உலகின் மிகப்பெரிய விமானம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹைப்ரிட் ஏர் வெஹிகல்ஸ் (HAV) எனும் நிறுவனம், தனது தயாரிப்பான ‘ஏர்லேண்டர் 10’ விமானத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்ட ஏர்லேண்டர் 10, உலகின் மிகப்பெரிய விமானமாகக் கருதப்படுகிறது.

விமானம், ஹெலிகாப்டர் மற்றும் காற்றை விட குறைவான எடை கொண்ட வான்களம் என மூன்றையும் கலந்து செய்த கலவையாக இது உள்ளதால், இதனை “ஹைப்ரிட் வெஹிக்கல்” என்கின்றனர்.

ராணுவ உபகரணங்களை மிகவும் தொலைவான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், கண்காணிப்புக்கும், ஆடம்பர பயணங்களுக்கும் ஏற்ற விமானமான ஏர்லாண்டர் 10, அதிகபட்சமாக 20,000 அடிகள் உயரத்திற்கு பறக்கவல்லது. போயிங் 747 விமானத்தைக் காட்டிலும், அறுபது அடிகள் நீளமாக இருந்தாலும், வேகத்தில் ஏர்லேண்டரால், அதன் அருகில் கூட நெருங்க முடியாது. ஒரு மணி நேரத்திற்கு 148 கி.மீ வேகத்தில்தான் ஏர்லேண்டரால் பறக்கமுடியும்.

மிகக் குறைவான உயரத்தில் பறப்பதால் ஜன்னல்கள் திறந்த நிலையில் கூட இருக்கலாம் எனவும், வேடிக்கை பார்த்தபடியே பயணம் செய்வதற்கு ஏர்லேண்டர் மிகவும் ஏற்ற விமானம் எனவும் ஹைப்ரிட் ஏர் வெஹிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள க்ரிஸ் டேனியல்ஸ் கூறியுள்ளார்.

ஹீலியம் எனப்படும் வாயுவைக் கொண்டு இயங்கும் இந்த விமானம், வானில் ஒரே இடத்தில், மூன்று வாரங்கள் வரை தங்கக்கூடியது. இது, புல்லட் கொண்டு தாக்கப்பட்டாலும், அதை தாங்கிக் கொள்ளும். சத்தமின்றி, மாசுபடுத்தாமல் பறக்கும் இவ்வகை விமானங்கள்தான் எதிர்கால பயணங்களுக்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. 35.6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஏர்லேண்டர், இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply