சுக்கு மல்லி பானம்

வயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: சுக்கு பொடி, மல்லி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால். கால் ஸ்பூன் சுக்குப் பொடி, அரை மல்லி விதைப்பொடி, சிறிது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
இதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம். இது உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக உள்ளது. உடல் வலியை குறைக்கும். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். பல்வேறு நன்மைகளை கொண்ட தனியா, சிறுநீரை வெளியேற்றும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்குமல்லி பானத்தை குடித்துவர செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஆறும். மலச்சிக்கல் இல்லாமல் போகும். அற்புதமான பானமாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் சுக்குமல்லி பானம் பயன்படுகிறது.
லவங்கம், மிளகு, சீரகத்தை பயன்படுத்தி கொழுப்பை குறைக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: லவங்கப் பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், ஏலக்காய், பனங்கற்கண்டு. 5 முதல் 10 மிளகு, ஒரு துண்டு லவங்க பட்டை, ஒரு ஏலக்காய், 5 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை லேசாக தட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிப்பதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
ரத்த அழுத்தத்தை தடுக்கும். மணத்தை தரக்கூடியதாக உள்ள இந்த பானம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். எலுமிச்சை புல்லை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் பானம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: எலுமிச்சை புல், இஞ்சி, தேன்.எலுமிச்சை புல்லை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சியை தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், ரத்தம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Leave a Reply