குறைப்பிரசவம் — காரணம் கண்டுபிடிப்பு

குறைப்பிரசவம்: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

உலகிலேயே அதிக குறைப்பிரசவங்கள் இந்தியாவில்தான் நடக்கின்றன. இந்தியாவில் நிகழும் பிரசவங்களில் 35 சதவிகிதம் குறைப்பிரசவங்கள்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை ஐ.ஐ.டி.யின் பயோ சயின்ஸஸ் மற்றும் பயோ என்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அனிர்பன் பேனர்ஜி மற்றும் மும்பையின் ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ரிசர்ச் இன் ரிபுரடக்டிவ் ஹெல்த்’ நிறுவனத்தின் மருத்துவர் தீபக் மோடி ஆகியோர் அடங்கிய குழு, குறைப்பிரசவம் நடப்பதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த ஆராய்ச்சிக் குழு, குறைப்பிரசவத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதன் முடிவுகளை புகழ்பெற்ற பிஎல்ஒஎஸ் பேத்தோஜென் என்னும் ஆராய்ச்சிப் பத்திரிகையில், செப்டம்பர் 1ஆம்தேதியன்று வெளியிட்டுள்ளது. அந்த ஆராய்ச்சியில் ஜிபிஎஸ் என்னும் கிராம் பாஸிட்டிவ் க்ரூப்- பி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்னும் பாக்டீரியாதான் குறைப்பிரசவத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாவானது நச்சுத்தன்மைகொண்ட சவ்வுக் கொப்புளங்களை சிறிய பலூன்கள்போல உருவாக்குகிறது. இந்த சிறிய பலூன் போன்ற கொப்புளங்கள் கருவையும் தாய் செல்களையும் அழிக்கும்தன்மை கொண்டவை.

இந்த பாக்டீரியா பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படுகிறது. கர்ப்ப காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. கருவறையில் உருவாகும் கொப்புளங்களுக்கும் இந்த பாக்டீரியாக்களுக்கும் தொடர்பு இருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்தது. எனவே, நாங்கள் அதுகுறித்து ஆராய்வதில் ஆர்வம் செலுத்தினோம். இதுபோன்ற சவ்வு வீக்கத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்தபாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த பாக்டீரியாவானது இனப்பெருக்க உறுப்புக்குள் பரவி, இனப்பெருக்க பாதைகளுக்குள் பயணப்பட்டு, செல்களுக்குள் சிதைவை ஏற்படுத்தி குறைப்பிரசவம் ஏற்படுத்துகிறது. மேலும் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் இறப்பதற்கும் இந்த பாக்டீரியாவே காரணம்.

இந்த ஆராய்ச்சிக் குழுவானது ஸ்டெப்டோகாக்கஸ் பாக்டீரியா அடங்கிய மருந்தை 15 கர்ப்பிணி எலிகளுக்குச் செலுத்தி சோதனை மேற்கொண்டது. அந்த 15 எலிகளுக்குமே குறை மாதத்தில் பிரசவம் ஆனது. அதில் 40 சதவிகிதம் குட்டி எலிகள் இறந்தே பிறந்தன. அந்தக்குறைமாத எலிகள் யாவுமே அளவில் மிகச் சிறியதாகவும் ஆரோக்கியமில்லாமலும் இருந்தன.

எலிகளின் கர்ப்ப காலமான 21 நாட்களில் இரண்டு நாட்கள் முன்னதாகவே குட்டி எலிகள் பிறந்தன. இந்த இரண்டு நாட்கள் என்பது மனிதனோடு ஒப்பிடும்போது 2 மாதங்களுக்குச் சமமாகும். எனவே கருச்சிதைவு, குறைப்பிரசவம் போன்ற காரணங்களுக்கு இந்தபாக்டீரியாவே காரணம் என்று அந்த ஆரய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply