ஈட்டி மரம்

ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது‘ என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கிலத்தில் ரோஸ்‌வுட் என்று அழைக்கப்படுகிறது. அதிகம் மழைப் பொலிவு உள்ள ஈரப்பாங்கான பகுதி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் இம்மரம் அதிகம் வளர்கிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தக்காண பீடபூமி பகுதிகளில் அதிகம் உள்ளன. தமிழகத்தில் கோவை, ஆனைமலை, வெள்ளியங்கிரி மலை மற்றும் நீலகிரி மாவட்டங்‌களில் ஈட்டி மரங்கள் அதிகம் உள்ளன.

தமிழகத்தில் பரவலாக மலை மற்றும் வனப்பகுதியில் மட்டும் வளர்கிறது. இம்மரம் மிக உயரமாக வளரக்கூடியது. சுமார் 35 மீட்டருக்கு மேல் வளரும். நன்றாக வளர்ந்த மரத்தின் சுற்றளவு 6 மீட்டர் வரை இருக்கும்.

25 மீட்டர் உயரம் வளர 80 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மரமாக தோதகத்தி விளங்குகிறது. உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகள் முன்பாகவே இம்மரம்
இருந்துள்ளது என, புதைபொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சிந்து சமவெளி மற்றும் ஹராப்பா அகழ்வாராய்ச்சியின் போது வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. பழங்‌காலத்தில்
கடல் வாணிப் பொருளாக இம்மரம் இடம் பெற்றுள்ளது.

ஆங்‌கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் என்ற வணிக குழுவினர். 4.8 மீட்டர் நீளம் 2.4 மீட்டர் அகலம் கொண்ட ஈட்டி மரப் பலகையில் அழகிய வேலைப்பாடு உள்ள மேசை ஒன்று தயாரித்து, வெல்லிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்துள்ளனர். அந்த மேசை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இம்மரத்தின் சிவந்த நிறமும், உறுதித்தன்மையும் அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஆடம்பரமான வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க இம்மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டன.

அதனால், அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. 1963ல் வனச்சட்டத்தின் படி, ஈட்டி தேசிய மரமாக அறிவிக்கப்பட்டது. ஈட்டி, தேக்கு மரத்தை விட அதிகம் உறுதியானது என்பதால் இதன் விலை மதிப்பும் அதிகம். அதனால், விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட மேசை, நாற்காலிகள், கட்டில், பிரோ மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க இம்மரம் பயன்படுகிறது. இன்றைக்கு இதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து 30 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்வதில்லை.

ஆனால் மரப்பொருட்கள் மற்றும் பிளைவுட்டுகளாக தயாரிக்கப்பட்டு எற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், போதுமான அளவு எற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோதகத்தி மரத்தை 500 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்தில் மட்டுமே பயிரிட முடியும். குறைந்து பட்சம் 1000 மில்லி மீட்டர் மழை உள்ள இடங்களில் மட்டுமே இம்மரம் வளரும். வற்றாத ஆற்றங்கரை ஓரங்களில் நடலாம். தேக்கு மரக்காடுகள் ஊடே நடலாம். ஆரம்பத்தில் தோதகத்தி, தேக்கு மரத்தைவிட குறைவாக வளரும். நன்றாக வளர்ந்த பிறகு தேக்கை விட வேகமாக வளரும். ஈட்டி மரத்தை பிற மரங்களோடு சேர்த்து இரண்டு, மூன்று மரங்களை வளர்க்கலாம்.

Leave a Reply