​பிஎஃப் கோரப்படாத பணம்

பிஎஃப்: கோரப்படாத பணம்… உண்மை நிலை என்ன?

பிஎஃப் அமைப்பில் கோரப்படாத பணம் 27,000 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகவே, இந்தப் பணத்தை வேறு செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டு வருகிறது அரசாங்கம்.
பிஎஃப் அமைப்பில் கோரப்படாத பணம் என்பது பெரும்பாலும் செயல்படாத கணக்கில் இருக்கும் பணம்தான். அதாவது பிஎஃப் அமைப்பைப் பொறுத்தவரை, 36 மாதங்களுக்கு மேல் கணக்கில் பணம் செலுத்த வில்லை எனில் அது செயல்படாத கணக்காக மாறிவிடும்.
ஆனால்  இந்தப் பணம் முழுவதுமே கோரப்படாத  பணமா என்று கேட்டால், இல்லை என்பதே சரியான பதில். பிறகு எப்படி இவ்வளவு பெரிய தொகை கோரப்படாத பணமாக இருப்பதாக தகவல் வெளியானது? இது குறித்து நாம் விசாரித்ததில், நமக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

(1) பிஎஃப் அலுவலகங்கள் அனைத்தும் 1995-க்கு பிறகுதான் கணினி மயமானது.  தொழிலாளர் களின் எண்ணிக்கை அதிகரிப்பு, புதிய தொழில் நிறுவனங்களின் வருகை போன்ற காரணங்களி னால் ஒரு பிஎஃப் அலுவலகம் பல அலுவலகங்களாகப் பிரிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில், ஒரு அலுவலகத்தில் உள்ள உறுப்பினர்களின் கணக்கை புதிய அலுவலகத்தில் வரவு வைப்பார்கள்.
அப்போது ஊழியரின் பெயரில் புதிய கணக்கு ஆரம்பித்து பணம் வரவாகும். ஆனால், பழைய அலுவலகத்தில் உள்ள கணக்கை குளோஸ் செய்ய முடியாது. கணக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், மூன்று வருடத்துக்குப் பிறகு அந்தக் கணக்கு செயல்படாத கணக்காக மாறிவிடும்.
இந்தக் கணக்கை மாற்றும் போது எவ்வளவு இருந்ததோ, அது கோரப்படாத பணமாக மாறிவிடும். எனவே, இது ஒரு தவறான கணக்காகும். அதே சமயம், தொழிலாளர்களுக்கு பணத்தை க்ளெய்ம் செய்வதில் சிக்கல் எதுவும் இருக்காது.
(2) வெளிநாடுகளைச் சேர்ந்த  பல ஊழியர்கள் இந்தியாவில் வேலை பார்த்து வருகிறார்கள்.  இவர்கள்  குறிப்பிட்ட காலத்துக்குப்பின் தங்கள்  சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவார்கள். இவர்களின் பிஎஃப் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருக்க வாய்ப்புள்ளது. இதை அவர்கள் சில நாட்டு விதிகளின்படி, 58 வயதுக்கு பிறகுதான் பெற முடியும். இந்தக் கணக்குகளும் செயல்படாத கணக்காக மாறிவிடும்.
(3) சில நிறுவனங்கள் ஊழியர் களின் பிஎஃப் தொகையை செலுத்தாமல் வைத்திருக்கும். அது மாதிரியான நிறுவனங்களின்  மீது பிஎஃப் அலுவலகம்  பல்வேறு நடவடிக்கை எடுத்த பின் அந்தப் பணத்தை  செலுத்தும். சில நேரங்களில் இதற்கு மூன்று வருடம்கூட ஆக லாம். எனவே, அந்தக் கணக்கு களும் இடைப்பட்ட காலத்தில் செயல்படாத கணக்காக மாறிவிடும். பணம் செலுத்திய வுடன் கணக்கு செயல்படக்கூடிய கணக்காக மாறிவிடும்.
(4) சில ஊழியர்கள் பல நிறுவனங்களில் 1 மாதம், 6 மாதம் எனக் குறுகிய காலங்களில் வேலை பார்த்திருப்பார்கள். அப்போது பிடித்தம் செய்யப் பட்ட பணத்தை எடுக்காமல் விட்டிருப்பார்கள். இந்தக் கணக்குகள் எல்லாம் செயல் படாத கணக்காக மாறிவிடும்.
(5) பிஎஃப் கணக்கில் பணம் வைத்திருந்தால், அந்தப் பணத்துக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி கிடைக்கும். இதில் எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லை என்பதால், சில ஊழியர்கள் வேலையை விட்டு விலகியபிறகும் பணத்தை எடுக்காமலே இருப்பார்கள்.
மேற்கூறியவற்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் உள்ள தொகை தவறானதாகும். மீதமுள்ளவற்றில் உள்ள தொகையை ஊழியர்கள் எப்போது கேட்டாலும் அதை திரும்பக் கொடுக்க வேண்டும்.
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாக யுஏஎன் (Universal Account Number) கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு ஊழியருக்கு ஒரு எண் என்பதால், செயல்படாத கணக்கு பிரச்னை ஓரளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது.
தவறாக கணக்கிட்டதால்  கோரப்படாத தொகை அதிகமாக இருப்பதாக நினைத்து அந்த பணத்தின் மூலம் பல நலத் திட்டங்களை நிறைவேற்றலாம் என யோசித்து வருகிறது அரசாங்கம். இது எப்படி சாத்தியமாகும்?
கோடிக்கணக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியைக் கையாளும் பிஎஃப் அமைப்பு எல்லா இடர்பாடுகளையும் களைந்து சரியான கணக்குகளை பராமரிக்க உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இரா.ரூபாவதி

-விகடன்

Leave a Reply