உடல் எடையை குறைக்கும் கள்ளிமுள்ளியான்

உடல் எடையை குறைக்கும் கள்ளிமுள்ளியான்
முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்ததால், உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உடல் பருமன் என்பது இந்திய மக்களை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினை. முரண்பாடான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு குறைந்ததால், உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உடல் பருமன் என்பது முதலில் தனி பிரச்சினையாக தெரிந்தாலும் இது, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் கூடவே உருவாக்கிவிடுகிறது.
முரண்பாடான உணவுப் பழக்கத்தால் முதலில் ஜீரணக் கோளாறு தோன்றும். அது ஜீரண சிக்கலை உருவாக்கும். ஜீரண சிக்கல் ஏற்படும்போது பித்தம் சரியாக இயங்காது. அதனால் பசி குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்யும். அப்போது உடலியக்கத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங் களால் உடல் பருமனாகிறது. உடல் எடை எல்லையை மீறும்போது உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல், தேவையான அளவு உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை தேவை. இன்னொரு புறம் உடல் எடையை குறைக்க மருந்துகளும் தரப்படுகின்றன.
உடல் எடையை குறைக்க மிக சிறந்த மூலிகை மருந்தாக இருப்பது கள்ளி முள்ளியான்.
கள்ளி வகையை சார்ந்த இந்த தாவரத்தின் அடிபாகம் பட்டையாகவும், மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஏறக்குறைய பிரண்டையை போலவே தோற்றமளிக்கும். கிராமங்களில் இதை அப்படியே ஒடித்து மக்கள் சாப்பிடுவார்கள். புளிப்பு சுவையுடையது. உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கக்கூடியது. பித்தத்தை சமநிலைப்படுத்தவும் செய்யும்.
ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இன மக்கள் இதை மருந்தாகவும், உணவாகவும் பெருமளவு பயன்படுத்துகிறார்கள். அவர்கள் காடுகளுக்கும், மலைகளுக்கும் செல்லும்போது இதனை தங்கள் கையோடு எடுத்து செல்வார்கள். தேவைப் படும்போது இதை சாப்பிட்டால் பசி நீங்கும். சோர்வு மறையும். தாகமும் தோன்றாது. அதனால் காட்டில் புழங்கும் மக்கள் கை களில் எப்போதும் கள்ளிமுள்ளியான் இருக்கும்.
இதனை சாப்பிட்டால் வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு கரைந்து தசைகள் வலுவாகும். அதனால் உடல் எடை குறையும். கள்ளிமுள்ளியானின் இந்த சக்தியை மக்கள் உணர்ந்துள்ளதால், உலகம் முழுக்க இதற்கு அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது.
கள்ளிமுள்ளியானை பயன்படுத்தி ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நமது உடலில் அதிகப்படியாக சேரும் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்படுகிறது. கள்ளிமுள்ளியானில் பிரக்கினேன் கிளைகோசைட் என்ற தாவர வேதிப் பொருள் உள்ளது. இது கொழுப்பை உருவாக்கும் சிட்ரேட் லயேஸ் என்ற ஜீரண நீரை தடை செய்கிறது. அதனால் உடலில் கொழுப்பு உருவாகுவது தடை செய்யப்படுகிறது.
உடல் பருமனால் அவதிப்படுகிறவர்களுக்கு அடிக்கடி சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதற்கு காரணம் அவ்வப்போது அவர்களுக்கு பசி உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். கள்ளிமுள்ளியானை சாப்பிட்டால், மூளைக்கு பசியை அறிவிக்கும் ஹார்மோனின் சுரப்பை அது குறைத்துவிடும். அதனால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவது தவிர்க்கப்படும். இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதனை சாப்பிடுவதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. அதனால் இதில் இருக்கும் சத்துக்களை பிரித்தெடுத்து பல்வேறு மருந்துகளில் சேர்க்கிறார்கள். இதன் தாவர பெயர்: காரலுமா பிம்பிரியாடர்!
இதை வீடுகளிலும் வளர்க்கலாம். இன்று வியாபார பயிராக பெருமளவு பயிரிடப்படுகிறது. இதை துவையலாக அரைத்து சாப்பிடும் வழக்கம் கிராமங்களில் உள்ளது.

Leave a Reply