கோயிலில் உட்கார்ந்து வர வேண்டும் ஏன்?

கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?

கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும்.

நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த வழக்கத்தின் நோக்கமாகும்.

ராமகிருஷ்ணர் தீர்த்த யாத்திரையைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்து, உங்கள் கேள்விக்கும் ஓரளவு பொருந்துவதாக இருக்கிறது.

ராமகிருஷ்ணரின் அந்த உபதேசம் வருமாறு.

“வயிறு நிறையப் புல்லைத் தின்ற பசு, ஓர் இடத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டு அசைபோடுகிறது. அதுபோலவே, தீர்த்த யாத்திரைக்கு நீ சென்று வந்தால் அந்த அந்தத் தெய்வீகத் தலத்தில் உன் மனதில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனி இடத்தில் உட்கார்ந்து அவற்றிலேயே ஆழ்ந்து போகவேண்டும். அவ்விதமின்றி அங்கிருந்து வந்ததும் அந்த எண்ணங்கள் உன் மனதை விட்டு அகன்றுபோகும்படி நீ உலகியல் விவகாரங்களில் தலையிடுவது கூடாது.”

Leave a Reply