பதினெட்டாம் பெருக்கு.

மழை தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் சிலிர்க்கின்றன. சோம்பிக் கிடக்கும் ஆறுகள் புத்துணர்ச்சி கொள்கின்றன. புது வெள்ளம் பாய்கிறது. எங்கும் உற்சாகம் பொங்குகிறது. ஆடி பிறந்துவிட்டது.
விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி.

ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.
ஆடி, பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிச் சமவெளிப் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.
தைப்பொங்கல். தீபாவளி போன்ற சமய வழிபாட்டுப் பண்டிகையிலிருந்து ஆடிப் பெருக்கு மாறுபட்டது. இப்பண்டிகை ஒரு குடும்பத்திற்குள் அனுசரிக்கப்படுவதல்ல. இது சமூகத் திருவிழா. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்வார்கள். அதற்குப் படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வந்தனம் செய்வார்கள். புதுப் புனலில் நீராடி பூஜிப்பார்கள். இவை எல்லாம் ஆடிப் பதினெட்டாம் நாள் செய்யப்படுவதால் இது பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது.
ஆடி மாதம் இன்றைய தமிழ் மாதக் கணக்கின்படி நான்காம் மாதம். ஆனால் ஒரு காலகட்டத்தில் தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. அதன்படி ஆடி மாதம், முதல் அரையாண்டுக் காலம் முடிந்து அடுத்த அரையாண்டுக் காலத்தின் தொடக்கம். ஆண்டின் தொடக்கமான தைத் திருநாளைப் பொங்கலிட்டு வரவேற்பதுபோல அடுத்த அரையாண்டின் தொடக்கமான ஆடியும் கொண்டாடப்பட்டதுண்டு.
ஆடி மாதம் கொடைத் திருவிழா கொண்டாட ஒரு காரணம் இருக்கிறது. அம்மாதம் காற்றுக் காலம் என்பதால் அக்காலத்தில் மக்கள் பயணத்தைத் தவிர்த்தார்கள். அதனால் அவர்கள் உள்ளூரிலேயே தங்க நேர்ந்ததால் அக்காலத்தை உள்ளூர்க் கோயில் திருவிழா நடத்துவதற்காகச் செலவிட்டார்கள். அப்படித்தான் ஆடி மாதம் திருவிழா நடத்துவது வழக்கமானது என்கிறது ஒரு சான்று.
தமிழர்கள் புரட்டாசி, மார்கழியிலும் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஆடி மாதத்தில் மற்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. திருமாங்கல்யம் பெருக்குதல் என்னும் சடங்கு இம்மாதத்தில்தான் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது தாலி பிரித்துக் கட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலிக் கயிற்றைக் களைந்து புதிய தாலி அணிவர்.
திருவிழாக்களுக்கு மத்தியில் ஆடித் தள்ளுபடி இம்மாதத்தில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்த வியாபாரக் கொண்டாட்டங்கள் தொடங்கிய காலகட்டத்தை அறிய முடியவில்லை. ஆடி மாதம் வியாபாரம் படுமந்தமாக நடக்கும் காலகட்டம். ஏனெனில் இம்மாதத்தில்தான் விவசாயத் தொழில்கள் தொடங்கும். மக்கள் உழவுத் தொழில்களுக்காக முதலீடு செய்வதால் பணத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். மேலும் இம்மாதத்தில் திருமணச் சடங்கு எதுவும் மேற்கொள்ளப்படாததால் வியாபாரம் மந்தமாகவே இருக்கும். அதைச் சரிக்கட்டவே ஆடி மாதம் தள்ளுபடி தந்து விற்பனையைப் பெருக்க வியாபார நிறுவனங்கள் முனைந்தன. இதுதான் ஆடித் தள்ளுபடியின் பின்னணி.
ஆடிப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடி அம்மாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அறுதி என ஆடியின் சிறப்பு நீண்டுகொண்டே போகிறது. இம்மாதம் கொண்டுவரும் முதல் மழையின் மண்வாசமும், வானம் பார்த்த பூமியும் பூத்துக் குலுங்கும் வண்ணமும், உழுத நிலத்தில் தூவிய விதைகள் முளைவிடும் காட்சியும் ஆடியை இன்னும் சிறப்பானதாக மாற்றுகின்றன.
இப்படி ஈரமும் பசுமையும் தெய்வீக மணமும் கமழும் ஆடியைக் கொண்டாட ஆடி மாதம் ஒன்று போதாது.

Leave a Reply