வயிற்றில் பட்டாம்பூச்சி

நீங்கள் ஒரு வீதியில் நடந்து செல்லும் போது, எதிரே தேவதை போல் ஓர் அழகான பெண் உங்களை நோக்கி வருகிறாள். உங்களைப் பார்த்து வெட்கத்துடன் கலந்த ஓர் அழகிய சிரிப்பில் உங்களை அந்த நொடியே மயக்கி விடுகிறாள். இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால், உங்களுக்குள் முதலாவதாக என்ன தோன்றும்? அவ்வேளை வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற ஒரு உணர்வை உணர்வீர்கள் தானே? ஆனால், அந்த உணர்வு வருவதற்கான உண்மையான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால் இன்றைய அறிவு டோஸைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு, உங்கள் உள் மன அழுத்தத்திற்கு உங்கள் உடல் அளிக்கும் பதிலே ஆகும். ஆம், இது உங்களின் மனம் கவர்ந்தவர் அருகில் இருக்கும் போது வரும் மன அழுத்ததிற்கும் பொருத்தமாக இருக்கும். நாம் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தின் போது, ‘எதிர்த்து நில், இல்லை ஓடி விடு (fight-or-flight)’ என்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது. இவ்வாறு மன அழுத்தம் இருக்கும் போது, மூளையின் சமிக்ஞைகள் (signal) உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் கபச் சுரப்பி எனப்படும் Pituitary gland மேலும் ஹைப்போதலமஸ் (Hypothalamus) என்று அழைக்கப்படும் மூளையின் அடிப்பகுதிக்கும் அனுப்பப்படுகிறது. இந்தக் கபச் சுரப்பி அடுத்ததாகச் சிறுநீரகங்களுக்கு மேலே இருக்கும் அண்ணீரகச் சுரப்பியைத் (Adrenal gland) தூண்டுகிறது. தொடர்ந்து இந்த அண்ணீரகச் சுரப்பி இரத்த ஓட்டத்தில் அட்ரினலினையும் (Adrenaline), மற்ற பிற இரசாயனப் பொருட்களையும் விடுவிக்கின்றது. இந்த அட்ரினலின் இரத்த அழுத்தத்தையும், இதயத் துடிப்பையும், தசைகளுக்குச் செல்லும் இரத்த ஒட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் அந்த மன அழுத்ததின் காரணத்தை சமாளிக்கவோ அல்லது அங்கிருந்து விலகி விடவோ தயாராகிவிடுவீர்கள். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், மிகுந்த இரத்த ஒட்டம் தசைகளுக்கும், நுரையீரலுக்கும் செல்வதால், வயிறு உட்பட வேறு சில உறுப்புகளுக்கு குறைந்த அளவே இரத்தம் கிடைக்கிறது. அப்படி குறவாக இரத்தம் கிடைப்பதைத் தான் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்விற்குக் காரணமாகின்றது. இப்போ புரிந்து விட்டதா நண்பர்களே?

Leave a Reply