கண்ணாடிக் குஞ்சுகள்

மீன்களில் வித்தியாசமானது ஈல் என்ற விலாங்கு மீன். உடல் அமைப்பில் மட்டுமல்ல, வாழ்க்கை நடத்துவதிலும்கூட இது தனித்துவமானது. உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும். மற்ற மீன்களைப் போல செவுள்கள் மூலம் மட்டும் இவை சுவாசிப்பதில்லை.

உடல் முழுவதும் ஆக்ஸிஜனைச் சுவாசிக்கும் விதத்தில் இதன் உடல் அமைப்பு அமைந் துள்ளது. அதனால் தண்ணீரை விட்டு வெளியே வந்தாலும் பல மணிநேரம் ஈல்களால் உயிர் வாழ முடியும்.

எலெக்ட்ரிக் ஈல், மொரே ஈல், கார்டன் ஈல், அமெரிக்கன் ஈல் என்று சுமார் 800 வகை ஈல்கள் இருக்கின்றன. அமெரிக்கன் ஈல்களின் அதிசய வாழ்க்கையைப் பார்ப்போமா?

அட்லாண்டிக் பெருங்கடலில் உப்பு நிறைந்த சார்கோசா கடலில் இடப்பட்ட முட்டைகளில் இருந்து வெளியே வருகின்றன ஈல் குஞ்சுகள். ஒரு வருடத்தில் இந்தக் குஞ்சுகளின் உடல் கண்ணாடியைப் போல மாறிவிடும். அதாவது உடலுக்குள்ளே இருக்கும் முட்களைக்கூடப் பார்க்க முடியும்!

சார்கோசா கடலில் இருந்து அமெரிக்கக் கடற்பகுதியை நோக்கிப் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் நீந்த ஆரம்பிக்கின்றன இந்தக் கண்ணாடிக் குஞ்சுகள். ஒரு வருடத்தில் உடல் புதிய வடிவத்தை அடைகிறது. உருளையாகவும் பழுப்பு வண்ணமுமாக மாறும்.

கடற்கரையை ஒட்டியுள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நன்னீர் நிலைகளை நோக்கிக் கூட்டமாக இவை பயணிக்கும். ஆறு, ஏரியை அடைந்தவுடன் பயணத்தை நிறுத்தி விட்டு, வாழ ஆரம்பிக்கும். சிறிய மீன்கள், நத்தைகள், புழுக்கள், பூச்சிகள், தவளைகள், இறந்த உயிரினங்கள் ஆகியவற்றைத் தின்று வளர்கின்றன.

நன்னீர் நிலைகளில் ஆறு அங்குல நீளம் வளர்ந்த பிறகு பச்சையும் மஞ்சளும் கலந்த ‘மஞ்சள் ஈல்’ என்ற நிலையை இவை அடையும். பகல் முழுவதும் பாறைகள், தாவரங்கள், சகதிக்குள்ளேயே நிம்மதியாக ஓய்வெடுக்கின்றன. இரவு நேரங்களில் உணவு தேடிக் கிளம்பிவிடும்.

மிக மெதுவாகவே இவை வளர்கின்றன. ஐந்து முதல் 20 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்துவிடும். அப்போது பெண் ஈல்கள் ஐந்து அடி நீளமும் ஆண் ஈல்கள் இரண்டு அடி நீளமும் இருக்கும்.

இப்படி வளர்ந்து முட்டையிடும் பருவம் அடைந்த ஈல்களை ‘சில்வர் ஈல்கள்’ என்று அழைக்கிறார்கள். கூட்டமாகப் பெண் ஈல்கள் தாங்கள் பிறந்த சார்கோசா கடலை நோக்கி முட்டையிடக் கிளம்பிவிடுகின்றன. ஆண் ஈல்கள் அவற்றைப் பின்தொடர்ந்து செல்கின்றன.

இந்தக் காலத்தில் பெண் ஈல்கள் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை. நீண்ட பயணத்தில் பெரும்பாலான ஆண் ஈல்களும் பெண் ஈல்களும் எதிரிகளுக்கு இரையாகி விடுகின்றன. எஞ்சியுள்ள ஈல்கள் பல தடைகளைத் தாண்டி ஏழு மாதங்களில் சுமார் 6,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சார்கோசா கடலை வந்தடைகின்றன.

பெண் ஈல்கள் பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து முட்டைகளை இடுகின்றன. முட்டையிடும் பணி முடிந்தவுடன் சார்கோஸா கடலிலேயே இறந்தும் போய்விடுகின்றன. முட்டையில் இருந்து வரும் ஈல் குஞ்சுகள் பெற்றோர் இன்றித் தாமாகவே வளர்கின்றன. யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, தங்கள் பெற்றோரைப் போலவே அமெரிக்கக் கடற்பகுதியை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன.

கடல் உப்பு நீரில் பிறந்து, ஆறு, ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் வளர்ந்து, மீண்டும் கடலுக்கு வந்து முட்டையிட்டு, மடியும் ஈல்களின் வாழ்க்கையும் பயணமும் ஆச்சரியமானது இல்லையா?

Leave a Reply