போலிக் ஆசிட் மாத்திரை

பிறவி கோளாறை, கருவிலேயே கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வரும் மருத்துவர், எஸ்.சுரேஷ்: நான், கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தைகள் தொடர்பான ஆராய்ச்சி மையத்தை, சென்னையில் நடத்தி வருகிறேன். பிறவிக் கோளாறு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும், உலக சுகாதார மையத்தின் துணை அமைப்பில், நிரந்தர உறுப்பினராகவும் உள்ளேன்.பிறவிக் கோளாறுகளை, கருவிலேயே கண்டறிவதற்கான சாதகமான சூழலை, தமிழகத்தில் உருவாக்க, தமிழக அரசின் திட்டச் செயல்பாட்டிற்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்த்து, ஒரு ஆண்டிற்கு, 12 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். இவர்களில், 2 முதல், 3 சதவீத குழந்தைகள், பிறவிக் கோளாறுடனும், 2 சதவீத குழந்தைகள், மூளை வளர்ச்சி குறைந்தும் பிறக்கின்றன.மரபியல், சுற்றுச்சூழல் என, பல காரணங்களால், பிறவிக் கோளாறு உள்ள குழந்தைகள் பிறக்கின்றன. அதிலும் குறிப்பாக, மனக் கோளாறு மற்றும் முதுகு தண்டுவடம் வளைந்து பிறக்கும் குழந்தைகளே அதிகம்.தண்டுவட பிரச்னையால், குழந்தைகளின் கை, கால்கள் செயலிழப்பதும், இயற்கை உபாதைகள் கட்டுப்பாடில்லாமல் வருவதும் நிகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம், ‘போலிக் ஆசிட்’ குறைபாடு தான்

.போலிக் ஆசிட் மாத்திரை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கும். இம்மாத்திரையை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டாலே, இப்பிரச்னையை, 60 சதவீதம் வரை தவிர்க்கலாம்.வளர் இளம் பருவப் பெண்களுக்கு, இரும்பு சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகளை, பள்ளிகளிலேயே இலவசமாக தருகின்றனர். ஆனால், ’20 வயதிற்கு மேல் தானே திருமணம் செய்கிறோம். எனவே, கர்ப்பம் ஆன பிறகு இம்மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்’ என, பல பெண்கள் தவறாக எண்ணுகின்றனர்.குறைந்தபட்சம், நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே, போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்கலாம். இம்மாத்திரையால் மட்டுமே, பிறவிக் கோளாறு பிரச்னையை, கருவிலேயே சுலபமாக தவிர்க்கலாம். ஏனெனில், போலிக் ஆசிட் மாத்திரைக்கு, ‘எங்கேஜ்மென்ட் பில்‘ என்றே பெயர்.

Leave a Reply