கருப்பட்டி

இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும் எதிலும் சர்க்கரை என்றாகிவிட்ட சூழலில் கருப்பட்டி தேடி செல்வது என்பது கேலிகூத்து என்றுதான் நினைத்தேன், ஆனால் மக்கள் இன்றும் இதன் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்தது ! இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா ? கருப்பட்டி என்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ? நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ? கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ? ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்…..


கிராமங்களில் எப்போதுமே கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மை யின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்து கின்றனர்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி யானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.


மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.


ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.


சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.


கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.


இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கருப்பட்டியை நாள்தோறும் சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.


கருப்பட்டி உபயோகிப்போம் !! ஆரோக்கியம் பேணுவோம்!!!

Leave a Reply