கோமளவல்லி

மிகப்பெரிய குடும்பம், தாத்தா, அரச குடும்பத்தில் ஒரு நீதிமன்ற மருத்துவர், மேல்கோட்டே “ஆர்த்தடாக்ஸ்” அய்யங்கார் குடும்பத்தில் செழிப்போடும், செல்லமாகவும் தான் வாழ்க்கையைத் துவக்கியவர் “கோமளவல்லி” என்கிற ஜெயலலிதா. கோமளவல்லி என்பது குடும்ப வழக்கமாக அவருக்கு சூட்டப்பட்ட இன்னொரு பெயர். 
அம்மு என்று தாயாரால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தந்தையார் ஜெயராமன் இரண்டு வயதிலேயே இறந்து போக வேதவள்ளி அம்மாவின் அரவணைப்பில், செல்லப் பிள்ளையாக பெங்களூரில் இருக்கும் தாத்தாவின் வீட்டுக்கே திரும்பினார். 
சிறப்புக் கல்வி, கலை, இசை என்று இளம் வயதில் ஆகச் சிறந்த மாணவி, பிஷப் காட்டன், சர்ச் பார்க் என்று அவர் படித்த பள்ளிகளில் எல்லாம் அவரது அறிவுக் கூர்மையும், சிறப்பிடங்களும் இன்னும் நிலைத்திருக்கிறது. பள்ளிக் கல்வியை முடித்த பிறகு ஒரு வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. ஸ்டெல்லா மேரீசில் இன்னமும் அவருக்கான இருக்கை நிரப்பப்படாமலேயே இருக்கிறது. 
தெரிந்தோ தெரியாமலோ சின்னம்மா அம்புஜவல்லியோடு சென்னைக்கு வந்தார். தாயைப் பிரிந்து பரிதவித்த ஒரு சின்னஞ்சிறு பெண்ணாக கண்ணீரோடு தான் சென்னையில் காலம் கழித்தார். காலம் வெவ்வேறு கணக்குகளைப் போட்டபடி அவரை திரைத் துறைக்குள் தள்ளிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு வயதில் தந்தையை இழந்தார், பிறகு பிரியமான தாயோடு வாழும் நிலையை இழந்தவர்.
திரைத்துறையில் தனித்த ஒரு பெண்ணாக வெற்றி பெறுவது அத்தனை எளிதான நிகழ்வாக இல்லாத சூழலில் திரைத்துறையில் வெற்றியும் பெற்றுப் பின்னர் அரசியலுக்குள் நுழைந்து ஆணாதிக்க உலகில் அவர் இன்று அடைந்திருக்கும் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும், வாசிப்பும், தன்னம்பிக்கையும் இருக்கிறது. ஆகச் சிறந்த ஆண் ஆளுமைகளான  காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் என்ற வரிசையில் ஜெயலலிதா பிடித்த இடம் மகத்தானது.

-Arivu

Leave a Reply