வாழ்க்கையின் ரகசியம்

என்னைப் பொறுத்தவரையில் நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு லட்சியம் அற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இரட்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்கள் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒருசிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப் போகிறான்.

மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும் வரை இடையில் நடைபெறுகிறவை எல்லாம் அவனதுச் சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்கள் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு லட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து.
சமுதாயத்திற்கு பலன் தரும் வாழ்க்கையே சிறந்த லட்சியம். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்கள் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவர் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கை யால் பிறர் நன்மை அடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும். இது முக்கியமாகும். 
இதுவே அவசியமும், பொருத்தமும் ஆனதுமின்றி

மனித வாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இதுதான்.
– தந்தைபெரியார், (‘விடுதலை’ 21.03.1956)

Leave a Reply