சூப்பர் மேன் மரணம் அடைந்தார்

சூப்பர் மேன் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் மரணம் அடைந்த தினம் இன்று!

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார் அவரது சிறு வயதில் தந்தை அவரது தாயை விவாகரத்து செய்த பின்பு, தன் சகோதரர் பெஞ்சமினுடனும், தாயாருடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் கிரிஸ்டோபர்.

எட்டு வயதானபோதே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இசைமீது ஆர்வம் ஏற்பட்டதால் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பள்ளிப்பாடகர் குழுவிலும், ஐசாக்கி குழுவிலும் சேர்ந்து பள்ளியில் மிக துடிப்பான மாணவராக விளங்கினார்.உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பிறகு அவர் கார்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக இறுதியாண்டில் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது.

நியூயார்க்கின் உலகபுகழ் பெற்ற ஜூலியட் மேடை கலைப் பள்ளியில் நடிப்புப் பயிற்சிபெற தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலியட் மேடைக் கலைப்பள்ளியில் பயின்றபோதே கிரிஸ்டோபருக்கு பல்வேறு நடிப்பு வாய்ப்புகள் வந்தன. 1976-ல் புகழ்பெற்ற நடிகை கேத்ரின் ஹெப்பர்னுடன் முதன் முதலாக A Matter of Gravity என்ற Broadway என்ற இசை நாடகத்தில் நடித்தார். அதனால் அவரால் நடிப்புப் பள்ளியில் தொடர முடியவில்லை.

1978 ஆம் ஆண்டில்தான் ‘சூப்பர்மேன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க உகந்தவரை தேடியது ஹாலிவுட். அதற்காக விண்ணப்பித்த சுமார் 200 பேர் பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மாத படப்பிடிப்புக்குப் பிறகு உலகத் திரைகளில் ‘சூப்பர்மேனாக’ அவதரித்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ்.

புகழின் உச்சியில் இருந்த சமயம் 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி. தன் குதிரை மீது அமர்ந்து அவர் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தபோது, மோசமான விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவரது முதுகெலும்பு கடுமையாக பாதிப்படைந்தது. அந்தக்கணமே கழுத்துக்கு கீழ் அவரது உடல் செயலிழந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் தவித்த அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படாதிருந்தால் அந்தக்கணமே அவர் உயிர் பிரிந்திருக்கும்.

மிக நுண்ணிய அறுவை சிகிச்சை செய்து அவரது தலையை முதுகெலும்போடு இணைத்தனர் மருத்துவர்கள். விபத்தினால் மனம் சோர்ந்து போகாமல், உடற்குறையோருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதோடு நின்று விடாமல் 1996 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளையை நிறுவி உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளை தொடங்கி வைத்தார்.

1998-ல் Still Me என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம்பிடித்தது. 1996 ஆம் ஆண்டு அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அவர் அழைக்கப்பட்டார். அட்லாண்டாவில் நடைபெற்ற உடற்குறையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அறிவிப்பாளராக கலந்துகொண்டார்.தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் அவரை பேச அழைத்தன. உடல் மறுத்தபோதும், உள்ளம் ஒத்துழைத்தது. தாதியரின் துணையுடன் எல்லா அழைப்பையும் ஏற்றுக்கொண்டு உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார் ரீவ்ஸ்.

விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் ‘சூப்பர்மேன்’ என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டி பல துவண்டுபோன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் தமது 52 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி காலமானார்.

Leave a Reply