மரம் நடும் தண்டனை!

தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரில் காவல்துறை மேலாளர் ரேமா ராஜேஸ்வரி ரொம்பவும் பிரபலம். இந்தப் பிரபலத்தின் பின்னணியில் இருப்பது இவர் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்குத் தந்துவரும் வித்தியாசமான தண்டனைதான்.

தெலங்கானா மாநிலத்தில், சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இடம் மெஹபூப் நகர்தான். சில விபத்துகளில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவது கவலையைத் தருகிறது.

கொலை செய்தால்தான் குற்றவாளி என்பதில்லை. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களும் குற்றவாளிகள்தான். இப்படி சாலை விதிகளை மீறுபவர்களைக் கொண்டு மரக்கன்றுகளை நடச் செய்கிறோம். இந்த மரம் நடுதல் என்பது குற்றவாளிகளைக் கொண்டு செய்யப்படும் ஒரு சமூக சேவை.

சாலை விதிகளை மீற வேண்டும் என்கிற எண்ணத்தைக் குறைக்கும். குற்றவாளிகளுக்கு மரம் நடுதல் போக, வழக்கமான அபராதமும் உண்டு. தெலங்கானா அரசாங்கம் மரம் வளர்ப்பதில் பசுமையை பெருக்குவதில் அதிக அக்கறை கொண்டுள்ளது. செய்த குற்றத்திற்குத் தண்டனையும் தருவதோடு… நாட்டுக்கும் நல்லது செய்ய மரங்களை நடச் செய்வது சமூகப் பொறுப்புள்ள விஷயம்தானே என்கிறார் ரேமா ராஜேஸ்வரி.

இந்த வித்தியாசமான தண்டனையால், மெஹபூப் நகரில் சுமார் 2,765 செடிகள் நடப்பட்டு விட்டன. மெஹபூப் நகரைச் சுற்றி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதுதான் தெலுங்கானா காவல்துறையின் திட்டமாம்.. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் இந்த லட்சியத்தை நிறைவேற்றுவார்கள் என்று நம்பலாம்..
– பனிமலர்

Leave a Reply