யோசிங்க

சின்ன குழந்தைகள் வயதுக்கு மீறிய அறிவுடன் பேசுவது பெற்றோருக்கு மட்டும் வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம் மற்றவர்க்கு பெரும் எரிச்சலையே தரும்.
இது தொடர்பான மீள்பதிவு ஒன்னு
மெத்தப்படித்த மேதாவிகள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.. உங்கள் வாழ்க்கை முறை வேறாக இருக்கும் இது செட்டாவாது.
ரொம்ப சேட்ட பண்றா,

சொல் பேச்சே கேட்கறது கிடையாது,

கோபம் வந்தா கைல கிடைத்ததை தூக்கி எறியுதா,

பெரியவங்கள மரியாதை இல்லாமல் பேசறா,…..

இப்படிதான் ஒரு அம்மா என்னிடம் புலம்பிக்கொண்டு இருந்தாங்க.. நிற்க!.. இப்படியான குறைகள் எல்லாம் ஏதோ  பெரிய பொண்ண பற்றி சொல்கிறார்கள்ன்னு நினைத்து கொள்ள வேண்டாம், இது அவர்கள் வீட்டு 7 வயது மகளை பற்றிய குறைகள்,  மிகச்சாதரணமாக தோன்றும் இவை பிற்காலத்தில் அக்குழந்தையின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றும் என்று நாம் யோசிப்பதே இல்லை, கிட்டத்தட்ட ஒரு அடமன்டான கேரக்டர நமக்கு பிடிக்குமா சொல்லுங்க? அப்படிதான் உருவாகி விடுவார்கள், கேட்டது கிடைக்கணும், நினைத்தது நடக்கணும், மண்டகர்வம் பிடிச்சு திமிர்லேயே திரிய ஆரம்பித்துவிடும், அப்பறம் என்னைய யாருக்கும் பிடிக்கல,  நான் நானாக இருக்கேன் இதெல்லாம் ஒரு தப்பா? அப்படின்னு டிவிட்டும், ஸ்டேடஸ் போடும்,.. நாம நினைத்துகொள்ளலாம் இப்பதான் இப்படி இருக்கிறாள் வளர வளர சரி ஆகிடும் என்று, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றும் கூட நாமேதான் சொல்கிறோம்,:)

குழந்தைகள் கொஞ்சம் திமிர்த்தனம் செய்தால் போதும் பெரும்பாலான பெற்றோர்கள்  சொல்வது இதுதான்” என் புள்ள என்னைய மாதிரி தான வரும்” இதுல என்ன பெருமை வேண்டிகிடக்கு.. உண்மைல அவங்களுக்கு எந்த திமிருமே இருக்காது! தான் ஒரு திமிர்பிடித்தவன்(ள்) என்று காட்டிக்கொள்ள இதை ஒரு சாக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.. எனினும் நான் சொல்ல வருவது அதுவல்ல.. இன்றைய பெற்றோர்கள் அதாவது தனிக்குடித்தனம் நடத்தும்  புதிய அப்பா அம்மாக்கள், இவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களே தவிர எப்படி வளர்ப்பது என்ற அடிப்படை யோசனையே கிடையாது,

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ‘எனக்கு சிறுவயதில் கிடைக்காதது எல்லாமே என் பிள்ளைக்கு கிடைக்கணும்’  ”நம்மளை கட்டுபடுத்தி வளர்த்தது போல் நம்ம பிள்ளைகள வளர்க்க கூடாது” இப்படியான கிளிஷே டயலாக்தான், .. எத்தனை அற்புதமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்த ஒரு கருவி வேண்டும், அதை நம் பெற்றோர்கள் அழகாக செய்தார்கள் அதைதான் நாம் குறை என்கிறோம், அப்படியான இன்னொரு அற்புதம் தான் நம் குழந்தைகள்.

இந்த புது அப்பாம்மாகள் யாரும் குழந்தைளை வளர்ப்பது கிடையாது அதுபாட்டுக்கு வளருது இவங்க வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறாங்க, நான்கு வயசு குழந்த இருக்கும் வீட்டுக்கு யாராச்சு வந்தாங்கன்னா அந்த குழந்தை ரொம்ப சுலபமா போடா போடி ன்னு சொல்லுது…, இன்னொரு உளவியல் அந்த விருந்தினரை இவங்களால போடான்னு சொல்ல முடியல சரி குழந்தை சொல்லிடுச்சேன்னு பெருமைல வேற திளைகிறாங்க.. இப்படி உங்கள் வீட்டில் நடந்தது என்றால் தவறான வளர்ப்பு முறை எனக்கொள்க. மூன்று வயது வரை குழந்தைகளை யாராலும் வளர்க்க முடியாது  அதுகளாவேதான் வளரும் அது இஷ்டப்படித்தான் வளரும் சோ அதை ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால் அதற்கு மேல் நம் கையில் தான் இருக்கு.. உடனே ஒரு கூட்டம் கிளம்பும் இப்படி…, ”குழந்தைகள் என்பவர்கள் நம் மூலமாக பூமிக்கு வந்தவர்கள் அதை தவிர அவர்களுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை அவர்கள் சுதந்திரத்தில் தலையிட நமக்கு உரிமை இல்லை”  இப்படி பிராக்டிகலாக செட்டே ஆகாத ஒன்றை தயவு செய்து சொல்லாதிங்க.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க அப்பா அம்மா ரெண்டு பேர்ல யாருக்காவது குழந்தை பயப்படுகிறதா? அதை செய்யாதேன்னு சொன்னா குழந்தைகள் செய்யகூடாது ஆனா இன்றைய குழந்தைகள் ‘அப்படித்தான் செய்வேன்னு” சொல்லுது, இதை ஆரம்பத்தில் பார்க்க, கேட்க, நன்றாகத்தான் இருக்கும் கண்டிப்பாக ஒரு நாளில் மிகுந்த எரிச்சலை தரும் என்பதையும் மறந்துவிட வேண்டாம். ரொம்ப சேட்டை பண்ணும் போது நாம் பார்க்கும் ஒரே பார்வையில் தூர விலகனும்.. இதுக்கு ஒரே வழி அதட்டல் உருட்டல்களை எல்லாம் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுங்கள்,  இன்றைய அப்பாக்களுக்கு அது கைவரபோவதே இல்லை அவர்களுக்கு கொஞ்ச மட்டும்தான் தெரியும். மனைவி, பிள்ளைகளை அடிக்கும் போது பேசாம இருங்க அத விட்டுட்டு பிள்ளைங்க முன்னாடியே அவங்கள திட்டாதிங்க.

…என்னது குழந்தைகளை அடிப்பதா? :)) ஆமா பின்ன எப்ப பார்த்தாலும் கொஞ்சிட்டே இருக்க முடியுமா? இப்பலாம் அடிக்க வேண்டும் என்றாலே பலபேர் பதறத்தான் செய்றாங்க.. அடிக்கலாம் தப்பே இல்ல ஆனால் அதுல ஒரு நுணுக்கம் இருக்கு.. குழந்தைகள் நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்த பினனர்  (4 வயதில் நன்றாக புரியும்)  ஏதாவது வேண்டாதவைகள் செய்யும் போது, ஒரே முறை நல்லா வலிக்கற மாதிரி அடிங்க அதுக்கு அப்பறம் எப்பவாது  சேட்ட பண்ணினால் கையை மட்டுமே ஓங்க வேண்டும் எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது..  அம்மா அடித்துவிடுவாள்.. அப்படி அடிக்கையில் அப்பா நம்மள காப்பாற்ற வரமாட்டார் என்ற எண்ணம் தானாகவே குழந்தைக்கு வந்துவிடும், பார்வையிலேயே பணிய வைத்துவிடலாம்.

அடிக்கடி குழந்தைகளை அடிப்பவர்களா  நீங்கள்? ஆம் எனில், எந்த தவறையும் செய்துவிட்டு அடிக்காக காத்திருக்க ஆரம்பிக்கும்… ”சரி வந்து அடிச்சுட்டு அம்மா போய்டுவா அவ்வளோதானே” அப்படின்னு மட்டும் நினைத்து விட்டார்கள் என்றால் ஜென்மத்துக்கும் திருத்த முடியாது…

இதெல்லாம் என்ன அவ்வளவு அவசியமா? என்று நினைத்தால்..  இப்படி வைத்துக்கொள்வோம் ”உங்க அப்பா அலல்து நீங்கள் மதிக்கும் ஒருவர் கூட எங்காவது போறிங்க அங்க யாரோ ஒரு 15 வயது பதின்மளோ பதின்மனோ கால் மேல் காலிட்டு உட்கார்ந்திருக்கையில் அவர்கள் மேல் ஒரு ஒவ்வாமை வரும்.

அப்படிதான் நம் பிள்ளைகளும் பார்க்கப்பட வேண்டுமா?  யோசிங்க!

Leave a Reply