக்கத்தை மேம்படுத்த ஆழ்ந்த தூக்கம் அவசியம். இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை ஆழ்ந்து தூங்கும்போது ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் சுரக்கும். இது ஜீரணம், ஆரோக்கியம், இளமை ஆகிய மூன்றுக்கும் அவசியம். உடல் கழிவை அகற்ற தயாராகும் நேரமும், மெலடோனின் சுரக்கும் நேரமும் சீராக இருந்தால், மலம் முழுமையாக வெளியேறி உடல் ‘ஜீரோ பேலன்ஸ்’ ஆகிவிடும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
ஜீரண மண்டலம் சரியாக இயங்காமல் இருந்தால், இரண்டுவிதமான அறிகுறிகள் தென்படும். ஒன்று: மலச்சிக்கல். இரண்டு: வயிற்று உப்புசம்.
மலச்சிக்கல் என்பது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. ஏன்என்றால் மலம் என்பது, உணவில் இருந்து எடுக்கப்படும் கழிவு மட்டுமல்ல. உடலில் இருந்து வெளியேற வேண்டிய நச்சுக் கழிவுகளும், நோய்க் கிருமிகளும் மலத்தோடுதான் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்பட்டால், அந்தக் கிருமிகள் ரத்தத்தோடு கலக்கும் நிலை உருவாகிவிடும்.
மலம் நன்றாக வெளியேற வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் நீர் பருகவேண்டும். தேனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம். பழங்கள் அதிகம் சாப்பிடலாம்.
ஜீரண மண்டல பிரச்சினைகளால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
ரிப்ளக்ஸ் (Re Flux) : உணவுக் குழாய்க்கும்- வயிற்றுக்கும் இடையில் உள்ள ‘வால்வ்’ பலகீனமாவதால், இந்த பாதிப்பு ஏற்படும். நேரம் தவறிய உணவு, அதிக மசாலா கலந்த உணவு, அதிக எண்ணெய் கலந்த உணவு, சுகாதாரமற்ற உணவு போன்றவைகளை சாப்பிட்டால் இந்த பாதிப்பு ஏற்படும். அதிக அளவில் அசைவம் சாப்பிடுவது, தூக்கமின்மை, மனஅழுத்தம், சிலவகை மாத்திரைகளின் பக்க விளைவு போன்றவைகளும் இதற்கு காரணம். புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துகிறவர்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதன் அறிகுறி: நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிற்று வலி, அஜீரணம், வாந்தி, வாந்தியில் லேசாக ரத்தம் வெளியேறுதல்.
ஜீரண மண்டல நோய்களில் குறிப்பிடத்தக்கது, அல்சர். இதன் அறிகுறி: மேல் வயிற்று வலி. சாப்பிட்டாலும் வலித்தல்- சாப்பிடாவிட்டாலும் வலித்தல், ரத்த வாந்தி, எடை குறைதல், ஜீரண கோளாறு போன்றவை. ரிப்ளக்ஸ் நோய்க்கான காரணங்களே இதற்கான காரணங்களாகவும் இருக்கின்றன. கவனிக்காமல்விடப்படும் நாள்பட்ட அல்சர் புற்றுநோயாக மாறக்கூடும்.
சிறுகுடல் பாதிப்பு: வயிற்றுக்கும்- பெருங்குடலுக்கும் நடுப் பகுதியில் சிறுகுடல் அமைந்திருக்கிறது. இது உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து ரத்தத்திற்கு கொடுக்கும் பணியை செய்கிறது. உணவில் இருக்கும் நஞ்சை எடுத்து ஈரலுக்கு கொடுக் கிறது. ஈரல் அதை நஞ்சற்ற தன்மையாக ஆக்குகிறது. சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாயு அதிகமாக வெளியேறுதல், எடை குறைதல், மலத்தில் சளி வருதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் சத்து எதுவும் உடலில் சேராமல், ரத்தசோகை ஏற்படும். ஒட்டுமொத்த உடலும் பலகீனமாகும்.
ஜீரண மண்டல நோய்களை கண்டறியவும், குணப்படுத்தவும் இப்போது நவீனமுறைகள் கையாளப்படுகின்றன. அவை மக்களுக்கு மிகுந்த பலனைத்தருகின்றன. ஜீரண மண்டல நோய்கள் பற்றி மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படவேண்டும். குறிப்பாக 20 முதல் 30 வயதுவரை உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஜீரண மண்டலத்தை கவனியுங்கள். சிக்கலின்றி வாழுங்கள்.

Leave a Reply