மோப்ப நாய் சீசர் மரணம்

மும்பை: கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது கலக்கிய மோப்ப நாய் சீசர் நேற்று இரவு மரணமடைந்துள்ளது.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதல் குறித்த விசாரணையில் காவல்துறையினருடன் சேர்ந்து மேக்ஸ், சுல்தான், டைகர், சீசர் ஆகிய மோப்ப நாய்களும் பங்கேற்றன. அதில், சீசர்(11) எனும் நாய் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படைப் பிரிவில் திறம்பட செயல்பட்ட பல உயிர்களை காப்பாற்றியது.

இந்த சீசர் நாய் மும்பை தாக்குதல் மட்டுமல்லாது நரிமன் வீட்டில் தீவிரவாதிகள் தொடர்ந்து 3 நாட்கள் பதுங்கியிருந்தபோதும் தேடுதல் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டது. இதேபோல், கடந்த 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போதும் வெடிகுண்டு தேடும் பணியில் சீசர் ஈடுபடுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சீசர் மும்பையில் உள்ள ஓய்வுபெற்ற மோப்ப நாய்களுக்கான காப்பகத்தில் வசித்து வந்தது,பின்னர் விரார் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், ஆர்திரிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சீசர் 105 டிகிரி காய்ச்சல் காரணமாக மும்பை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலயில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சீசர் பரிதாபமாக உயிரிழந்தது.

சீசரின் மரணம் குறித்து மும்பை மாநகர போலீசார் ஆழந்த இரங்கலுடன், டுவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்து சீசருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். காவல்துறைக்காக சிறப்பாக பணியாற்றிய சீசருக்கு விரார் பண்ணையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சீசரின் நெடுநாள் நண்பனான டைகர் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை தாக்குதலின்போது காவல்த்துறையுடன் இணைந்து பணியாற்றிய மோப்ப நாய்கள் அனைத்தும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply